தலையங்கம்

img

மோடியின் வாய்ப்பந்தலை கிழித்தெறியும் நிர்மலா

மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின்20 லட்சம் கோடி அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாட்களாக பொழிப்புரை வாசித்துக் கொண்டிருக்கிறார். 

மோடி தன் உரையில், இனி அடுத்தவரைநம்பி பயனில்லை. சுயசார்பு பொருளாதாரம்தான் ஒரே வழி என்று வார்த்தைகளால் பந்தலிட்டார்.கொரோனா இவர்களுக்கு புதிய ஞானோதயத்தைஏற்படுத்தியுள்ளது போலும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மோடியின் வார்த்தைகளை கிழித்துதொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்.

அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், தனியாருக்கும் தாரை வார்ப்பதன் மூலம்சுயசார்பை எட்டிவிட முடியும் என்ற புதிய கண்டுபிடிப்பை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் தன்னுடைய நான்காவது நாள் அறிவிப்புகளில் தனியாருக்கு தாராளஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மின் துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் ஒப்படைப்பது, இதன் முதல் கட்டமாக யூனியன்
பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியாருக்கு தருவது என அறிவித்துள்ளார். 

நிலக்கரி சுரங்கங்களில் தனியார் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதேபோல கனிம வளங்களும் தனியாருக்கு தரப்படுகின்றன. இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்களை தங்குதடையின்றி தனியார் முதலாளிகள் சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள வான் பிராந்தியத்தில் 60 சதவிகித பரப்பு பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் இதை பூர்த்தி செய்ய 6 விமான நிலையங்களை தனியாருக்கு தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விமானங்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என அனைத்தின் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு தனியார்களின் மேய்ச்சல் காடாக விமானப் போக்குவரத்துத் துறை மாற்றப்படவுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர தனியார் விமான நிறுவனங்கள் தயங்கிய நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இனி அதெல்லாம் நடக்காது. ராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தவும், விண்வெளி ஆய்விலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குகதவு திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி இஸ்ரோ நிறுவனமும் பங்குச்சந்தை வளையத்திற்குள் வந்துவிடும். இதன் பங்குகளை அனைத்துஇந்தியர்களும் வாங்க முடியும் என நிர்மலா சீதாராமன் சிரிக்காமல் கூறுவது உச்சக்கட்ட கொடூரநகைச்சுவையாகும்.

மொத்தத்தில் கொரோனாவின் பிடியில் இந்திய மக்களை சிக்கவைத்துவிட்டு அனைத்துதுறைகளையும் தனியாருக்கு கொடுத்துவிட மோடிஅரசு முடிவு செய்துவிட்டது. கடைசியில் அரசின்கையில் என்ன மிஞ்சியிருக்கப் போகிறது என்பது தான் மிகப் பெரிய கேள்விக்குறி.

;