தமிழகம்

img

வெளி நாடுகளிலிருந்து வந்த 3600 பேர் தனிமையில் உள்ளதாக குமரி எஸ்பி தகவல்

மார்ச்.26- குமரி மாவட்டத்தில், ஊரடங்கு அமலில் இருக்கும் போது சாலைகளில் தேவையின்றி நடமாடுபவர்களை கண்காணிக்க டிரோன் கேமரா முறை நாகர்கோவிலில் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. 

கோவிட் 19 தொற்றுநோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் சாலைகளில் காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் அனாவசியமாக வருவோரை கண்காணிக்க முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டிரோன்  கேமரா முறை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. 

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் இதனை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் நகர் முழுவதும் நடைபெறும் சம்பவங்கள், விதிகளை மீறி சாலைகளில் வருவோர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கும்  வகையில் இந்த  டிரோன்  கேமரா முறை செயல்பாட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்தவர்கள்  3600 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியே நடமாடினால் நிரந்தரமாக சிறை தண்டனை வழங்கப்படும். விதிமுறைகளை மீறி சாலைகளில் அநாவசியமாக நடமாடியவர்கள் 11 பேர் மீது புதனன்று ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. கேரளாவில் இருந்து கடல்மார்க்கமாக மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களை மருத்துவ குழுவினர் சோதனைகள் செய்த பின்னரே சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அவர் கூறினார்.
 

;