தலையங்கம்

img

திரிபுரா பாஜக அரசின் அட்டூழியம்

திரிபுராவில் அராஜகமான முறையில் ஆட்சியை கைப்பற்றியது முதல் பாரதிய ஜனதா கட்சி, அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், அதன் தலைமையிலான இடது முன்னம்ணி மீதும் கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கட்சியின் செயல்பாடுகளை, இடது முன்னணியின் இயக்கங்களை தடுத்து நிறுத்திவிடலாம் என்ற பகல் கனவுடன் தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாஜக மாநில அரசு, சில நாட்களுக்கு முன்பு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாதல் சவுத்ரியை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

பாதல் சவுத்ரி, இடது முன்னணி அரசில் பொதுப்பணித் துறைஅமைச்சராக திறம்பட செயலாற்றியவர். கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னராக பணியாற்றி வருகிறார். அவர், அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகளில் ஊழல் நடந்ததாக பொய்க் குற்றச்சாட்டுகளை புனைந்து, அவரை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது பாஜக அரசு. அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்பதுதான் முக்கிய மானது. பாதல் சவுத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கேயே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல்நிலையத்தில் ‘லாக் - அப்’பில் அடைத்து வைத்துள்ளனர். சில நிமி டங்களிலேயே பாதல் சவுத்ரிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை பரிசோதித்த அரசு மருத்து வர், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லு மாறு அறிவுறுத்தியதன் பேரில் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதல் சவுத்ரி மீதான பொய் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது திரிபுரா உயர்நீதிமன்றம், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் ரிசர்வ் செய்து வைத்திருக்கும் நிலையில்தான் மாநில பாஜக அரசின் காவல் துறை இந்த அராஜகத்தை மேற்கொண்டிருக்கிறது.

பாதல் சவுத்ரி, நீரவ் மோடி அல்ல. பாதல் சவுத்ரி விஜய் மல்லையா அல்ல. பாதல் சவுத்ரி, பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடிய மதவெறி பிடித்த, பாலியல் வக்கிரங்கள் கொண்ட கொடிய குற்றவாளிகளை போன்றவரும் அல்ல. தோழர் பாதல் சவுத்ரி 8 முறை திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினராக, அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் நேசத்தையும் பெற்ற மாபெரும் தலைவர். திரிபுரா வில் இடது முன்னணி அரசு நிகழ்த்திக் காட்டிய மகத்தான சாதனைகளில் இவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.

திரிபுரா பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை அம்மாநில மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், திரிபுரா மக்களுக்கு இடது முன்னணி ஜனநாய கத்தையும், நியாயத்தையும், நீதியையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.

;