தலையங்கம்

img

காவல்துறையின் கொடிய நடைமுறை

தமிழக காவல்துறையினர் சமீப நாட்களில் தாங்களே நீதித்துறையின் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் கை, கால் எலும்பு களை முறித்து வருகின்றனர். இவ்வாறு கை,கால் முறிக்கப்படுபவர்களின் புகைப்படங்களை காவல் துறையினரே ஊடகங்களுக்கு வெளியிட்டு தங்களது ‘பெருமையை’ பறைசாற்றுகின்றனர்.  காவல் நிலையத்தில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்து இவர்களுக்கு காயம் பட்டு விட்ட தாக அவர்களே கூறுகின்றனர். கை மற்றும் கால்களில் மாவு கட்டுப்போட்டு போஸ் கொடுக்க வைக்கின்றனர். 

மாநில அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சில காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் இந்த கொடூரமான உடனடி தண்டனையை நியாயப்படுத்தி பேசவும் துணிந்துள் ளனர். நீதிமன்றத்திற்கு செல்லும் போது விசார ணை நீண்ட காலம் நடைபெறுவதாகவும், சிலர் தண்டனையிலிருந்து தப்பி விடுவதாக வும், எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்க ளின் கை, கால்களை முறிப்பது சரியான நட வடிக்கைதான் என்று கூறத் தலைப்பட்டுள்ளனர்.  இந்தச் செயலை அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் கண்டித்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புவதாக அந்த அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்படுபவர்கள் மட்டும்தான் வழுக்கி விழுந்து கை, கால்களை முறித்துக் கொள்வார்களா? அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறையினர் யாரும் கழிவறைப் பக்கமே செல்வதில்லையா? 

சட்டத்திற்குப் புறம்பான ஒரு காரியத்தில் ஈடு பட்டு அதை நியாயப்படுத்துவது பல ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். ஏற்கெனவே லாக்கப் சாவுகள், என்கவுண்ட்டர் கொலைகள் பெரும் சந்தேகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத் துவதாக உள்ளன. இந்த நிலையில், எவ்வித விசாரணையுமில்லாமல் கைது செய்யப்பட்ட வர்களை தாக்குவது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.  காவல்துறையினரால் கைது செய்யப்படு பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. நீதிமன்றம்தான் இதுகுறித்து முடிவு செய்ய  முடியும். அதிலும் கூட பல்வேறு மேல்முறையீடு களுக்கு வாய்ப்பு உள்ளது. காவல்துறையில் நில வும் லஞ்ச நடைமுறையும், அதிகார வர்க்கத்தின் தலையீடும் எல்லோரும் அறிந்த ஒன்றே. 

இந்தநிலையில், எந்த விசாரணையுமில்லா மல் காவல்துறையினரே மறைமுகமாக தண்டனை கொடுக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. தமிழக காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிப்பதோடு இந்த நடைமுறை தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  நீதித்துறையும் இதில் பொருத்தமான முறை யில் தலையீடு செய்வது அவசியம். குற்றமிழைத்த வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் காவல்துறையினரின் கையில் சிக்குபவர்க ளெல்லாம் கட்டுப்போடும் நிலைக்கு ஆளாவது குற்றங்களை குறைக்க உதவாது.

;