தமிழகம்

img

தரமான  பரிசோதனை மையம் உருவாக்க வேண்டும்

            குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கான  இரத்த, சளி பரிசோதனைக்கு, மாதிரிகள் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதை தவிர்க்க மாவட்டத்திலேயே கொரோனா நோய் குறித்த பரிசோதனை செய்யும் வகையில் தரமான  பரிசோதனை மையம் உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 
உலகம் முழுவதும் கோவிட் 19 தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 900 க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் 25 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்  கண்காணிக்க ஒன்று அல்லது இரண்டு பஞ்சாயத்துகள் அளவில் ஒரு சுகாதார உதவியாளர் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. மேலும் அதே நபர் சோதனைச் சாவடிகளிலும் வெளியிலிருந்து வருபவர்களை சுகாதார ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தாராளமாக வெளியே சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழுக்கள் தேவை
மாவட்டத்தில் 4446 பேர் வீடுகளில்  தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் உள்ளதைப்போல் சுகாதார பணியாளருடன் அந்தந்த பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் கொரோனா நோயாளிகள் இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்திருப்பது மாவட்ட மக்கள் மத்தியில் ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கான  இரத்த, சளி மாதிரி பரிசோதனை மாதிரிகள் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வர தாமதமாகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்திலேயே கொரோனா நோய் குறித்த பரிசோதனை செய்யும் வகையில் தரமான  பரிசோதனை மையம் உருவாக்கவும், மாவட்ட மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரியில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லையென்ற குறைபாடு உள்ளது. இதை அவசரமாக சரி செய்ய வேண்டும். 
வெளிமாநில தொழிலாளர்கள்

குமரி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டமாக ஓர் இடத்தில் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்கு அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தங்கவைத்து உணவு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு கூட்டமாக சென்று பொருட்கள் வாங்குவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், ரேஷன் பொருட்களை வீடுவீடாக சென்று வழங்கிட வேண்டும். குடும்பம் நடத்துவதற்கு தேவையான அரிசி, மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அன்றாடம் கிடைக்கவும், அதற்கான கடைகள் திறந்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் கடைகளில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து அநியாய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாவட்டத்தில் தினந்தோறும் குழந்தை பிரசவத்திற்காகவும், டயாலிசிஸ் செய்வதற்கு அவசர மருத்துவ உதவிக்காகவும், தவிர்க்க முடியாத அத்தியாவசிய பணிகளுக்காகவும் வெளியில் செல்ல வாகன பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதும் விசாரணையின்றி அவர்களின் வாகனங்களை கைப்பற்றுவதும், வழக்கு போடுவதும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே உரிய விசாரணை செய்து அத்தியாவசியமான பணிகளுக்கு செல்பவர்களை அனுமதிக்க வேண்டும்

ஊரக வேலையில் ஊதிய நிலுவை
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை வாங்கியுள்ள அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள இரண்டு நாள் ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத்தொகை முழுவதையும் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். 
குமரிமாவட்டத்தில் 21 நாட்கள் பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதாலும் கடுமையான வறட்சி நிலவுவதாலும் தண்ணீர்த்தேவை அதிகரித்துள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடையில்லாமல் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். சாலை ஓரங்களில் பிளீச்சிங் பவுடர் தூவவேண்டும்.

            குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளிலும், இன்னும் பிற பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் தூவ கூட ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் போதிய ஊழியர்களை நியமித்தும், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாகர்கோவில் மாநகராட்சியில் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொழிலுக்காக கேரளா சென்றுள்ள பலர் வீடு திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களை பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும். 
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களான காய்கறிகள், வாழைக்குலைகள், நெல் போன்றவை அறுவடை செய்திடவும், சந்தைக்கு கொண்டு வருவதையும் காவல் துறை தடுப்பதால் விவசாய விளை பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே காவல் துறையினர் விவசாய விளை பொருட்களை தடுக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டகுழு கேட்டுக்கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

;