தமிழகம்

img

தொடர்பு தான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது

மேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன் பேச்சு

புதுக்கோட்டை, அக்.13- மற்ற உயிரினங்களிடமிருந்து தொடர்புதான் மனிதனை மேம்படுத்தி வந்திருக்கிறது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன். புதுக்கோட்டை கனிணி தமிழ்ச்சங்கம் சார்பில் புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் அக்.12, 13 ஆகிய இரண்டு நாட்கள் இணைய தமிழ்ப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியது: கீழடி குறித்த ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிற இதே காலத்தில்தான் நாம் சந்திராயனும் அனுப்பி ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் விலங்குகளைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்தோம். இப்போது சிங்கம், புலி, யானைகள் மனிதர்களிடம் புகழிடம் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. கடவுளின் பாதுகாப்பே இப்பொழுது மக்களிடம் வந்துவிட்டது. இந்த வெற்றி மனிதனுக்கு எப்படி சாத்தியப்பட்டது.  மொழியினாலா? அப்படியென்றால் பறவைகளுக்குக்கூட மொழி இருக்குத்தானே! நமக்கு புரியவில்லை என்பதால் அதற்கு மொழி இல்லை என்று ஆகிவிடாது. பிறகு எப்படி மனிதர்களை சக உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தி வந்துள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை எது தூண்டியது என்றால் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கண்ணாடி மீரான் என்ற ஒன்று மூளைக்குள் நடந்த பெருவெடிப்புதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொடர்புதான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது. சப்தம்தான் நம்மை வளர்த்து இருக்கிறது. இந்த பூமி சூரியனிடமிருந்து உடைந்து விழுந்துவிட்டதாலேயே பூமிக்கும் சூரியனுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டதா? அது தொடர்பை தக்கவைக்க தொடர்ந்து இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. முன்னோர் வாழ்ந்த காலத்தோடு நாம் தொடர்பில் இருப்பதை டிஎன்ஏ நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

உலகத்தை இரண்டு வகையாகப் பிரித்து விட்டார்கள். ஒன்று தொடர்பில் இருப்பவை. மற்றொன்று தொடர்புக்கு அப்பால் இருப்பவை. தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டால் நீங்கள் அனாதையாகி விடுவீர்கள். மனிதன் அனைத்தையும் தனது தொடர்பு எல்லைக்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறான். இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற பொழுது இல்லை இல்லை இது தொடர் நிகழ்வுகளால் நிகழ்ந்த ஒரு மாற்றம் என நிரூபிக்கப்படுகிறது. இந்த உலகம் ஐந்து பூதங்களும் கலந்த மயக்கம் என்று தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார். எந்த ஒன்றையும் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்.

நான் தமிழை வளர்ப்பதற்காக இணையத்துக்குப் போகவில்லை. இணையத்தை வளர்ப்பதற்காக தமிழைப் பயன்படுதுகிறேன். நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக இணையத்துக்குள் போகிறேன். இணையம் என்கிற நவீன தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்த வரம். இணையம் வழியாக தொடர்பில் இருப்பவர்களுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. நாட்டின் எல்லை இல்லை. தொழில் நுட்பம் உங்களுக்கான ஏவலாளாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆசிரியர் சொன்னதே வேதவாக்கு என்ற நிலை மாறி பாடம் நடத்தும் போது ஆசிரியரை மாணவர்கள் திருத்தும் அளவுக்கு இணையத்தின் பயன்பாடு வளர்ந்து இருக்கிறது. நீங்கள் கூகுளுக்குத் தெரியாமல் எங்கும் போக முடியாது. கடவுளே கூகுளுக்குத் தெரியாமல் எங்கும் சென்றுவிட முடியாது என்று ஆகிவிட்டது. எதுவும் செய்ய முடியாது. உங்களின் அனைத்துத் தகவல்களையும் அது உள்ளங்கையில் வைத்து இருக்கிறது. நீங்கள் எந்தத் தகவலையும் எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. எந்தப் பொருளையும் இணையம் வழியாக உங்களை வந்தடையச் செய்ய முடியும்.

அடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. உலகம் விரைவாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஒன்றை நாம் தகவமைத்துக்கொள்வதற்குள் அடுத்த மாற்றம் வந்துவிடுகின்றன. எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அப்படியென்றால் எதிர்கால உலகம் எதற்கான சவாலாக இருக்கும் என்றால் அது புரிந்து கொள்வதில் இருக்கும். புரிந்துகொள்ளப்படாத தெரிதல் பயனற்றுப் போகும். தெளிவை உண்டாக்கும் கல்வி முறையே வருங்காலத்தின் தேவையாக இருக்கும். இவ்வாறு ம.இராசேந்திரன் பேசினார். தொடக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நா.அருள்முருகன் தலைமை வகித்தார். சாகித்ய அகாதமியின் மேனாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி, ஜெ.ஜெ.கலை அறிவில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் கு.தயாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிகளை கவிஞர் நா.முத்துநிலவன் தொகுத்து வழங்கினார்.   (ந.நி.)

;