தலையங்கம்

img

அவசர நிலை பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை உண்டா?

காங்கிரஸ்  மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, 1975 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்தார்.  அவசர நிலை கொண்டுவரப் பட்டு கடந்த வியாழக்கிழமையோடு (ஜூன் 25)  45 ஆண்டுகள் ஆகின்றன. 

அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது ஒரே நாள் இரவில் தேசமே சிறைச்சாலையாக மாறியது. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டது; எதிர்க்கட்சித் தலை வர்கள், அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. இந்த நாளை ஆண்டு தோறும் அனுசரிக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சி யைத் தாக்குவதற்காக இந்நாளைப் பயன் படுத்திக்கொள்கிறதே தவிர அவர்களுக்கும் ஜன நாயகத்திற்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை.  லட்சக்கணக்கான மக்களின் கடுமையான போ ராட்டம்  காரணமாக, தேசத்தில் அவசர நிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது.

ஆனால் தங்களால் தான் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய பாஜக)  சொந்தம் கொண்டாடுவார் கள்.  நேற்று முன்தினம் கூட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர நிலையை நினைவு படுத்தி அறிக்கை விட்டுள்ளார். ஆடு நனைகிறதே என ஓநாய் கண்ணீர் விடுவதைப்போல் இருக்கிறது அவரது அறிக்கை. அவசர நிலைக் காலத்தில் கொடு மைகள் இழைக்கப்பட்டதும், ஜனநாயகம் கசாப்பு செய்யப்பட்டதும், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்ட தும் உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. 

அவசர நிலையை எதிர்த்து நாடு முழுவதும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, ஜனதா கட்சி களைச் சேர்ந்தவர்கள் போராடினார்கள். பத்தி ரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். கடுமையான தணிக்கைக் குப் பின்னர் தீக்கதிர், முரசொலி போன்ற பத்திரி கைகள் வெளிவந்தன. ஆம், அவசர நிலை காலம் கொடுமையானது. ஆனால் அவசர நிலையை விட மோசமான சூழல் தற்போது நாடு முழு வதும் நிலவுகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் மத்தியில் உள்ள பாஜக அரசு எதேச்சதிகாரமாக செயல்படுகிறது. முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்  நலச்சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படுகின்றன.  

கொரோனா தொற்று காலத்தைப் பயன் படுத்தி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குக ளைத் தனியாருக்கு விற்கிறது. நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனங்களைக்கூட விட்டுவைப்ப தில்லை. சமூக வலைத்தளங்களில் அரசின் கொள் கைகள், சித்தாந்தங்களைக் கேள்வி கேட்போர் மீது திட்டமிட்டுத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. 

அறிவுஜீவிகள் போராடினால் “நகர்ப்புற நக்சல்’’ என்ற பெயர் சூட்டப்பட்டு மிகமோச மான பிரிவுகளின் கீழ் வழக்குத்தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அறிவிக்கப் படாத அவசர நிலைதான் இன்று நாடு முழு வதும் அமலில் உள்ளது. எனவே  அமித்ஷாவோ அல்லது பாஜகவின்  மற்ற தலைவர்களோ அவசர நிலையை எதிர்த்துப் பேசக் கொஞ்சமும் தகுதி யற்றவர்கள்.

;