செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தலையங்கம்

img

ஒற்றறியும் மென்பொருளைப் பயன்படுத்துவது யார்?

இஸ்ரேலி பெகாசஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, ஒற்றறியும் மென்பொருள் மூலமாக, இந்தியாவில், வாட்சப் கணக்குகள் வைத்திருந்த சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் களவாடப்பட்டிருக்கும் செய்தி சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதும், கண்டனத்திற்குரியதுமாகும்.  இவ்வாறு தனிநபர்களின் அந்தரங்கங்கள் களவாடப்பட்டிருப்பது எப்படி என்பதை விளக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். இது தொடர்பாக எவ்விதமான விளக்கத்தையும் அரசாங்கம் அளித்திட முன்வராத அதே சமயத்தில், இத்தகைய களவாடல் நிகழ்வுகளுக்கு அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  இவ்வாறு களவாடப்பட்ட செய்தி வெளிவந்தபோது, அரசாங்கமானது இது  தொடர்பாக வாட்சப் நிறுவனம் அரசாங்கத்தின் நிறுவனங்கள் எதற்கும்  எவ்விதமான தகவலும் தரவில்லை என்று கூறியிருந்தது. எனினும் வாட்சப் நிறுவனம், உண்மையில், இந்தியாவில் சிலரது தரவுகள் களவாடப்படுவதாக உரிய ஆதாரங்களுடன் மத்திய அரசாங்கத்தை உஷார்ப்படுத்தி இருந்தது. இவ்வாறு அது, மே மாதத்திலும் அதன் பின்னர் செப்டம்பரிலும் எச்சரித்திருந்தது. மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, வாட்சப் நிறுவனம் 2019 மே மாதத்தில் தாக்கல் செய்திருந்த குறிப்புகளையும், செப்டம்பரில் அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தையும்  இணைத்திருக்கிறது.

பின்னர், அரசாங்கம், தான் செப்டம்பரில் பெற்ற தகவலின்படி பெகாசஸ் ஒற்றறியும் நிறுவனம் 121 இந்தியர்களைக் குறிவைத்திருந்ததாகக்கூறியிருப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது. ஆனாலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கூற்றின்படி அந்தக் கடிதம் ‘மிகவும் தெளிவற்று’ இருந்ததாம். வாட்சப் நிறுவனம் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள விவரங்கள், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும்  விமர்சிக்கின்ற நாட்டில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் ஆவர். எனவேதான் அரசாங்கம்  இவை குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போன்று போலித்தனமான முறையில் நொண்டிச்சமாதானங்கள் கூறிக்கொண்டிருக்கிறது.   இவ்வாறு அரசாங்கம் கூறுவதிலிருந்தே, இஸ்ரேலின் ஒற்றறியும் மென்பொருளைப் பயன்படுத்தி, தங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் தகவல்களைக் களவாடியதில் அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.  பீமா-கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பலரது வாட்சப் தகவல்கள்தான் இவ்வாறு களவாடப்பட்டிருக்கின்றன. இவர்களைத்தான் அரசின் உளவு ஸ்தாபனங்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கிடையேயான தொடர்பு மிகவும் தெளிவானவையாகும்.

இஸ்ரேலி பெகாசஸ் ஒற்றறியும் நிறுவனம், தாங்கள் ஒற்றறியும் மென்பொருள் தொழில்நுட்பத்தை அரசாங்கங்கள் மற்றும் அதன் ஏஜன்சிகளுக்கு மட்டுமே அளித்து வருகிறோம் என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  மேலும் இதன் விலை மிகவும் அதீதமான ஒன்று. எனவே இதனைத் தனியார் நிறுவனம் எதுவும் வாங்குவது என்பது இயலாத ஒன்றாகும். இத்தகு இழிந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்களை அரசாங்க நிறுவனங்கள் களவாடியிருந்தால், அவ்வாறு களவாடிய நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு, சாமானிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் அந்தரங்கங்களைப் பாதுபாத்திட ஓர் ஒருங்கிணைந்த தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

(நவம்பர் 7, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

 

 

 

 

;