தலையங்கம்

img

நிராகரிப்போம்...!

இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார்செய்ய வேண்டும். அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும். அப்போது அந்த பகுதி மக்க ளிடம் கருத்துக் கேட்கப்படும். அவர்களின் கருத் துக்களுக்கு மதிப்பளிக்கப்படும்.  சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கப்படும். ஆபத்து ஏற்படும் எனில் அனுமதி மறுக்கப்படும். இதுதான் சட்ட நடைமுறை.

ஆனால் தற்போது மோடி அரசு  “புதிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை - 2020” என்ற ஒன்றை முன்வைத்திருக்கிறது. அதில் இனி வரும் திட்டங்களுக்கு மட்டுமல்ல, ஏற்கெ னவே ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களின் விதிமுறை மீறல்களுக்குச் சட்ட அங்கீகாரம் தரும் வகையில்  மாற்றப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் விதி மீறல்களையே விதியாக மாற்றியிருக்கிறது. 

புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுப் படி எந்த ஒரு திட்டத்தையும் தேசிய நலன் அல்லது தேசிய முக்கியத்துவம் என்று குறிப்பிட்டு விட்டால் எந்த தரவும் பொதுவெளிக்கு வராது என்கிறது. இது பேராபத்தை உருவாக்கும். தற்போது கூட சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்பதால் இதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனத் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. இன்னும் வரைவு  நிறைவேற்றப்பட வில்லை. அதற்கு முன்பே இந்த வாதம் என்றால் என்ன நோக்கத்திற்காக இந்த வரைவு  என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் படி ஏ வகை திட்டங்களுக்கு மத்திய அரசும், பி வகை திட்டங்களுக்கு மாநில அரசும் சூழல் அனு மதி வழங்கும்.  ஆனால் பி வகை திட்டங்களில் இருந்த பலவற்றை பிரித்து பி2 திட்டம் என மாற்றிருக்கிறது. அதாவது  பி2 திட்டங்களுக்கு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசிய மில்லை. அதேபோல்  50 ஆயிரம் சதுர அடி வரையி லான கட்டுமானங்களுக்கு உள்ளூர் நிர்வாக அனுமதி தேவையில்லை எனவும் மாற்றியி ருக்கிறது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிக்குமாம். ஆக கூட்டாட்சி தத்துவத்தையும் இதன் மூலம் சவக்குழிக்குள் தள்ளியிருக்கிறது. 

புதிய வரைவின் படி சூழல் பாதிப்பு குறித்து யாரும் எளிதாக நீதிமன்றத்தைக்கூட நாட முடி யாது. தவறுக்கு உடந்தையாக இருப்பவர்களே தவறு செய்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தை நாடி னால்தான் உண்டு. இந்த வரைவு நிறைவேற்றப் பட்டால் இந்தியாவின் சுற்றுச்சூழல் சீர்குலைந்து எதிர்காலம் கேள்விக்குறியாகும். குறிப்பாக காப்பன், சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்களால் தமிழகம் அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளப்படும். இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் எழுப்புவோம்!

;