சினிமா

img

நாடோடிகள் - 2

திரை விமர்சனம் - ஜி.ராமகிருஷ்ணன்,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

கட்டாயத் திருமணத்திற்கு ஆளான பெண்ணை, தாலி கட்டிய கணவன் அவள் விரும்பிய காதலனுடன் சேர்த்து வைப்பதும், அது சாதி மறுப்பு காதல் திருமணம் என்பதால் சாதி வெறியர்கள் ஆணவ கொலைக்கு திட்டமிடுவதும், அதை எதிர்த்த போராட்டமுமே நாடோடிகள் 2-ன் கதைக்கரு.  ஒரு புறத்தில் நாம் வாழும் சம காலத்தில் சாதி ஆணவ கொலைகள் தொடர் கதையாக நீள்வதும், மறுபுறத்தில் இத்தகைய கொடூரங்களை எதிர்க்கும் சாதி ஒழிப்பு போராட்டத்தை மையப்புள்ளியாக வைத்து பரியேறும் பெருமாள், அசுரன், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளி வருவதும் வரவேற்க வேண்டிய ஒன்று. 

ஜீவாவாக சசிகுமாரும், செங்கொடியாக அஞ்சலியும், செளமியாவாக அதுல்யாவும், பாண்டியாக பரணியும், திரையில் வருகிறார்கள். ஜீவா, செங்கொடி என பெயரிடப்பட்டது திரைக்கதையின் பின்னணியை சொல்லாமல் சொல்வதாகும்.  சசிகுமார், அஞ்சலி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர். பட நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு என்பதோடு பிளாஷ் பேக்காக காதல் அரும்பியதை காட்டுவது புதிய உத்தியாகும். மாணவர்களும், இளைஞர்களும் சாதியற்றவர்களின் குரல்கள் என சாதி ஒழிப்பிற்காக எடுக்கும் நடவடிக்கைகளோடு சாதி ஆணவ கொலைக்கு எதிரான போராட்டத்தை இணைத்து திரைக்கதை – வசனத்தை உருவாக்கி சிறந்த முறையில் இயக்குநர் சமுத்திரக்கனி காட்சி படுத்தி இருக்கிறார் . சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட செளமியாவின், தாயும், தந்தையும் மிகுந்த மன போராட்டத்திற்கு பிறகு தங்களுடைய பெண்ணின் உயிர்தான் முக்கியம் சாதி அல்ல என்று முடிவுக்கு வருகிறார்கள். ஆனாலும் சாதி வெறி பிடித்த அவர்களுடைய சுற்றத்தார்கள் விடுவதாக இல்லை. இது இன்றைய சமூகத்தில் நிலவும் சூழலை சரியாகவே பிரதிபலிக்கிறது.

தன் சாதிக்குள் மகனுக்கு பெண் பார்த்து வந்த ஜீவாவின் தாய் சாதிவெறியர்கள் தன்னுடைய மகனையே கொல்ல முயற்சித்த போது அவர்களை சாடியது நன்றாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.  சாதி ஆணவ கொலை என்பது சாதிவெறி சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. அது உளவியல் ரீதியான வெளிப்பாடும் கூட. சாதிவெறியை போராட்டத்தினால் எதிர் கொள்ளலாம். ஆனால் உளவியல் ரீதியான உணர்வை, சிந்தனையை தூண்ட கூடிய உரையாடல்கள் மற்றும் காட்சிகள் மூலமாகத்தான் மாற்ற முடியும். தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு சமூக அக்கறை உள்ள செய்தியை சொல்லும் இயக்குநர் சமுத்திரக்கனி நாடோடிகள் 2 படத்தில் சாதி ஆணவ கொலைக்கு எதிராக காட்சிகள் மூலமாகவும், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாகவும் மக்களை உணர வைக்கிறார். 

சாதிமறுப்பு திருமணங்களை சட்டங்கள் அனுமதிக்கிறது. ஆனால் சாதி ஆதிக்க உணர்வு உள்ளவர்கள் விரட்டி, விரட்டி அழிக்கிறார்கள். சட்டங்கள் பல இருந்தாலும் சாதி படிநிலையும் சாதி ஆதிக்க உணர்வும் நீடிக்கின்ற வரையில் தீண்டாமை கொடுமையின் கோரவடிவமான சாதி ஆணவக் கொலை நீடிக்கவே செய்யும். இன்றைய இந்திய சமூகத்தில் புரையோடிப்போன ஒரு பிரச்சனையை கையாளுகிறபோது, கதாபாத்திரங்களின் உரையாடல்களிலும், திரைக்கதையை காட்சி படுத்துவதிலும் கலை நயத்திற்கு கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் நீதிமன்ற தீர்ப்புகளில், தேசத்தின் தெருக்களில் விவாதமாக மாறி உள்ள சாதிய ஆணவ கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் சக்திகளுக்கு இப்படம் ஊக்குவிப்பாக அமையும்.  நாடோடிகள் 2 அனைவரும், குறிப்பாக சமூக பிரச்சனைகளில் அக்கறை காட்டுவோர் பார்க்க வேண்டிய படம்.

;