தலையங்கம்

img

தேர்வு முறையை மாற்றினால் மட்டும் போதாது

 தமிழகத்தின் வியாபம் ஊழல் போல டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன.  இந்த நிலையில் முறைகேடுகளை களைய தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் தலைமையில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு ஒரு தேர்வு என்பதற்கு பதிலாக முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு நேரத்தில் மாற்றம், விடைத்தாளில் மாற்றம், விடைத்தாள்களை கொண்டுவர கண்காணிப்பு கேமிரா மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்று ஆறு முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வாணையத்திற்கும் நேர்மையான முறையில் தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் தேர்வர்களுக்கும் இடையில் பிணைப்பை உறுதிசெய்ய இந்த மாற்றங்கள் கொண்டுவரப் படுவதாக கூறப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி மீதான நம்பகத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்பதையே அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடுகள் வெளிப்படுத்துகின்றன. வேலையின்மை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வரும் பின்னணியில் அரசுப் பணிகளுக்கு செல்ல  வேண்டிய கட்டாய சூழலில் இளைய தலைமுறை தள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நேர்மை யாக தேர்வு எழுதுபவர்கள் வஞ்சிக்கப்படும் சூழலே உள்ளது. தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவ தால் மட்டும் முறைகேட்டை தடுத்துவிட முடி யாது. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப் பினர்கள் நியமனத்தின்போது வெளிப்படைத் தன்மையும் நேர்மையானவர்களை நியமிப்ப தையும் உறுதிப்படுத்த வேண்டும்.  இப்போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் இடைத்தரகர்கள் மற்றும் கீழ்நிலை அளவிலான அலுவலர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதியதாக கண்டறியப்பட்டவர்கள் மட்டுமே. உயர்மட்ட அளவிலான வலைப்பின்னல் இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் விசாரணை அதை நோக்கி செல்வதாக தெரியவில்லை. சிலரை தப்பவிட முயற்சி நடப்பதாகவே தெரிகிறது. எனவேதான் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப் பின் கீழ் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலு வடைந்துள்ளது. தேர்வு முறையை மாற்றினால் மட்டும் போதாது. டிஎன்பிஎஸ்சி அமைப்பு முறையையும் நேர்மையானதாக மாற்றுவதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும்.

;