வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தமிழகம்

img

விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுக...

சென்னை:
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் (தமிழ்நாடு) மாநிலப் பொதுக்குழு கூட்டம், ஜூலை 27 அன்று, மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் காணொலி காட்சி மூலம்   நடைபெற்றது. அக்கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின்  தலைவர்கள், பெண் பிரதிநிதிகள் உட்பட  கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

மத்திய பாஜக அரசாங்கம் விவசாயிகளைப் படுகுழியில் தள்ளும் வகையிலும், கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாகவும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாட்டு மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க உருப்படியாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத மத்திய அரசாங்கம், விவசாயிகள் ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது,குறிப்பாக, மின்சார திருத்தச் சட்டம் 2020 அமலுக்கு வருமானால், அந்தந்த மாநில அரசாங்கங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கிவரும் இலவச மின்சாரம், மின்சார மானியம் ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்படும். விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால், வேளாண் உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்படுவதுடன், விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். மின் கட்டணம் கடுமையாக உயருவதுடன் மாநில உரிமைகளும் பறிக்கப்படும்.அதேபோல அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள், வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தபாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய இந்த 3 சட்டங்களும் இந்திய விவசாயத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் படையெடுப்புக்கு வழிவகுக்கும்.

எனவே, இந்த 4 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஒரு கோடிகையெழுத்துக்களைப் பெறும் இயக்கம் ஏற்கனவே ஜூன் 20 முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. அவை பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும்.அத்துடன் ஜுலை 27ம் தேதி மாநிலம் முழுவதும் விவசாயிகள் வீடுகள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றி, தங்களது எதிர்ப்பினைத் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடைபெறும்இப்போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தருமாறு ஒருங்கிணைப்புக் குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

;