தலையங்கம்

img

நீதி காப்பாற்றப்படுமா?

நீதியே நீயும் இங்கே இருக்கின்றாயா? இல்லை நீயும் அந்த கொலைக்களத்திலே மாண்டு விட்டாயா? என்கிற பாடல் வரிதான் உடு மலைப் பேட்டை சங்கரின் கொலை வழக்கு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை பற்றிச் சொல்லத் தோன்றுகிறது. 

நான்காண்டுகளுக்கு முன்னர் பட்டப் பகலில் பல பேர் பார்த்திருக்க பேருந்து நிலைய வளாகத்தில் உடுமலை சங்கர், கௌசல்யா இளம் தம்பதியர் ஒரு கும்பலால் கொடும் தாக்கு தலுக்குள்ளாயினர். சங்கர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கௌசல்யா தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

இந்த வழக்கில் கௌசல்யாவின் தாய், தந்தை யர், உறவினர்கள், மற்றவர்கள் உள்பட 11 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு திருப்பூர் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று வழங் கப்பட்ட தீர்ப்பு நியாய உணர்வு கொண்ட அனை வரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.  

அந்த தீர்ப்பில் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தொடர்புடைய ஆதாரங்கள் போது மானதாக இல்லை; சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசு தரப்பை குறை கூறியுள்ளது. இத்தகைய நிலைமைக்கு அரசு தரப்பு வழக்கறி ஞர்கள் மற்றும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.

ஓர் இளம் பெண் தனது வாழ்க்கை துணை வரை தேர்ந்தெடுப்பதற்கு உரிய வாய்ப்பை, சட்ட பாதுகாப்பை செய்து கொடுப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்துவதே இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் தன்னுடைய கடமையை தமிழக காவல்துறை நிறைவேற்றுவதில்லை. அதனாலேயே தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த கொரோனா காலத்திலும் கூட அதன் கோர முகம் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

உடுமலை சங்கர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டதற்கு கௌசல்யாவின் தந்தையார் சின்னசாமிதான் காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றால் இந்த கொலைக்கு யார் தான் காரணம்? 

இந்த தீர்ப்பு தொடர்பாக கௌசல்யா நான் உயிருடன் இருக்கும்வரை நீதியை பெறாமல் ஓய்ந்து போகமாட்டேன் என்று கூறியிருக்கி றார். தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ் இந்த தீர்ப்பு திருப்தியாக இல்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். அந்த மேல் முறையீட்டிலாவது தகுந்த சான்றுக ளையும், ஆதாரங்களையும் சமர்ப்பித்து குற்ற வாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென்பதே நியாயம் வேண்டுவோ ரின் எதிர்பார்ப்பாகும். தமிழக அரசு இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தி கௌசல்யா தரப்பு வழக்கறிஞரையும் இணைத்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் நீதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;