கட்டுரை

img

இந்திய சட்டங்களும் காஷ்மீர் சட்டங்களும்- மோடி அரசாங்கத்தின் பொய்யுரைகள்! - அ.அன்வர் உசேன்

காஷ்மீருக்கு பொருந்தும் 370வது பிரிவை முடக்கியதை நியாயப்படுத்த மோடி அரசாங்கம் பல வாதங்களை முன்வைக்கிறது. அவை பொய் மூட்டைகளாக உள்ளன. காஷ்மீரில் நில சீர்திருத்தம் மற்றும் நில உரிமை குறித்து பொது வெளியில் பல பதிவுகள் உள்ளன. ஆனால் வேறு சில காஷ்மீர் சட்டங்கள் இந்திய சட்டங்களைவிட முற்போக்கானவை என்பதையும் கவனிக்க வேண்டும். 370வது பிரிவை நீக்கியதன் மூலம் இந்த முற்போக்கான சட்டங்கள் நீர்த்து போகும் நிலைமை உருவாகியுள்ளது. அவை குறித்து சில ஒப்பீடுகள் கீழே தரப்படுகின்றன.

இந்திய சட்டங்கள்  காஷ்மீருக்கு பொருந்தாதா?

மோடி அரசாங்கம்: 370வது பிரிவு காரணமாக இந்தியா வின் எந்த ஒரு சட்டமும் ஜம்மு - காஷ்மீரில் அமலாக்க இயலவில்லை.

உண்மை

 • காஷ்மீருக்கு தனி ஜானாதிபதி, தனி பிரதமர், தனி கொடி என்பது நீக்கப்பட்டது.

 

 • நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற வகை செய்யும் 97ல் 94 பிரிவுகள் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப் gட்டுள்ளன. 
   
 • மத்திய மாநில அரசாங்கங்களின் கூட்டு பட்டியலில் உள்ள 47 பிரிவுகளில் 26 பிரிவுகள் காஷ்மீருக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளன.
 • இந்திய அரசியல் சட்டத்தின் 390 பிரிவுகளில் 260 காஷ்மீருக்கு பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 130 பிரிவுகளை பொறுத்தவரை அதே போன்ற சட்டபிரிவுகளை காஷ்மீர் சட்டமன்றம் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில் இயற்றியுள்ளது. உதாரணத்திற்கு ஆளுநர் அதிகாரங்கள், சபாநாயகர்/உதவி சபாநாயகருக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரங்கள், கட்சிதாவல் தடை சட்டம் ஆகியவற்றை காஷ்மீர் சட்டமன்றம் இயற்றியுள்ள சட்டங்கள் இந்திய சட்டங்களை போலவே உள்ளன.  எனவே 370வது பிரிவின் கீழ் இந்தியாவின் எந்த ஒரு சட்டமும் காஷ்மீருக்கு பொருத்த முடியவில்லை எனும் மோடி அரசாங்கத்தின் வாதம் பொய் ஆகும். துரதிர்ஷ்ட வசமாக இந்த முக்கிய அம்சம் பொது தளத்தில் விவா திக்கப்படவில்லை.

காஷ்மீர் கல்வி சட்டம் இந்திய சட்டத்தைவிட சிறந்தது

அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்: 370வது பிரிவு காரணமாக தகவல் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டம் ஆகியவற்றை காஷ்மீரில் அமல்படுத்த இயலவில்லை.

உண்மை:

 • 2010ம் ஆண்டு காஷ்மீர் சட்டமன்றம் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.
 • தகவல் உரிமை சட்டம் இந்தியாவில் 2005ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டே இந்த சட்டத்தை காஷ்மீர் சட்டமன்றம் நிறை வேற்றிவிட்டது. 2009ம் ஆண்டு இந்திய தகவல் உரிமை சட்டம் காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
 • காஷ்மீரின் தகவல் உரிமை சட்டம் இந்திய சட்டத்தைவிட முற்போக்கானது. தகவல் தருவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட அரசாங்க துறைகள் இந்திய சட்டத்தைவிட குறைவு. 
 • அதேபோல தகவல் ஆணையர்கள் காஷ்மீரில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையானவர்கள். ஆனால் இந்திய சட்டத்தில் அவர்கள் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் அளவில்தான் இணையானவர்கள்.
 • கல்வியை பொறுத்தவரை இந்திய சட்டம் 6 முதல் 14 வயது வரைதான் இலவச கல்வி பற்றி பேசுகிறது. ஆனால் காஷ்மீர் சட்டம் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வியை உத்தரவாதம் செய்கிறது.
 • அதே போல் இந்திய அரசியல் சட்டத்தில் “மதச்சார் பின்மை” என்பதும் “சோசலிசம்” என்பதும் 1976ம் ஆண்டில் தான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி சேர்த்தார். ஆனால் காஷ்மீர் அரசியல் சட்டத்தில் 1956ம் ஆண்டே இந்த வார்த்தைகள் இணைக்கப்பட்டுவிட்டன.

காஷ்மீர் சட்டம் அளிக்கும்  பெண்கள் உரிமை:

மோடி அரசாங்கம்: 370வது பிரிவு முடக்குவதன் மூலம் முத்தலாக் சட்டம் காஷ்மீர் பெண்களுக்கும் நன்மை பயக்கும்.

