தமிழகம்

img

மாட்டுக்கறி சூப் சாப்பிடவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்!

நாகை மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்  என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் மாட்டு கறி சூப் சாப்பிடுவதற்காக முகமது பைசான் என்கிற இளைஞரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய இந்து மக்கள் கட்சி குண்டர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய் என்று தமிழக அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

நாடு முழுவதும் மக்களின் கல்வி உரிமை,  கலாச்சார உரிமை, உணவு உரிமை, சிவில் உரிமை, ஆகியவற்றை முடக்கி ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க நினைக்கிற இந்துத்துவா அமைப்புகள் கொடூரமான வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. தேசத்தின் பன்முக கலாச்சாரத்தை பாதுகாத்திட அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியமிக்க தமிழக மண்ணில் சிறுபான்மை மக்களின் உரிமையையும், தலித் மக்களின் உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. தமிழகத்தில் முதல்முறையாக இந்துத்துவ அமைப்புகள் இத்தகைய கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இந்த தாக்குதலை கண்டித்து குரல் எழுப்பவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது. முகமது பைசானை தாக்கிய இந்து மக்கள் கட்சியினர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளோடு, குண்டர் தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து கைது மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்.பி.சம்பத் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளனர்

;