தலையங்கம்

img

ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் போதுமா?

மூன்றாவது கட்ட ஊரடங்கு ஞாயிறன்று இரவுடன் முடிவடைந்த நிலையில் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.  

தமிழகத்தில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக ளில் தற்போதைய நிலை தொடரும் என்றும் 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் பெரும்பா லானவை முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப செய்யப்பட்டவையோகும். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர் கள் குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள், விவ சாயத் தொழிலாளர்கள் ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகள் எதுவும் மாநில அரசின் காதுகளில் விழவில்லை என்றே தோன்றுகிறது.

குறிப்பாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ரேசன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. அதன்பிறகு முறைசாரா தொழிலா ளர்களுக்கு சொற்பமான நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. 

ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ரேசன் கார்டுதாரர்களுக்கு குறைந்த பட்சம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலை யில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயாவது வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் மாநில அரசு வெளியிட மறுக்கிறது. மத்திய அரசும் தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க மறுக்கிறது.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு மோடி அரசு முதலா ளிகள் கேட்ட அனைத்தையும் வாரி வழங்கி வரு கிறது. தொழிலாளர்களை, குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டது. 

துவக்கத்தில் ஊரடங்கு மட்டுமின்றி பொது சுகாதாரம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரசுடன் போராடி பிழைத்துக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்ளட்டும் என்ற நிலைப் பாட்டை மத்திய அரசு எடுத்துவிட்டது. அதிகளவு சோதனை நடத்தி நோய்த் தொற்று உள்ளவர்க ளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறாக, சோத னையை பெயரளவுக்கு நடத்தி நோய்த் தொற்றை குறைத்துக் காட்ட மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் முயல்கின்றன.

நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது ஒன்றே தங்களது கடமை என்று கருதும் அரசுகள் மக்களை கைகழுவிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொரோனா தொற்றினாலும், பசியினாலும் பெரு மளவு மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும். இதை எதிர்கொள்ள மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

;