தலையங்கம்

img

வரலாறு காணா வேலையின்மை

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற மகத்தான முழக்கத்துடன் 1980 நவம்பர் 3 அன்று லூதியானா நகரத்திலே உதய மான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தனது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறது. வேலையின்மை கொடுமைக்கு எதிராகவே பிறந்தது இந்த மாபெரும் இயக்கம். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிற, இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் இயக்கமாம் வாலிபர் சங்கம், எதிர்வரும் நவம்பர் 11 அன்று தில்லியில், தீவிரமடைந்து வரும் வேலை யின்மைக்கு எதிராக அகில இந்திய அளவிலான ஒரு மாநாட்டினை நடத்துகிறது. 

இந்திய இளைஞர்கள் ஓர் இருண்ட காலத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமை யிலான பாஜகவின்  ராஜ்ஜியத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக 90லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அத்தனை பேரும் வீதிக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி கரமான விபரங்கள் வெளியாகியுள்ளன.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான ஆய்வுமையத்தால் வெளி யிடப்பட்டுள்ள புதிய அறிக்கை மூலமாக இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலத்தில், ஏற்கெனவே உள்ள வேலைகளில் 90லட்சம் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள் ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மட்டு மல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றி லேயே முதல்முறையாக இப்போதுதான் இப்படி  நடந்திருக்கிறது என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா.  இந்த ஆய்வுக்காலத்தில் சுமார் 5 ஆண்டுகள் மோடியின் ஆட்சிக்காலம் என்பது குறிப்பிடத் தக்கது. புதிதாக வேலைவாய்ப்புகளை உரு வாக்காதது என்ற பிரச்சனை இப்போது பின்னுக் குப் போய்விட்டது; உள்ள வேலையையும் மிகப் பெரும் அளவிற்கு பறித்திருக்கிறார்கள் என்பது  இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு மிகப்பெரிய அடியாகும். 

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அறிக்கையை மறுத்து காவிக் கும்பல் சமூக ஊடகங்களில் தூற்றி எழுதக்கூடும். ஆனால் அவர்களது அரசாங்கத்தின் பொருளாதார கண் காணிப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ விபரங் களின்படியே, 2019 செப்டம்பர் 27 அன்று வேலை யின்மை என்பது 9.94சதவீதத்தை எட்டியிருக் கிறது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் உச்ச நிலையாகும். 2019 ஆகஸ்ட் இறுதிவாக்கில் 4.5 கோடிப் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இருண்ட காலத்திலிருந்து இந்திய இளைஞர்கள் மீண்டாக வேண்டும். ஒளிமய மான எதிர்காலம் இடதுசாரிகளிடமே என்பதை இன்னும் வலுவாக பறைசாற்றட்டும் வாலிபர் இயக்கம்.

;