தலையங்கம்

img

வினோதமான வேடிக்கை

தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்சநீதி மன்றம் முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது விசித்திரமாக உள்ளது. இந்தப் பிரச்சனை மீது சபா நாயகர் முடிவெடுப்பார் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த விசயத்தில் முடிவெடுக்க சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதி கள் இனிமேல் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்து வைத்துவிட்டனர். அதேநேரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பதற்கான காலக்கெடு எதையும் நிர்ண யிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். அதிமுக வின் ஆட்சிக்காலம் முடியும்வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும் நீதிமன்றம் தலை யிடப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக முயன்ற நிலை யில் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது ஆசியோடு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.  பாஜக மற்றும் குருமூர்த்தியின் வழிகாட்டுதல்படி ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை  கோரும் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் அரசு தலைமைக் கொறடா உத்தரவையும் மீறி ஓ.பன்னீர்செல்வம்உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதுவே அவர் களை தகுதிநீக்கம் செய்ய போதுமான காரணமாகும்.

பாஜகவின் ஆலோசனைப்படியும், ஆளு நரின் முன்முயற்சியின்படியும் எடப்பாடி பழனி சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இந்நிலையில் திமுக சார்பில் 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது. சபாநாயகரின் முடிவில் தலையிட முடி யாது என உயர்நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்ட நிலையில் மூன்றாண்டு தாமதம் என்பது தேவையற்றது என்று கூறிய உச்சநீதிமன்றம் திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியது.

சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுவிட்டதால் வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். 11 எம்எல்ஏக்களுக்கும் வியாழனன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் பதிலளித்த பின்னர் சபாநாயகர் முடிவெடுப்பார் என அரசுத் தரப்பில் கூறப்பட்ட தால் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது. 

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்த மானது என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப் போலவே இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தீர்ப்புகள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உதவாது. மோடி அரசு விரும்பும் வரை அதிமுக அரசு பிழைத் திருக்கும் என்று கூறப்படும் நிலையில் உச்சநீதி மன்ற முடிவும் அதற்கு ஒத்திசைவாகவே உள்ளது.

;