தலையங்கம்

img

கடும் நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 70 என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மறுபுறம் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அள விற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.    ஆனால் இதுகுறித்து பாஜக தலைமையிலான மோடி அரசு எந்த கவலையும் கொள்வதாக தெரியவில்லை. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 5 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.  கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள விநியோகஸ்தர்கள் மட்டத்தில் மட்டும் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைக்கப் பட்டிருக்கின்றன.  கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 271 நகரங்களில் 286 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதே துறையில் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் கடந்த 6 மாதத் தில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என புள்ளிவிபரங்கள் தெரி விக்கின்றன. 

பிரபல டாடா மோட்டார் நிறுவனத்தில்  40 விழுக்காடு அளவிற்கு கொள்முதல்  ஆர்டர் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக  மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  இந்நிலையிலேயே  அந் நிறுவனம் தனது 30 இரும்பு ஆலைகளை மூட முடிவு செய்திருக்கிறது. இந்த துறை மட்டுமின்றி மின்சாரம், பெட்ரோலியம் சுத்திகரிப்பு , இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட 8 அடிப்படை உள்கட்டமைப்பு தொழில் பிரிவுகள் கடந்த 50 மாதங்களாக  கடும் சரிவை சந்தித்து வருகின்றன. ஒட்டு மொத்தத்தில் இந்திய உற்பத்தி துறையும், தொழில்துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி யிருக்கின்றன.  ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து வந்த நிலையில், தொழில் நெருக்கடியின்  எதிரொலி யாக இருந்த வேலையும் பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவு வேலையின்மை விகிதம் 6.1 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்க ளில்  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 65 விழுக்காடு காலிப்பணியிடங்கள் அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக  அன்றாட தேவைக்கு கூட சம்பாதிக்க முடியாத மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆனால் மோடி அரசு, மக்களை திசைதிருப்புவதன் ஒரு பகுதியாகவே  காஷ்மீரின் சிறப்பு தகுதியை  பறிக்கும் மசோதாவும்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

பற்றியெரியும் பிரச்சனைகள் ஆயிரம் இருக்க; நடப்பு  நாடாளுமன்ற கூட்ட தொடரில் மட்டும் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில் 90 சதவிகித மசோதாக்கள்  மக்கள் நலன் களை காவு கொடுத்து மிகப்பெரும் கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. பாஜக அரசின் கேடுகெட்ட கொள்கையால் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

;