தலையங்கம்

img

பொறுப்பை நிறைவேற்றாத முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு

கனமழை மற்றும் நிலச்சரிவால் நீலகிரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. குறிப்பாக பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளையும், உடை மைகளையும் இழந்து தவிக்கின்றனர். மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நிவார ணப் பணிகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும்.  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். நிவாரணப் பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் மாநில முதல்வர் எடப்பாடி பழனி சாமி நீலகிரி மாவட்டத்தை எட்டிக் கூட பார்க்க வில்லை. இதுகுறித்து கேட்டால் எதிர்க்கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடுவதற்காக அங்கு சென்று வந்ததாக கூறியுள்ளார். ஒரு மாநில முதல்வர் இப்படி பொறுப்பின்றி நடந்து கொள்வ தும், பேசுவதும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகு சேர்ப்பதாக இல்லை. 

அத்திவரதர் தரிசனத்திற்கு செல்கிறார். வண்ட லூர் மிருகக் காட்சி சாலைக்கு விலங்குகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுகிறார். மற்றபடி நீலகிரிக்கு செல்ல முடியாத அளவிற்கு அவர் பணி எதையும் மேற்கொண்டிருப்பதாக தெரிய வில்லை. கர்நாடகத்தில் பெய்த கனமழையால், அங்கு நீரைத் தேக்க வழியின்றி வழிந்து வந்த நீரால் நிரம்பிய மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை நிரம்பியதற்கு கூட ஏழுமலையானின் கருணையே காரணம் என்று கூறுகிறார் முதல்வர். மழை வேண்டி யாகம் நடத்துவதும், மழைக்கு கடவுளை கை காட்டுவ தும், ஒரு மதச்சார்பற்ற அரசின் தலைவர் செய்கிற வேலை அல்ல. தன்னுடைய தனிப்பட்ட நம்பிக் கையையும், அரசு பணிகளையும் சேர்த்துப் போட்டு குழப்புவது சரியல்ல.  ஆனால் ஒரு முதல்வர் என்கிற முறையில் தாம் ஆற்ற வேண்டிய பணிகளை அவர் செய்ய மறுக்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தம்முடைய அரசு அனைத்து உதவிகளை யும் செய்து முடித்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் முதல்வர். 

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்ன மும் கூட முழுமையாக மீளவில்லை. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலில் சென்று நீர் கலக்காமல் முழுமையாக நீரை தேக்கி வைக்கவும், பாசனத்திற்கு பயன்படுத்த வும் அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். கடந்தாண்டு சேதமடைந்த முக்கொம்பு அணை கூட முழுமையாக சீர் செய்யப்படவில்லை.  மத்திய பாஜக அரசின் தயவில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கும் மாநில அதிமுக அரசு மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து கவலை கொள்ளவில்லை. மாநில நலனில் அக்கறை காட்டவில்லை. மாறாக வெற்று வார்த்தைகளை உதிர்த்து ஜம்பம் அடிப்பதிலேயே சுகம் காண்கின்றனர் என்பதுதான் உண்மை.

;