தலையங்கம்

img

2008-ஐ விட கடுமையான நெருக்கடியில் இந்தியா

ரயில்வே தனியார் மயம், பாரத் பெட்ரோலியம் தனியார்மயம் என இந்திய மக்கள் சற்றும்  எதிர்பாராத மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அதிவேகமாகவும் கண்மூடித்தனமாகவும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் மோடி அரசு செல்லத் துவங்கியிருக்கிறது. இந்திய தேசத்தின் பொரு ளாதாரம் மிக வேகமாக தலைகுப்புறக் கவிழ்ந்து மண்ணை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதை தாங்கிப் பிடிக்கத் திராணியற்ற மோடி அரசு,  சற்றும் கவலைகொள்ளாமல் தனியார் கார்ப்பரேட் சேவகத்தில் கண்துஞ்சாமல் ஈடுபட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சனை, பொருளாதார மந்தநிலை என்பதை நோக்கி லேசாக அல்ல, மிக வேகமாக நகர்ந்திருக்கிறது. இதை 2019 ஆகஸ்ட் மாதத்தின் ஒட்டுமொத்த  பொருளாதார நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவ தாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நடந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி காலத்தில் இருந்த சூழலைவிட மிக மோசமான சூழலை பிரதிபலிக்கிறது என்று இந்தியப் பொருளாதாரத்தின் மாதாந்திர நடவடிக்கைகளை ஆய்வுசெய்யும் ‘நோமுரா’ எனும் சந்தை ஆராய்ச்சி முகமை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்த நிலவரத்தின்படி கணக்கிடும்போது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சி அடையும்; இந்த நிதியாண்டு முடியும்போது 6 சதவீதத்தை எட்டுவது கூட கடினமாகும் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. 

ரயில் சரக்கு போக்குவரத்து, கார்கள் மற்றும்  இருசக்கர வாகனங்கள் விற்பனை, நடுத்தர மற்றும் கனகர வணிக வாகனங்கள் விற்பனை, எண்ணெய் அல்லாத மற்றும் தங்கம் அல்லாத பொருட்களின் இறக்குமதி - போன்றவைதான் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையை தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகள் என்றும் இந்தக் காரணிகள் கடந்த இரண்டு மாத காலமாக மிகக் கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன என்றும் பிஸினஸ் ஸ்டாண்டர்டு இதழுக்கு பேட்டி அளித்துள்ள பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான சோனால் வர்மா கூறியிருக்கிறார். 

நன்றாக கவனியுங்கள், இந்தியப் பொருளா தாரம் மோடி ஆட்சியின்கீழ் அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்டது என்று ஆதாரப்பூர்வமாக கூறிக் கொண்டிருப்பது  இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, முதலாளித்துவ பொரு ளாதார வல்லுநர்களும்தான். இதற்கு தீர்வு என்ன என்பதில் மோடி அரசைத் தவிர எல்லோருமே இப்போது ஒரே குரலை எழுப்புகிறார்கள்; உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் கைகளில் பணம் இல்லை; வாங்கும் சக்தி இல்லை என்பதுதான் அது. வாங்கும் சக்தியை உருவாக்க வேண்டுமானால் பொது முதலீடு உடனடியாக பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் மோடி அரசு எதிர் திசையில் பயணிக்கிறது. பொதுச் சொத்துக்களை முன்னிலும் வேகமாக அழிக்கிறது. இது தேசத்தின் அழிவாக மாறும். அதை தடுத்துநிறுத்துவதே தேசபக்தி.

;