தலையங்கம்

img

நம்பிக்கையா? ஆதாரமா?

ராமர் பிறந்த  அடையாளமாகவும் இந்துக்கள் வழிபடும் இடமாகவும்  அயோத்தி ‘ராம ஜென்ம பூமி’ திகழ்வதாகவும் எனவே ராமர் பிறந்ததற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆதாரத்தை எப்படிக் காட்ட முடியும் என்றும் அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான ராம் லல்லா விராஜ்மான் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.  அயோத்தியில்தான்  ராமர் பிறந்தார் என்பதற்கு பக்தர்களின் நம்பிக் கையே ஆதாரம் என்றும் அந்த அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே. பரா சரன் ஆபத்தான வாதத்தை முன்வைத்துள்ளார்.  

இன்னொரு மனுதாரரான நிர்மோகி அகாரா தரப்பு வழக்குரைஞரோ, அயோத்தியில் ‘சர்ச்சைக்குரிய’ இடத்தை தாங்கள்தான் நிர்வாகம்செய்து வருவதாகவும் கோயிலின் கருவறை, மற்றும் அதைச் சுற்றியுள்ள  பகுதியை  தாங்கள் 100 ஆண்டுகளாகக் கைவசம் வைத்திருப்பதாகவும் கூறி அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என்கிறார். அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று தலைமை நீதிபதி கேட்டபோது, 1982ஆம் ஆண்டு அந்த ஆதாரம் திருடுபோய் விட்டது என மழுப்பி யுள்ளார். அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலை மையிலான அமர்வு நாள்தோறும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. முதல் நாள் விசாரணையின் போது இப்படி அப்பட்டமாக புளுகு மூட்டைகளை அவர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள் என்பது நம்பிக்கை அடிப்ப டையில்  தீர்ப்பு சொல்வதில்லை. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில்தான் தீர்ப்பளிக் கின்றன. பக்தர்களின் நம்பிக்கையை மடை மாற்றி அந்த இடத்தை அபகரிக்க நிர்மோகி அகாரா அமைப்பும், ராம் லல்லா  விராஜ்மான் அமைப்பும் சதி செய்கின்றன. இதற்கு நீதிமன்றம் ஒருபோதும் செவிசாய்க்கக்கூடாது. வரலாற்று ஆவணங்கள், வருவாய்த் துறை ஆணவங்கள் அடிப்படையில்தான் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று முடிவெடுக்க வேண்டும். 

நம்பிக்கை அடிப்படையில்  தீர்ப்பு அமையுமேயானால் அது நாட்டின் மத நல்லிணக்க சூழலை  கடுமையாக பாதிக்கும். “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம்’’ என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம் ஆகியவை அறிவித்துள்ளன. இதற்கு நீதிமன்றம் தடையாக இருக்க முடியாது என்றும் அந்த அமைப்புகளின் தலை வர்கள் வெறித்தனமாக கூச்சல் போட்டு வருகிறார்கள்.  மேலும் இந்த விவகாரம் அயோத்தியோடு நிற்காது. காசி, ஆக்ரா, மதுரா என நீளும். எனவே அயோத்தி வழக்கில் நம்பிக்கை அடிப்படையிலான வாதங்களை ஆரம்ப நிலையிலேயே நீதிமன்றம் நிராகரிக்கவேண்டும்.

;