தமிழகம்

img

முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகையா?

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் இல்லை

இதுதான் பாஜக அரசின் லட்சணம்: கே.பாலகிருஷ்ணன் சாடல்

திண்டுக்கல், அக்.13- நூறுநாள் வேலைத்திட்ட தொழிலா ளர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ள நிலையில், முதலாளிகளுக்கு கோடிக்கணக் கில் வரிச்சலுகை வழங்கியதுதான் மோடி யின் பாஜக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சாடியுள்ளார்.     திண்டுக்கல்லில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவையில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசி யதாவது:  இன்றைக்கு நாடு மிகப்பெரிய பொரு ளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனை மூடி மறைக்க பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாள்கிறது. பாஜக மீது எல்லோ ரும் குறை கூறுகிறார்கள். ஆனால் பாஜகவை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர யாரும் பேச மறுக்கிறார்கள். நாடு பாசிசத்தை நோக்கி  நகர்கிறது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் நம் முன் உள்ள கேள்வி. பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முடிவுகளை அமலாக்க முயற்சிக்கிறது. இந்த தேசத்தை இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கி நகர்த்துகிறார்கள். இதன் காரணமாக சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்கு தலுக்கு தயாராகி வருகிறார்கள் என்பதை எச்ச ரிக்கையுடன் பார்க்க வேண்டும். பாஜக அரசின் முதல் தாக்குதலாக தற்போது காஷ்மீரில் நடை பெறும் சம்பவங்களை  பார்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப் பட்டு வீட்டுச் சிறைகளில். முகாம்களில், சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் கள். அங்கே இயல்பு நிலை இல்லை. காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்தையும் பறித்து யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது மத்திய பாஜக அரசு. 

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. விவசாய விளை பொருட்களும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. தொழிலாளி, விவசாயி என அனைத்து தரப்பி னரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். 42 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. 10 லட்சம் பேர் வரை வேலை இழந் துள்ளனர். திருப்பூர் பின்னாலாடை தொழில் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஆர்டர்கள் குறை கின்றன. சிறு தொழில் அதிபர்கள் வேதனை யுடன் கூறுகிறார்கள். இதே போல் கோவை யில் உள்ள பொறியியற் தொழிற்சாலைகளும் அபாய கட்டத்தில் உள்ளன. திருச்சி பெல் நிறு வனத்திற்கு போதிய ஆர்டர்கள் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரண மாக பெல் நிறுவனத்துடன் தொடர்புடைய உப தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சிறு தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

ஜி.எஸ்.டி. பண மதிப்பிழப்பு போன்ற நட வடிக்கையின் காரணமாக நாட்டில் பொரு ளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்  காரண மாக மக்கள்  வாங்கும் சக்தியை இழந்துள்ள னர். தற்போது ஏற்பட்டிருக்கிற இந்த பொருளா தார மந்தநிலை மற்றும் தேக்கநிலை கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத மந்தநிலை  என்றும் இப்போதைக்கு இதை சரி செய்ய இயலாத கையறு நிலையில் மத்திய பாஜக அரசு உள்ளது என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறு கிறார்கள்.  கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் அம லாக்கப்பட்டு வருகிற உலகமயம், தாராள மயம் போன்ற மோசமான பொருளாதாரக் கொள்கையின்  மூலம் தான் இந்த நெருக்கடி வந்துள்ளது.  இத்தகைய சூழலில் இந்திய முத லாளிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1,45,000 கோடி ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளார். ஆனால் கிராமப்புறத்தில் சாதா ரண ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிற நூறு நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட  நிதியை ரூ.30 கோடி குறைத்துள்ளார். அதிலும் பல மாவட்டங்களில் இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பள பாக்கி உள்ளது. அரசின் பணத்தை முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின் இந்த நட வடிக்கையின் காரணமாக சாதாரண மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி வெட்டிச் சுருக்கியுள்ளது. இதனால் நாட்டில் பொரு ளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும். 

அசாம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்களை  குடியுரிமையற்றவர்கள் என்று கூறி அகதிகளாக்கி முகாம்களில் தங்க வைக்கும் பணியில் ஈடுபடுகிறது பாஜக அரசு. இது போல இந்தியாவின் பல மாநிலங்களில் குடி மக்கள் பதிவேடு திட்டத்தை அமலாக்க முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக மகா ராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்போதே முகாம்கள் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இடதுசாரிகள் தான் இந்தியாவின் எதிர்காலம். பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏகாதிபத்தியமோ, முதலாளித்துவமோ தீர்வு காண முடியாது. இடதுசாரிகளால் மட்டுமே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு சொல்ல வும், அமல்படுத்தவும் முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

(நநி)



 

;