கட்டுரை

img

பொது சுகாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் மோடி அரசின் பட்ஜெட்

இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து பொருளாதார அறிஞர்களும், சமூக அக்கறை உள்ளோரும் விடுத்துள்ள ஏராளமான பதிவுகளை, செய்திகளை நாம் தினந்தோறும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்களிலும் பார்க்கிறோம்.  ஏற்கென்வே மிக மந்த நிலையில் இருக்கும் நம் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைப்பதற்கான ஏற்பாட்டை ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி, சேவைகளை தனியாருக்கு ஒப்படைக்க இந்த நிதி நிலை அறிக்கை வழி வகுக்கிறது. 
நிர்மலா சீத்தாராமனின் முன்மொழிவுகள்
கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 62,659 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து இந்த ஆண்டு 65,012 கோடி ரூபாய் பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு குறைவு என்பது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஆண்டை விட 3 கோடி ரூபாயே அதிகமாக்கப்பட்டுள்ளது. அதாவது சடங்காக ஒதுக்கீடு என்பதை செய்து விட்டு அடிப்படை வேலைகளை, திட்டங்களை கூட செயல்படுத்திட முடியாமல் போவதற்கே இந்த நிலை இட்டுச் செல்லும். இந்தியாவில் பல தொற்று மற்றும் தொற்றா நோய்கள் இன்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு காராணம் வலுவான பொதுத்துறை (மருத்துவமனைகள், அரசு இயந்திரம், ஊழியர்கள்) தான். அதை மறுதலித்து, புதிய வழிமுறையை கொண்டு வர இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முனைகிறது.
இரண்டாவதாக, தேசிய சுகாதார கொள்கை எனும் பேரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2025 ஆண்டில், 2.5% அளவுக்கு உயர்த்தலாம் என இலக்கு தீர்மானித்துள்ள இந்த அறிக்கை தற்போது 1% மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை. காரணம் வரும் 5 ஆண்டுகளில் 2.5% அளவுக்கு உயர்த்த வேண்டுமென்றால், வரக்கூடிய  ஒவ்வொரு ஆண்டும் 25% நிதி ஒதுக்கீட்டை அதிகமாக்க வேண்டும்.  இது சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் இதுவரை இருந்த அரசுகள் பொது சுகாதாரத்துக்கு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கியதே இல்லை என்பதே யதார்த்தம்.  இந்த பின்னணியில் தான் இந்த அரசின் கொள்ககைகளை அணுக வேண்டியுள்ளது. ஏற்கெனவே பிஜேபி அரசு தனது கனவு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” காப்பீட்டு திட்டத்தை பெருமளவுக்கு விரிவுபடுத்திட முயற்சிக்கிறது. மருத்துவ காப்பீடு மேலோட்டமாக பார்த்தால், பொது மக்களுக்கு பெரிய சேமிப்பு என நினைக்க தோன்றும். ஆனால் உண்மை நிலை வேறு. 
புதிய வார்த்தை ஜாலங்கள்
தற்போதுள்ள காப்பீட்டு திட்டத்தை சேர்த்து இந்தியா முழுதும் “நல்வாழ்வு மற்றும் சுகவாழ்வு மையங்களை” உருவாக்குவதற்கும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா எனும் விரிவடைந்த காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள “நல்வாழ்வு மற்றும் சுகவாழ்வு மையங்களை” கிராமப்புறங்களில் இயக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. நிதியே ஒதுக்காத போது, 2019 ஆம் ஆண்டில் மேற்கூறிய மையங்கள்  29,000 உருவாக்கப்பட்டதாம். வரும் ஆண்டில் 1,50,000 மையங்கள் புதிதாக துவக்கப்படுமாம். இல்லாத கடையில் எதற்காக, யாருக்காக டீ ஆற்ற வேண்டும் என்பதே கேள்வி.  இரண்டாவதாக, தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NHRM) கடந்த பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள மிக முக்கியமான திட்டம். இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்த இயக்கம் மூலமாகவே பல சுகாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் கிராமங்களின் உண்மை நிலையும், அதன் தேவைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தை முற்றிலும் செயல் இழக்க வைக்கும் வேலையாக இந்த இயக்கத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.  இந்த திட்டத்தை முடமாக்கி விட்டு, நாம் ஏற்கெனவே பதிவிட்டது போல், “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தை முன்னுரிமையாக்கி உள்ளது இந்த அரசு. இந்த அரசு பதவியேற்றதிலிருந்தே “வாயால் வடை சுடும்” பல வேலைகளை செய்து வருவதை நாம் அறிவோம்.  வங்கித் துறையில் “ஜன் தன்” கணக்குகளை போல் சுகாதாரத் துறையில் பல கோடி மக்களை “ஆயுஷ் மான் பாரத்” திட்டத்தில் இணைத்து விட்டோம் என ஒரு கணக்கை காட்டுவதற்காகவே மற்றைய திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, குறைப்பு செய்யப்படுகின்றது. சரி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதை பிரதான் மந்திரி ஜன்ஆரோக்கிய யோஜ்னா நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்துவார்களாம்; அதற்கு 6,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்களாம். 
