தலையங்கம்

img

வீட்டுக்குள் இருப்போருக்கு வயிறும் இருக்கிறதே!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் செவ்வாயன்று இரவு 12 மணி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரத மர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்ட சமூக ஊர டங்கை விட இது கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், தொற்று பரவலை தடுக்க இந்த ஒரு வழிதான் உள்ளது என்றும் தெரி வித்துள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைதான் அதிக மாக இருந்ததே தவிர மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது அல்லது என்ன செய்யப் போகிறது என்பது குறித்த விளக்கம் அதிகம் இல்லை. குறிப்பாக உலகின் சின்னஞ்சிறு நாடுகள் கூட கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொள்ள  பல லட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.  இது எந்த வகையிலும் நிலைமையை சமாளிக்க போதுமானது அல்ல.

மறுபுறத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களையும், இயல்பு வாழ்க்கையையும் மட்டு மின்றி அவர்களது தொழில்களையும் முடக்கும் நிலையில் அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி என்பது குறித்து பிரதமர் கொஞ்சம் கூட கவ லைப்பட்டதாக தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பிரதமர் மோடிக்கு எழுதி யுள்ள கடிதத்தில் இதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த 21 நாட்களும் இந்த நாடு மூடப்பட்டி ருக்கும் காலத்தில் பெரும் பகுதி மக்கள் உயிரோடு வாழ்வதற்கான எந்த ஒரு அவசர உதவியையும் பிரதமர் அறிவிக்காதது குறித்து யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த 21 நாள் முடக்கம் அவர்களை என்ன கதிக்கு ஆளாக்கும் என்பது குறித்து பிரதமரின் கவனம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த நாட்டின் பெரு முதலாளிகளுக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 7.78 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு வரிச் சலுகையாக 1.76 லட்சம் கோடி அறிவித்துள்ள நிலையில், இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வெறும் 112 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதை யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார். முடங்கிக் கிடக்கிற மக்களின் நெஞ்சில் எழும் கேள்விகள்தான் யெச்சூரியின் கடிதத்தில் வெளிப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தநிலையில், கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்திவிட்டு தற்போது சிறப்பு கலால் வரியாக ரூ.8 உயர்த்துவதுதான் மக்களுக்கு அளிக்கும் நிவாரணமா? கொரோனா கொடு மையிலும் கூட இந்த நாட்டின் பிரதமர் கார்ப்ப ரேட்டுகளை பற்றி மட்டுமே கவலைப்படுவது பெரும் கவலையைத் தருகிறது.

;