கட்டுரை

img

பார்த்தீனியம் கம்போஸ்ட் உரம் செய்வது எப்படி?

இன்று நமது நாட்டில் முக்கிய களைகளில் ஒன்றாக பார்த்தீனியம் களை உள்ளது. சாலையோரங்களில் நீர்நிலைகளுக்கு அருகில், வறண்ட நிலங்கள் மட்டுமல்லாமல் தோட்டக் கலை நிலங்கள், காடுகளில் கூட பெருகி மனிதர்கள், கால்நடைகளுக்கு இன்னல்களை ஏற்பட செய்வதுடன் வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் இழப்புகளை ஏற்படச் செய்கிறது. நமது நாட்டில் மட்டும் சுமார் 35 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பார்த்தீனியம் களையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பிரச்சனையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு தேவையான இயற்கை உரத்தை பெறுவதுடன் இயற்கை முறைகளில் தங்களது சாகுபடி பணிகளை தொடர முடியும்.

பார்த்தீனியம் கம்போஸ்ட் உரம் செய்யும் முறை
விவசாயிகள் தங்கள் நிலங்கள், தோட்டங்களில் 3X6X10 ஆடி ஆழம், அகலம் மற்றும் நீளத்திற்கு குழிகள் வெட்ட வேண்டும். இவ்வாறு குழிகள் எடுக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. இவ்வாறு செய்த பின் 100 கிலோ சாணம், 10 கிலோ யூரியா (தழைச்சத்து) மற்றும் ஒரு டிரம் அளவிற்கு தண்ணீரை குழிக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நிலத்தில் உள்ள பார்த்தீனியம் களையை சேகரித்து, 50 முதல் 100 கிலோ வரை குழியில் பரப்ப வேண்டும். பின்னர் இதில் அரை கிலோ அளவிற்கு யூரியாவை தெளிக்க வேண்டும். இவ்வாறு முதல் அடுக்கை அமைத்த பின் இது போன்று பல அடுக்குகளை குழியில் மேற்கண்ட கலவையை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்த பின் விவசாயிகள் தங்கள் கால்களை கொண்டு நன்றாக அழுத்தி விட வேண்டும். இந்த கம்போஸ்ட் கலவை நிலத்தில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு காணப்பட வேண்டும். பின்னர் இதனை மாட்டு சாணம், மண் மற்றும் உமி கொண்ட கலவை கொண்டு நன்றாக மூடி விட வேண்டும். சுமார் 4 முதல் 5 மாதங்களில் நமக்கு நன்கு ஊட்டமேறிய கம்போஸ்ட் உரம் கிடைக்கும். சுமார் 100 கிலோ பசுமையான பார்த்தீனியத்தில் இருந்து 37-45 கிலோ வரை இயற்கை உரமாகிய கம்போஸ்ட் நமக்கு கிடைக்கும்.இவ்வாறு பார்த்தீனியம் கம்போஸ்ட் உற்பத்தி செய்த பின் இவற்றில் சில குச்சிகளை காணலாம். எனவே ஒழுங்காக கம்போஸ்ட் ஆக வில்லை என்று கருத வேண்டியதில்லை. நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கம்போஸ்டை சல்லடை கொண்டு சலித்து 1, 2, 3 முதல் 5 கிலோ பாக்கெட்டுகளில் அடைத்துவிட்டு காய்கறி தோட்டங்களுக்கு (Kitchen Garden) பயன்படுத்தலாம். தோட்டக் கலை மற்றும் பிற பயிர்களுக்கு 25 முதல் 50 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். பார்த்தீனியம் கம்போஸ்டை ஆய்வு செய்து பார்த்த போது சாதாரண கம்போஸ்ட்டுகளை காட்டிலும் இரண்டு மடங்கு சத்துகளும், மண்புழு உர கம்போஸ்ட்டின் அளவிற்கு சத்துகளை கொண்டதாக உள்ளது. மேலும் இதில் சில நுண்ணூட்ட சத்துகள் (Micro Nutrints) உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பார்த்தீனியம் கம்போஸ்ட் உரங்கள் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தாது. மேலும் குறைந்த செலவில் நிலத்தில் உற்பத்தி திறன் பெருக பெரிதும் உதவுகிறது. வேளாண் நிலங்களில் அடி உரமாக 2.5 - 3.0 டன்கள் வரை ஒரு ஹெக்டர் நிலத்திற்கு பயன்படுத்தலாம். காய்கறி பயிர்களில் 4 - 5 டன்கள் வரை ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு பயன்படுத்தி நல்ல பலன்களை பெறலாம். வெப்ப காலங்களில் 4 முதல் ஐந்து மாதங்களில் தயாரிக்கப்படும் பார்த்தீனியம் கம்போஸ்ட் உரம் குளிர் காலங்களில் அல்லது குளிரான பிரதேசங்களில் உற்பத்தி செய்ய கூட கால அளவு தேவைப்படும். எனவே தமிழக விவசாயிகள் பார்த்தீனியம் செடி களை தங்கள் நிலங்களில் உள்ளதை பற்றி கவலைப்படாமல் இதனை இயற்கை உரம் செய்ய ஒரு வாய்ப்பாக கருதி பார்த்தீனியம் கம்போஸ்ட் உரத்தை தங்கள் நிலத்தில் தோட்டங்களில் உற்பத்தி செய்து குறைந்த செலவில் இயற்கை வேளாண் சாகுபடி பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெறலாம்.

வகை                                                                              சத்துக்கள் சதவீதம் 
                                                                தழை    மணி    சாம்பல்    கால்சியம்

பார்த்தீனியம் கம்போஸ்ட்                 1.05         0.84         1.11             0.90
ஊட்டமேற்றிய தொழு உரம்               0.45       0.30         0.54             0.59
மண்புழு கம்போஸ்ட்                           1.61        0.68        1.31              0.65

முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

;