தலையங்கம்

img

மழையினால் மட்டும் நிகழ்ந்ததல்ல...

மேட்டுப்பாளையம் நடூரில் ஒரு தனிநபரின் வீட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரி ழந்தது நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இது மழையினால் மட்டும் நிகழ்ந்ததல்ல.   அந்த சுற்றுச்சுவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த வழியே வரக்கூடாது என்பதற்காக ஒரு தனிப்பட்ட சாதி ஆதிக்க நபரால் கட்டப்பட்டது. அந்தச் சுவரை இடித்து வழி ஏற்படுத்தித் தர வேண்டுமென்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தியும் அரசு நிர்வா கம் சரியான நடவடிக்கை எடுக்காததே இந்த உயிரிழப்புக்கு முக்கியக் காரணம். 

ஒரு வீட்டின் சுற்றுச்சுவரின் உயரம் 25 அடி என்பது முந்தைய ராஜா காலத்து கோட்டைச் சுவர்களைப் போன்றதாகவே இருக்கும். அதைக் கட்டுவதற்கு ஒரு ஜனநாயக நாட்டின் விதிமுறைகள் இதை எப்படி அனுமதித்தன? அதனைத்தடுக்க அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அதை  எதிர்த்து போராட் டம் நடத்திய பின்பும் இடிக்காதது ஏன்?  

சட்டப்படியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்திருந்தால் இத்தனை  உயிரிழப்பு கள் ஏற்பட்டிருக்காது. ஆனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போன்றே அரசுத்துறைகளின் செயல்பாடுகள் அமைந்திருந்ததால் மூன்று குழந் தைகள், 11 பெண்கள் உள்ளிட்ட 17 பேரை அந்த தீண்டாமைச் சுவர் காவு வாங்கியிருக்கிறது. 

சுவர் இடிந்து விழுந்து பலியானவர்கள், காயம் பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. ஆனால் சுவரைக் கட்டிய, சுவர் இடிந்து விழுந்து 17 பேரின் உயிரைக் காவுகொண்ட அந்த நபரை இன்னும் காவல்துறை கைது செய்ய வில்லை. அவரை கைது செய்யக்கோரி போராடிய வர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது.

அரசின் இத்தகைய அலட்சியங்கள் மற்றும் சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் தான் ஏழை, எளிய மக்களின் உயிரைப் பறிப்பதற்கு காரணமாக அமைகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசு துறையினருக்கு வசதியாக மறந்து போய்விடுகிறது. 

17 பேரின் உயிரிழப்புக்கு காரணமானவர் உட னடியாக கைது செய்யப்பட்டு எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். இறந்தவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அத்துடன் தீண்டாமைச்சுவர் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். தமிழக முதல்வர் அங்கு செல்லும் போது மேற்கண்ட நடவடிக்கைகள் செயல்படுத் தப்படுவதே இதற்கு தீர்வாகும். 

மாநிலம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பெரும்பாலான தொகுப்பு வீடுகள், அரசு கட்டிடங்கள் பலவும் கூட இடிந்துவிழும் நிலை யிலேயே உள்ளதை சரி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுப்பது உடனடி தேவையாகும்.

;