தலையங்கம்

img

எத்தனை ஆணவம் அமித் ஷா?

டைம்ஸ் நவ் ஊடகம் நடத்தியுள்ள உச்சி மாநாட்டில் பேசியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல்காந்தி, சீத்தாராம் யெச்சூரி போன்ற தலைவர்களை நையாண்டி செய்யும்விதமாக, “அவர்கள் இப்போது விரும்பி னால் காஷ்மீர் சென்றுவரலாம். அவர்கள் ஒரு முறை தடுத்துநிறுத்தப்பட்ட பிறகு ஒருபோதும் காஷ்மீருக்கு செல்லவில்லை. இப்போது செல்லலாம். யார் வேண்டுமானாலும் இப்போது செல்லலாம். நாங்கள் ஒவ்வொருவருக்கும் அனுமதி அளிப்போம்” என்று கூறியிருக்கிறார்.  எத்தனை சர்வாதிகாரமான - ஆணவ மான பேச்சு இது. இந்தியாவின் ஒரு பகுதியி லிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல விரும்பும் இந்தியக் குடிமக்கள் அமித் ஷாவிடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா?  அப்படி யானால் இந்தியாவை தனது ஒட்டுமொத்த சிறைக் கொட்டடியாக எண்ணுகிறதா பாரதிய ஜனதா கட்சி அரசு என்ற கேள்வி எழுகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர், நாட்டு நடப்பு களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், காஷ்மீருக்குள் செல்வதற்கு முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு அனுமதி மறுக்கப் பட்ட சமயத்தில், அவரோ, மார்க்சிஸ்ட் கட்சியோ  அமித் ஷாவின் அனுமதிக்காக காத்திருக்க வில்லை; மாறாக, ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், அங்கு மூன்று முதலமைச்சர்கள் உள்பட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் வீட்டுச்சிறையிலும் சிறைக் கொட்டடியிலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், காஷ்மீரில் இயல்புநிலைமை திரும்பச் செய்ய வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் தாரிகாமியை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று ஆட்கொணர்வு மனுவாகவும் உச்சநீதி மன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில், காஷ்மீருக்குள் செல்வதற்கு அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அமித் ஷா அவர்களே, எவரும் நுழையக் கூடாது என்று ராணுவத்தால் மூடி சீல் வைத்தீர்களே அந்தக் காஷ்மீரில், 370வது பிரிவு பறிக்கப்பட்ட பிறகு உங்கள் ராணுவத்தினர் புடை சூழ நீதிமன்ற உத்தரவோடு அதிகாரப்பூர்வமாக கால் வைத்ததும் ஸ்ரீநகருக்குள் நுழைந்ததுமான முதல் அரசியல் தலைவர் சீத்தாராம் யெச்சூரிதான் என்பதை உங்களது அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரவில்லையா?

இப்போதும் ஜம்மு-காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகத்தான் இருக்கிறது. அதை பகிரங்கமாக அறிவித்து ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, அங்கே இயல்புநிலை நிலவுவது போன்று அமித் ஷா கூறுவது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் இழுக்கு. இந்த நிலையில், இயல்புநிலை இருப்ப தாகக் காட்டிக் கொள்வதற்காக காஷ்மீர் பள்ளத் தாக்கில் பஞ்சாயத்து தேர்தலும் அறிவித்திருக் கிறார்கள். ஆறு மாதமாக எதிர்க்கட்சிகளை யெல்லாம் சிறையில் பூட்டிவைத்திருக்கும் நீங்கள் ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவமான தேர்தலை எப்படி நடத்துவீர்கள்?

;