தமிழகம்

img

முப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்

சென்னை அச்சக ஊழியர் சங்கம்

அரசாங்க ஆவணங்களில் உள்ள  விபரங்கள்

இவர்கள் ரஷ்யப் புரட்சியை விளக்கியும், ஒடுக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அமீர் ஹைதர்கானையும் இதர கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய  வேண்டும்  என்றும், கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் மீதான தடையை எதிர்த்தும் பேசினர்.

சென்னை கம்யூனிஸ்ட்டுகளான ஏ.எஸ்.கே.அய்யங்காரும் பி.மாணிக்கமும் (நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.சுந்தர ராமரெட்டியின் உத்தரவின்பேரில்) சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த 30 அச்சக ஊழியர்களை 1935 ஏப்ரல் 5ஆம்தேதி சந்தித்தனர். சென்னை அச்சகத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தனர். மற்றொரு கம்யூனிஸ்டான கே.சத்தியநாராயணா, ஏ.எஸ்.கே.அய்யங்காருக்கு உதவினார். இவர்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொழிலாளர்கள் கூட்டங்களில் பேசி அவர்களைச் சங்கத்தில் சேரத் தூண்டினர். இவர்கள் ரஷ்யப் புரட்சியை விளக்கியும், ஒடுக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அமீர் ஹைதர்கானையும் இதர கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் மீதான தடையை எதிர்த்தும் பேசினர்.

இந்தச் சங்கம் அகில இந்திய அச்சக ஊழியர் சம்மேளனத்துடன் ஆகஸ்ட் இறுதியில் இணைக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரியதற்காக தமிழ்நாடு அச்சகத்தில் இருந்து சில தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அச்சக ஊழியர் சங்கம் இவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் போராடியது. சென்னையில் ஆந்திர பத்திரிகா அச்சக ஊழியர்கள் மே முதல் வாரத்தில் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்து மறியல் செய்தனர். போலீசார் இவர்களை சென்னை நகரப் போலீஸ் சட்டப்படி வெற்றிகரமாக கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தச் சங்கத்தினர் மற்ற சங்கத்தினருடன் கூட்டாகச் சேர்ந்து மக்கள் பூங்காவில் மே தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் பேசிய மூன்று பேர் தவிர மற்ற அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள். சோவியத் புரட்சியை வாழ்த்தியும், யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு தொழிலாளர்கள் உதவி செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சென்னை மாகாணக் கமிட்டி

1932ஆம் ஆண்டு அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளர் முகுந்தலால் சர்க்கார் சென்னை மாகாணக் கமிட்டியை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். அவரைக் கைது செய்ததன் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு முகுந்தலால் சர்க்கார் தொழிற்சங்க நடவடிக்கைகளை உயிர்ப்பிக்க தீவிர முயற்சி செய்தார். ஆனால் சென்னை சதி வழக்கில் இவர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

1935ஆம் ஆண்டு மே மாதம் ஆர்.எஸ்.நிம்கர், மீரட் சதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் ஏஐடியுசி பொதுச் செயலாளர் வேண்டுகோளின் பேரில் சென்னைக்கு வந்து மாகாணக் கமிட்டியை அமைக்க முயற்சித்தார். இவரும் கைது செய்யப்பட்டதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. சென்னை தொழிலாளர் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் பி.சுந்தரராமரெட்டி, பின்னர் இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார். இவர் ஏஐடியுசி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொண்டார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஏஐடியுசியின் வங்க கிளைச் செயலாளர் ஏ.எம்.ஏ.ஜமானை இப்பொறுப்புக்கு நியமித்தார்.

1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு வந்தார். சென்னையில் 1936 ஜனவரி 8ஆம்தேதி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் 7 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாகாணக் கமிட்டி அமைக்கப்பட்டது. பின்வரும் நபர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்: தலைவர் - பி.ஜீவானந்தம்; துணைத் தலைவர் - ஏ.எஸ்.கே.அய்யங்கார்; பொதுச் செயலாளர் - பி.சுந்தரராமரெட்டி; ஆர்கனைசிங் செயலாளர் - ராஜகோபால கிராமணி; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: எஸ்.பார்த்தசாரதி. பி.ராஜவடிவேலு, எம்.நடேச முதலியார், ம.பொ.சிவஞானம், ஜி.கிருஷ்ணமூர்த்தி, கே.நாராயணராவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;