தலையங்கம்

img

ஏன் இந்த அவசரம்?

கொரோனாவின் பிடியில் இந்திய நாடு சிக்கித் தவித்துவரும் நிலையில் அனைத்துத் துறை களையும் போலவே கல்வித்துறையும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து குழப்ப மான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மத்தியில் உள்ள மோடி அரசு இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வித் துறையை மொத்தமாக மத்திய அரசின் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வித் துறை அவசரநிலைக்காலத்தின்போது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு தற்போது உயர்கல்வித் துறை கிட்டத்தட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இதனால்தான் நீட்தேர்வு போன்றவற்றிலிருந்து தமிழகம் போன்ற மாநிலங்கள் விலக்கு கேட்டாலும் மத்திய அரசு மறுத்து வருகிறது. அதேபோல பொறியியல் உள்ளிட்ட படிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் பிடிக்குள் சென்றுகொண்டிருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களை கல்வி நிலையங் களைவிட்டு விரட்டவும், பாடத்திட்டத் தயாரி ப்பை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளவும், குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டது. கல்வியாளர்களும் அறிஞர் களும் பல்வேறு மாநில அரசுகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்படவில்லை. அதற்கான சட்டமும் இயற்றப்படவில்லை. கருத்துக்கேட்பு என்கிற பெயரில் நடத்தப்பட்ட கண் துடைப்பு நிகழ்வுகளிலும் கூட இந்தப் புதிய கல்விக்கொள்கை தேவையற்றது என்ற கருத்தையே பெரும்பாலோர் முன்வைத்தனர். 

எனினும் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைந்துள்ளது. இதன் ஒரு பகுதிதான் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டம் தேசிய அளவில் மாற்றம் செய்யப்படும் என்றும், ஒவ் வொரு பாடத்திலும் வேலைவாய்ப்பு சார்ந்த  அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது ஆகும். 

புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுக் கொள்கை கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் அந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ள அடிப்படையில்தான் தற்போது பாடத்திட்ட கட்ட மைப்பில் மாற்றம் செய்யப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  முழுமையாக விவாதிக்கப்படாத, பெரும்பாலானோரால் ஏற்கப்படாத ஒரு வரைவின் அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது என்ன நியாயம்?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டப்படியும் அறி வியலுக்கு விரோதமாக, பழமைவாத அடிப்படை யில் பகைமையைத் தூண்டக்கூடிய  வகையிலும் தயாரிக்கப்பட்ட வரைவுக்கொள்கையில் வழிகாட்டுதலின்கீழ் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படுவது கல்வித்துறையை முற்றாக சீரழிக்கும். முழுமையான விவாதத்திற்குப் பிறகே கல்வித்துறையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்பட வேண்டும்.

 

;