தமிழகம்

img

ஆக.17, 18, 19 மின் ஊழியர் மாநில மாநாடு.... நெல்லையில் சங்கமிப்போம் வாரீர்!

1970ல் துவங்கிய தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கடந்த 50 ஆண்டுகாலமாக மின்சாரத்துறையில் பல சோதனைகளைத் தாண்டி, சாதனைகளை புரிந் துள்ளது. குறிப்பாக தமிழக மின்வாரியம் 1957 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட போது அதிகாரிகளின் ஆதிக்கமே நிலவியது. மின்வாரிய ஊழியர்களுக்கு எந்தவித உரிமையும் இன்றி கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இவைகளுக்கு எதிராக பலகட்ட இயக்கங்களை நடத்தி, 1965ம் ஆண்டில் களப்பிரிவு ஊழியர்களுக்கும் 1970ம் ஆண்டில் எழுத்தர் பிரிவு ஊழியர்களுக்கும் நிலையாணைகள் தோற்றுவிக்கப்பட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழக மின்வாரியம் துவங்கிய போதுஆரம்ப கட்ட ஊதியமாக ரூ.19 அடிப்படைச்சம்பளமும் ரூ.8 பஞ்சப்படியுமாக இருந்ததைஇன்றைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18600 ஆக மாற்றிய பெருமை மின் ஊழியர்மத்திய அமைப்பையேசாரும். 3 மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சப்படியும், அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கும், மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்குவதை போல பஞ்சப்படி பெற்றுத் தந்தது மின்ஊழியர் மத்திய அமைப்பு. மின்வாரிய ஊழியர்களுக்கு 8.33 சதவீதபோனசும், 11.67 சதவீதம் ஊக்கத் தொகை யாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைவைத்து சுயேட்சையான இயக்கங்கள் கூட்டான இயக்கங்கள் நடத்தி 20 சதவீத போனஸை பெற்றுத்தந்தது மின் ஊழியர் மத்திய அமைப்பு.

ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் ஏற்படும் போதெல்லாம் பணியின் தன்மைகளை மாற்றி பணிச்சுமையை அதிகரிக்கச் செய்துஆயிரக்கணக்கான பதவிகளை காலி செய்யும் நிலை எடுத்த போதெல்லாம் மின் ஊழியர் மத்திய அமைப்பு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பதவிகள் குறைப் பதை தடுத்து நிறுத்தியதனாலேயே மின்வாரியத்தில் வேலை வாய்ப்பு உருவாகும்நிலைஏற்பட்டது. அதனால் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களை மின்வாரியத்தில் பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய அமைப்பு மின்ஊழியர் மத்திய அமைப்பு

ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம்
1957ல் மின்வாரியம் துவங்கிய போதே அப்போதிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 40,000. அதில் 30,000க்கும் மேற்பட்டதொழிலாளிகள் தினக்கூலியாக பணியாற்றினர். தினக்கூலி தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை, வேலை நேரம் என்பது உத்தரவாதம் இல்லாத நிலைமை, சீருடை, ஓய்வறை போன்ற சட்டத்தில் சொல்லப்பட்ட எந்த சலுகையும் இல்லாத பட்டாளம் 1970 காலகட்டத்தில் 35000க்கும் மேலும் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றும் நிலமை நிலவியது. 

தினக்கூலி தொழிலாளிகளை திரட்டிஇயக்கங்கள் நடத்தி 4 ஆண்டுகள் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் மூலமாக 35,000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளிகளை பணி நிரந்தரப்படுத்தி சாதனை படைத்த பெருமை மின்ஊழியர் மத்திய அமைப்பையே சாரும்.தமிழக மின்வாரியத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களையும் கணக்கில் கொண்டு ஐடிஐ படித்தவர்களை களஉதவியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் 8000க்கும்மேற்பட்ட ஐடிஐ படித்தவர்கள் களஉதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற வழக்குகளும் நீண்ட நெடியபோராட்டங்களும் நடத்தி 51,000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளிகளை மின்வாரியத்தோடு இணைத்த பெருமை மின் ஊழியர் மத்திய அமைப்பையே சாரும்.மின் ஊழியர் மத்திய அமைப்பு மின்வாரியத்தில் சாதித்த சாதனைகளை எல்லாம் வேதனைகளாக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

நெல்லையில் சங்கமிப்போம்
மத்திய அரசு முன்பும் தற்போதும் எடுத் துள்ள தாக்குதல் நிலையை எதிர்கொள்ள மாநிலங்களும், துறைவாரியான ஊழியர்களும் தயாராக வேண்டிய நிர்பந்த நிலைஉருவாகியுள்ளது. இதற்கு கட்டியம் கூறும்விதமாக ஆகஸ்ட் 17,18,19 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாடும்,19ந்தேதி நடைபெற உள்ள பேரணியுமாகும்.மத்திய அரசின் தாக்குதலும் அதை எதிர்கொள்ள தமிழக மின்வாரிய ஊழியர்களை தயார்படுத்தும் அணிவகுப்பாக நடைபெறும் பேரணியில் ஆண்களும், பெண்களும் ஆயிரம், ஆயிரமாய் அணி திரள்வோம். நெல்லையை செங்கடலாக்கிடுவோம் வாரீர்...!

;