சினிமா

img

அப்படி என்னதான் சொல்கிறான் அசுரன்...!

ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் கதையை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமா அசுரனின் வாயிலாக ஓங்கி ஒலித்திருக்கிறது. பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றி மாறன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.. பஞ்சமி நில அரசியலை தனுஷ் வாயிலாக இன்றைய தலைமுறைக்கு கடத்தியருக்கிறார் இயக்குநர். தனுஷ் போன்ற கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் வாயிலாக சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை படம் உணர்த்தியிருக்கிறது. இயல்பாக நிலம் வைத்திருக்கும் சம்சாரிகளின்  தண்ணீர் பிரச்சனை, காட்டு விலங்குகளின் பிரச்சனை என போகிற போக்கில் அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குநர்.  
வடக்கூரான், தெற்கூரான் குடும்பத்திற்கும் இடையில் நிலம் தொடர்பான ஏற்படும் பிரச்சனையை வைத்து ஆரம்பிக்கும் படத்தின் கதை தண்ணீர் மூலம் விரிகிறது. நீருக்காக வரும் தகராறில் அம்மாவை  தாக்கியதால் கோவப்பட்டு எதிர்த்தரப்பினரை மூத்த மகன் தாக்கவதாக கதை நகர்கிறது. கடைசியில் மூத்த மகள் கொல்லப்படுவதும் ஓராண்டு கழித்து அண்ணனின் இழப்பிற்காக தம்பி பழிவாங்குவதுமாக கதை முழுவதும் ரத்த சகதியோடு  பயணிக்கிறது.
இதற்கிடையே காட்டுப்பன்றிக்காக பொருத்தப்பட்ட மின்வேலியை கடக்கும்போது  இறந்து விடும் நாய்க்காக மகன் கவலைப்படும் போது அவனுக்கு நாய்போச்சேன்னு கஷ்டமா இருக்கு எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலா இருக்கு என்ற வசனம் பட்டியலின மக்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது.
தனுஷின் கடந்த காலத்தை விவரிக்கும் போது ஆசை ஆசையா அத்தை பெண்ணிற்காக  செருப்பு தைத்து கொடுக்கிறார். அந்த செருப்பை அணிந்ததற்காக அந்த பெண் வீதியில் அடித்து அவமானப்படுத்தப்படுகிறார். அப்போதும் கூட அந்த பெண் “என்னை செருப்பை தலையில் தூக்கி வைத்து நடக்கச் சொல்லும் போது கூட வலிக்கல மாமா, வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட இது தப்புன்னு சொல்லலையே மாமா” என்று தனுஷிடம் கண்ணீருடன் கேட்கும் காட்சி, சாதியத்தின் குரூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.  அதற்காக நியாயம் கேட்கப்போகும் போது அதுவரை தன்னிடம் நெருக்கமா இருந்த முதலாளியின் சாதிய ஆதிக்க முகம் வெளிப்படுகிறது. அந்த கோபம் பஞ்சமி நிலத்தை மீட்கும் உரிமைப்போராட்டமாக மாறுகிறது. இந்த போராட்டத்தில் தனது குடும்பம் மொத்தத்தையும் இழந்த பின்  சிவசாமி தனது அனுபவத்திலிருந்து  காலசூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்வதாக கதையை அமைத்துள்ளார் இயக்குநர். 
கடைசியில் மகன் செய்த கொலைக்காக தான் பலியை  ஏற்றுக்கொள்ளும் சிவசாமி நம்மகிட்ட காட வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க , காசு வச்சுருந்தா புடுங்கிக்குவானுங்க ஆனா படிப்ப மட்டும் முடியாது. ஆனா படிச்சுட்டு அதிகாரத்திற்கு வந்தப்பறம் மத்தவங்க உனக்கு செஞ்சத நீ யாருக்கும் செஞ்சுறாத என்ற அறம் பேசி கதை முடிகிறது.
உண்மையில் படத்தின் கதை முடிந்தாலும்  இன்றைய காலகட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்பிலும், சொகுசான பள்ளி வாகனத்திலும் கூட ஷு கால்களுடன் பயணிக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு  காலில் செருப்பில்லாமல் நடப்பார்களா என்பதே பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். அத்தகையவர்களிடம்  சாதியம், தீண்டாமை என்ற சமூக கசடுகளையும்,  பழிவாங்குதல், நட்பு, முதல் காதல், வாழ்வின் எதார்த்தம் இரண்டாம் காதல் குடும்பம், அதன் மீதான அன்பு, இயலாமை, தற்காப்பு, துரோகம், ஊழல், வர்க்கம்  போன்ற சமூக வாழ்வியலின் எதார்த்த்தத்தை அரசுரன் வழியாக எளிதாக கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
இதுவரை தீய செயல்களை செய்பவர்களை அரசுர்களாக காட்டிய தமிழ் சினிமாவில்  படிப்பின் தேவை என்ன என்பதை நம் குழந்தைகளுக்கு கற்பித்து  செல்கிறான் அசுரன்.

- எம்.பாண்டீஸ்வரி
 

;