தலையங்கம்

img

இது அவர்களின் வழக்கமான பாணிதான்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் திங்களன்று சென்னையில் நடத்திய பேரணி இந்த கொடூர மான சட்டத்திற்கெதிராக தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலித்துள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் தமிழகம் என்றென்றும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமையின் பக்கமே நிற்கும் என்பதை உலகிற்கு அழுத்தமாக உரைத்துள்ளனர். இந்தப் பேரணியை நடத்த விடாமல் செய்வ தற்கு பாஜகவின் பினாமியாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சி களை நீதிமன்றம் தூள் தூளாக்கியது. பாதுகாப்பு என்கிற பெயரில் பல்வேறு கெடுபிடிகளையும், அச்சுறுத்தல்களையும் காவல்துறை கட்டவிழ்த்து விட்டபோதும், அனைத்தையும் முறியடித்து குடியுரிமை சட்டத்திற்கெதிராகவும், தேசிய குடி மக்கள் பதிவேடு ஆலோசனைக்கு எதிராகவும் பங்கேற்ற பேரணி தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நாடு முழுவதும் போராடி வரும் போராளி களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் இந்தப் பேரணி ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.  மறுபுறத்தில் மோடி, அமித்ஷா வகையறா வின் பிடிவாதம் ஆட்டம் காணத் துவங்கி யுள்ளது. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்  ஆயிரம் சதவீதம் நியாயமானது என்றும், இதை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேவைப்பட்டால் இந்தத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரு வோம் என்று பம்மினார்.

இதன் துவக்கமாக ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அசாமைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்றும் அமித்ஷா கூறிவந்தார். 

இந்த நிலையில், புதுதில்லியில் ஞாயிறன்று பேசிய பிரதமர் மோடி தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்திலோ, மத்திய அமைச்சரவையிலோ விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேட்டை நடைமுறைப் படுத்தியே தீருவோம் என்று கூறி வந்தவர்கள் தற்போது போராட்டத்தின் வெம்மையை தாங்க முடியாமல் இவ்வாறு பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் இது நிலைமை சமாளிக்கப்படுவதற்காக சொல்லப்படுவதேயன்றி, பாஜகவின்  திட்டம் என்பது ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்த திட்டத் தின் அடிப்படையில் மதத்தின் பெயரால் நாட்டை யும், மக்களையும் துண்டாடுவதே ஆகும்.

ஆர்எஸ்எஸ்- பாஜகவைப் பொறுத்தவரை  பலரும் பல குரலில் பேசிக் குழப்புவதும், தங்களது நோக்கத்தில் குறியாக இருப்பதும் கடந்த கால அனுபவமாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை இந்திய மக்களின் போராட் டம் தொடர்வது காலத்தின் தேவையாகும்.

;