தலையங்கம்

img

ஒரே நாடு, ஒரே ரேசன் பாதகமே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனை வருக்குமான பொது விநியோகத் திட்டம் நடை முறையில் இருக்கிறது. யாருக்கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள். யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவு செய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள். இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்படவில்லை என்பதுதான். 2013 உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேருக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம், மானிய விலை யில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும். அரசியும் கோதுமை யும் மத்திய அரசு தன் உணவுத் தொகுப்பிலி ருந்து கொடுத்துவிடும். யார் யார் பயனாளிகள் எனக் கண்டறிந்து இதனை மக்களுக்கு விநியோ கிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. 

ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே எல்லோ ருக்கும் ரேஷன் பொருட்களை வழங்கிவந்த நிலையில், 50 - 75 சதவீதம் பேருக்கே உணவு தானி யத்தை வழங்கும் இந்தத் திட்டம் முரண்பாடாக அமைகிறது. தமிழக அரசு எல்லோருக்கும் உணவு தானி யங்களைக் கொடுப்பதால், மத்தியத் தொகுப்பிலி ருந்து வரும் அரிசி போதுமானதாக இருப்ப தில்லை.ஆகவே வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அதனை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகிறது.

ஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணையும்போது பல சிக்கல்கள் வரும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதற்கான எந்த திட்டத்தையும் தமிழக அரசு வெளியிடாமலே, மோடியின் திட்டம் நல்லது என்கிறது. இதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசுகிற நிபுணர்கள், கடுமையான பிரச்சனைகளை முன்வைக்கிகிறார்கள். உணவுப் பொருட்க ளைக் கொடுக்கும்போது யாருக்கு அவற்றைக் கொடுப்பது என அடையாளம் காண்பது சிக்க லான வேலை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள வர்களுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு வறுமைக் கோட்டை எப்படி கணக்கிடுவது என்பதே தெரியாது.  அதேபோல வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கும் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தில் உணவுப்பொருள் வழங்க முடியுமே என்றும் மோடி ஆதரவாளர்கள் வாதிடு கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப்பாதுகாப்பு அளிப்பது என்பது மிக முக்கியமான விஷயம். அதேவேளையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க அதிமுக ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகி றார்கள் என்பதுதான் கேள்வி.

;