தலையங்கம்

img

இலவச அரிசி இனி...?

ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை  நாடு முழுவதும் அமலாக்க மத்திய பாஜக அரசு துடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 3 செவ்வாயன்று புதுதில்லி யில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில உண வுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டார்.  தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூட்டம் முடிந்ததும் புதுதில்லியில் செய்தியா ளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் தற்போது உள்ள அனைவருக் குமானபொது விநியோகத் திட்டம் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் அமலானால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தமிழகத்தின் இலவச அரிசி வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறெங் கும் இல்லாத முறையில் நடைமுறையில் இருக்கிறது.  அதுதவிர மண்ணெண்ணெய் தமிழகத்தில் அதிகம் பயன்படுத்துவதையொட்டி கூடுதலாக தேவைப்படுகிறது. ஆனால் தேவையை விட மிகக் குறைவாகவே மத்திய அரசு வழங்குகிறது.  இந்நிலையில் தமிழகத்திற்கு 23,035 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டு மென்று வலியுறுத்தப்பட்டது என்று உணவு அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.  அத்துடன் தமிழக ரேசன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்புக்கு டன் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டு மென்றும்  தமிழகத்தின் கோரிக்கை முன்வைக் கப்பட்டதாக தெரிவித்தார். 

ஆனால் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை நாட்டில் உள்ள பத்து மாநிலங்கள் அமல்படுத்த இசைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் குஜராத், ஜார்க்கண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. என்றாலும் அந்த மாநிலங்களின் பொது விநியோக முறை அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் மட்டுமே அனைத்து மக்களும் ஏதா வது ஒரு பொருளையாவது வாங்குகிற பொது விநியோகதிட்டம் அமல்படுத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் தற்போது நடைமுறை யில் உள்ள அனைவருக்குமான பொது விநி யோக முறைக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் அமையுமா? என்பது சந்தேகமே. ஆகவே தமிழகத்தின் தனித்துவ மிக்க ரேசன் முறையை, பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசுடன் வாதிட வேண்டும். தமிழகத்தில்உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுகொடுக்கப்பட்டு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் காரியத்திலேயே ஆளும்கட்சியான அதிமுக நடந்து கொண்டிருக்கி றது. எனவே தமிழக மக்களின் வாழ்வாதார பிரச் சனையான பொது விநியோகத் திட்டத்தை பாதுகாப்பதற்காக தங்களது முழு எதிர்ப்பையும் தெரிவித்து மக்களின் நலனை பாதுகாத்திட வேண்டும். 

;