தலையங்கம்

img

விதை... இனி..?

 விதைகளுக்கு சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சான்றிதழ் பெறாத விதைகளால் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விதைகளுக்கு சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்குவதன் மூலம் விளைச்சலை 25சதவீதம் அளவிற்கு உயர்த்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.  ஆனால் மத்திய அரசின் நோக்கம் விளைச்சலை பெருக்குவது அல்ல. மாறாக இந்திய விவசாயிகளின் பாரம்பரிய விதை உரிமையை பறித்து விதைச்சந்தையை முற்றிலுமாக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதே ஆகும்.  மோடி அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதே நடைமுறையாக உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் நலனுக்காக என்று கூறிக்கொண்டு அவர்கள் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்கள் நாட்டில் மதரீதியான பிளவை அதிகப்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவுமே கொண்டுவரப்பட்டன.  அதேபோல விளைச்சலை பெருக்குவதற்காக என்று கூறிக்கொண்டு விவசாயிகள் தங்களது விதை தேவைக்கு முற்றிலும் பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருப்பதற்கு வகை செய்யப்படுகிறது.  தற்போது விவசாயிகள் தங்களது விதை தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே தங்களது சொந்த விளைச்சலிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். 70சதவீதம் அளவுக்கு தனியார் விதை விற்பனையாளர்களையே நம்பியுள்ளனர். அந்த விதைகள் தரமற்றவை என்று கூறி அதை முறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்போவதாக கூறப்படுகிறது. சான்றிதழ் பெறாத விதைகளை பயன்படுத்தினால் தற்போது 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் என்றிருப்பதை அதிகபட்சம் ரூ.5லட்சம் வரை அபராதம் விதிக்க ஆலோசிக்கப்படுவதாகவும் மத்திய வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தனியார் விதை விற்பனையாளர்களுக்கு என்று  கூறப்பட்டாலும் நாளடைவில் இதைக் கூறி தங்களது சொந்த விளைச்சலில் இருந்து விதை  எடுத்து வைத்து பயன்படுத்தும் விவசாயிகளை யும் இந்த வரம்புக்குள் கொண்டுவரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளை இந்திய மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக திணித்து வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்க்கையை இழந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மரபணு மாற்ற விதைகளை எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் மரபணு மாற்ற விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி யிருந்தார். அதன் ஒரு பகுதியாகவே புதிய சட்டத்தை கொண்டுவர முயல்கின்றனர். இது விதை தானியத்தை அவித்து அழிப்பது போன்றது ஆகும்.

;