இந்த திட்டத்தில் இதுவரையில் 12 கோடி பேர் பதிவு செய்து இணைந்துள்ளார்களாம். அதில் 81 லட்சம் பேர் இத்திட்டம் மூலம் காப்பீட்டு இழப்பீடு தொகையை கேட்டுள்ளார்களாம். இதெல்லாம் புள்ளி விவரங்கள் தான். ஆனால் உண்மை விவரத்தை அமைச்சர் சொல்லவே இல்லை. ஒன்று தெளிவாக புரிகின்றது. சுகாதாரத்துக்கான செலவுகளை காப்பீட்டு திட்டங்கள் மூலமே மக்கள் பெற முடியும் . அரசு மருத்துவமனைகள், இலவச திட்டங்கள் இனிமேல் அறவே இருக்காது. இது ஒரு வகையான திட்டக் கொலை என்றால், நிதி ஆயோக் பரிந்துரைகளை ஏற்று கொள்கிறோம் எனும் பேரில் நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளது ஒட்டு மொத்தமாக பொது சுகாதாரத்தை குழி தோண்டிப் புதைப்பதாகும். 
படிப்படியாக சவக்குழிக்கு
இந்திய பொது மருத்துவம் இன்னும் ஓரளவுக்கு நாடித்துடிப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதற்கு காரணங்கள் பல உண்டு என்றாலும், மிக முக்கிய காரணி அரசு (மத்திய & மாநில) மருத்துவமனைகளும், கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் தான். இதன் எண்ணிக்கை மக்களின் தேவைக்கேற்ப இல்லை என்றாலும், ஓரளவேணும் சிறு நிவாரணங்களைத் தருகிற, பெரும் உயிரிழப்புக்களை தடுத்துள்ள பங்கு இவற்றையே சாரும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.  இந்த ஆகப்பெரும் மக்கட் பணியினை செய்யும் மருத்துவமனைகளை தனியாருக்கு “தானம்” கொடுக்கும் ஒரு கொள்கை முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த திட்டக் கமிஷனை மொத்தமாக கலைத்து விட்டு, நிதி ஆயோக் எனும் அமைப்பை மோடி அரசு உருவாக்கியது. 
இந்த நிதி ஆயோக், தான் கடந்த காலத்தில் இந்தியாவில் ”மாட்டு மூத்திரத்தின்” பயன்களை கண்டுபிடிக்க தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென முன்மொழிந்தது. இந்த அமைப்பு அடுத்ததாக இப்போது சொல்லியுள்ள யோசனை என்ன தெரியுமா?  மாவட்ட தலைமை மருத்துவமனைகலிலும், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் “பொது மற்றும் தனியார் பங்கேற்பு” திட்டத்தின் மூலம், மருத்துவமனைகளை ஒழுங்கமைப்பது எனப் பரிந்துரைத்து, மேலும் இம்மருத்துவமனைகளில் உள்ள 50% உள் நோயாளிகளை கட்டணத்துடன் பராமரிப்பது (MARKET BEDS), மற்றவர்களை கட்டணமில்லாமலும் பார்ப்பது எனும் முறையை அறிமுகம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  இப்படி கட்டண முறைப்படி இருக்கும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு பராமரிக்கப் படுகிறார்களோ அதுபோல் கவனிப்பும், அதற்கேற்ப தொகையும் வசூலிக்கப்படும். இதே நடைமுறை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இதுஅப்பட்டமான தனியார்மயமாக்கல்
இந்த திட்டத்தை வரும் நிதியாண்டிலிருந்தே அமல்படுத்தப் போவதாக நிதி அமைச்சர் சொல்கிறார். மாநில அரசுகள் பெருமளவுக்கு சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்க முடியாததால் தான் இந்த வழிமுறை என்றும், நோயாளிகளை பராமரிப்பதில் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது என்றும் அநியாயமாக பொய் சொல்லி இருக்கிறார். ஒரு சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். கட்டணமில்லா மற்றும் கட்டணத்துடன் பராமரிக்கப்படும் நோயாளிகள் எப்படி பார்க்கப்படுவர் என்று? இதை தவிர வேறு சில யோசனைகளும் அரசுக்கு இருப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். 
வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காச நோயை முற்றிலுமாக ஒழித்து விடுவதாக நிதி நிலை அறிக்கை சொல்கிறது. காச நோய் அதற்கான தடுப்பு விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை என அனைத்தும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் மூலம் தான் இதுவரை செய்யப்பட்டு வந்தது. அதற்கும் ஆபத்து. ஏற்கெனவே கூட்டு மருந்து சிகிச்சைக்கு கட்டுப்படாத காச நோய் இந்தியாவில் அதிகமாகி உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் சொல்லுகின்றன. 
மருத்துவக் கல்வி முற்றாக தனியாரிடமே!
 மருத்துவமனையும், நோயாளிகளின் சிகிச்சையும் மட்டும் தான் தனியாரிடம் என எண்ணி விட வேண்டாம். மருத்துவ பட்டப்படிப்பையும் முற்றாக அவர்கள் கையில் கொடுக்க ஏற்பாடாகி விட்டது .
அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தனியார் பங்களிப்போடு மருத்துவமனைகள் கட்டப்படுமாம். அதோடு இந்த மாவட்ட மருத்துவமனைகளும் இணைக்கப்படுமாம். ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென்றால், அங்கே நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் ஒரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்த செலவை கூட தனியாருக்கு கொடுத்து அவர்களுக்கு ”நட்டம்” ஏற்படுத்திட கூடாது எனும் நல்லெண்ணம் இருக்கு இந்த அரசுக்கு. இந்த திட்டம் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு முற்றிலும் முரணானது. தரமாக சேவை செய்து கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைகளை இப்படி கொடுப்பது தனியாருக்கு எவ்வளவு பெரிய லாபம்? ஆக ,முழுக் கொள்ளை சுரண்டலுக்கு அரசே பட்டு கம்பளம் விரித்து வரவேற்கிறது. 
மருத்துவ பட்டப்படிப்பை தனியார் மயமாக்கும் முயற்சியே “நீட்” தேர்வு முறை என்பதை துறை சார் வல்லுநர்கள் ஆதாரங்களோடு சொன்னது இன்று நிஜமாகி வருவதை நம்மால் புறந்தள்ள முடியுமா? 
இதைத் தவிர சில விவரங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளான AIIMS, PGIMER சண்டிகர், NIMHANS (மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சைக்கான தேசிய கல்லூரி மருத்துவமனை - பெங்களூரு) ஆகிய உயர் கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிதியாண்டிலிருந்து மத்திய அரசு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும்.  மக்களின் தேவைக்காக அக்காலத்தில் சிறந்த மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த சீரிய கல்வி நிலையங்களை குலைத்து விட்டு ஒட்டு மொத்தமாக அதை தனியாருக்கு கொடுக்கும் இந்த வேலையை என்ன சொல்லி அழைப்பது? 
நிதி ஆயோக் எனும் மூடர் கூடம்
நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் பேரிலேயே பொது சுகாதாரத்தை தனியாருக்கு கொடுப்பது எனும் மதி கெட்ட முடிவை எடுத்துள்ளது அரசு. இந்திய சுகாதாரத் துறை “ஒரு மூழ்கும் கப்பல், அதை கரை சேர்க்கவே இந்த ஆலோசனைகள்” என்று கொக்கரிக்கிறார். அந்த அமைப்பின் முக்கிய ஆலோசகர் அலோக் குமார். நாங்கள் இந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காகவும், உலகத் தரத்தில் நம்மை முன்னேற்றிக் கொள்ளவும் தான் இத் திட்டங்கள் என சொல்லிவிட்டு கடைசியாக நிறைவு செய்யும் போது இப்போது நாங்கள் சொல்லியிருப்பது எல்லாமே “குஜராத் மாடல்” தான் என கூறியுள்ளார். தனியார்மயத்தின் தோற்றுவாய் எங்கு உள்ளது என இப்போது புரிகிறது. அரசியல் சிந்தாந்த நடைமுறைகளுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்தின் இறையாண்மையை அடகு வைக்க போவதற்கும் அவர்களின் மாடல் அதுவாகவே இருக்கும்.  அதை உடைத்திட வேண்டும். அதற்கு மக்கள் திரளே அவசியம். திரட்டுவோம், உடைப்போம்!

;