உண்மை: 

2007க்கு முன்புவரை காஷ்மீர் மக்களுக்கு முஸ்லீம் ஷரியத் சட்டம் பொருந்தவில்லை. அவர்களுக்கு காஷ்மீரின் பாரம்பரிய சட்டங்களே பொருந்தின (இப்பொழுதும் நாகா மக்களுக்கு இருப்பது போல). அவை சில முக்கிய அம்சங் களில் முஸ்லிம் தனிநபர் சட்டங்களிலிருந்து வேறுபட்டிருந் தன. முற்போக்கானதாகவும் இருந்தன. உதாரணத்திற்கு:

 • இந்திய சட்டப்படி திருமணம் பதிவு என்பது முஸ்லிம் களுக்கு கட்டாயம் இல்லை. நிக்காஹ்வின் பொழுது ஜமாத் குழு மட்டுமே அதனை பதிவு செய்கிறது. ஆனால் காஷ்மீர் சட்டப்படி அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஜமாத்தின் பதிவு மட்டும் போதாது. இதன் மூலம் ஜமாத் மட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்க வாய்ப்புள்ள சில தவறுகள் தடுக்கப்படுகின்றன.
 • முஸ்லிம் தனி நபர் சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந் தைக்கு பெற்றோர்களின் சொத்து உரிமை கிடையாது. ஆனால் காஷ்மீர் சட்டம் அந்த உரிமைக்கு வழிகோலுகிறது.
 • முஸ்லிம் தனிநபர் சட்டப்படி மகளுக்கு சொத்து ரிமை என்பது மகனுக்கு கிடைப்பதைவிட குறைவாகவே கிடைக்கும். ஆனால் காஷ்மீர் சட்டப்படி மகளுக்கும் மகனுக்கும் சமமான சொத்துரிமை கிடைத்து வந்தது. ஒரு திருமணமான முஸ்லிம் பெண் தந்தையுடன் வசித்து வந்தால் (கணவனுடன் பிரச்சனை காரணமாக) அந்த பெண்ணுக்கும் சொத்தில் உரிமை உண்டு. இவையெல்லாம் சில முற்போக்கான அம்சங்கள் ஆகும். இப்பொழுது முத்தலாக் சட்டம் அவர்களுக்கு பொருந்தலாம். ஆனால் மேற்கண்ட உரிமைகள் என்ன ஆகும் எனும் கேள்வி எழுகிறது.

காஷ்மீர் பெண் வேறு மாநிலத்து ஆணை திருமணம் செய்தால்  குடி உரிமை இழப்பாரா?

மோடி அரசாங்கம்: 370/35ஏ பிரிவின் படி ஒரு காஷ்மீர் பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஆணை திரு மணம் செய்தால் காஷ்மீர் குடி உரிமையை இழக்கிறார். 

உண்மை:

இது முற்றிலும் உண்மைக்கு மாறான கூற்று. 
 

 • எக்காரணம் கொண்டும் வேறு மாநிலத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்யும் பெண் காஷ்மீர் குடி உரிமையை இழப்பது இல்லை. அந்த கணவன் இறந்துவிட்டால் சொத்து உரிமையையும் காஷ்மீர் பெண் இழப்பது இல்லை.
 • இந்த சட்ட உரிமையை 2016 சுசீலா எனும் பெண் தொடர்ந்த வழக்கில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெளிவாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது.H    இந்த சட்ட உரிமையை 2016 சுசீலா எனும் பெண் தொடர்ந்த வழக்கில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெளிவாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது.
 •  உண்மையில் காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்யும் வேறு மாநிலத்து ஆண்தான் காஷ்மீர் குடி உரிமை யை பெற இயலாது. இத்தகைய சட்டம் காஷ்மீரில் மட்டு மல்ல; சமீபத்தில் கோவாவிலும் பாஜக அரசாங்கத்தினர் கொண்டு வந்துள்ளனர்.

காஷ்மீரில் இட ஒதுக்கீடு இல்லையா?

மோடி அரசாங்கம்: 370வது பிரிவு முடக்குவதன் மூலம் காஷ்மீரிலும் இட ஒதுக்கீடு அமலாகும். 

உண்மை:

காஷ்மீரில் பிற்படுத்தப்பட்ட மக்கள்/ பட்டியலின மக்கள்/ பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. 1989ம் ஆண்டே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது. 13 பிரிவினர் பட்டியலினத்திலும் குஜ்ஜார் மற்றும் பகர்வால் உட்பட 11 பிரிவினர் பழங்குடி பிரிவிலும் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் கூறப் போனால் அவர்களது இட ஒதுக்கீடு சட்டம் முற்போக்கானதும் கூட. உதாரணத்திற்கு மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு அமலாக் கப்படுகிறது.  அதே போல இட ஒதுக்கீடு இடம் நிரப்பப்படவில்லை எனில் எக்காரணம் கொண்டும் அது பொது பட்டியலுக்கு வராது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் அது நீட்டிக்கப்படும். 

பிரச்சனை எங்கு வருகிறது? வேறு மாநிலத்தை சேர்ந்த வர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்துமா என்பதுதான்! இட ஒதுக்கீடுக்கு அடையாளம் காணப்படுவது அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்குதான் பொருந்தும். ஒரு மாநிலத்தில் பட்டியலின பிரிவில் உள்ளவர் இன்னொரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளார். அதே போல ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர் வேறு மாநிலங்களில் பொது பட்டியலில் உள்ளார். இந்த முரண்பாடு பல மாநிலங்களில் பிரச்சனையாக உள்ளது. காஷ்மீரிலும் உள்ளது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திற்குள் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி இப்படி பல சட்டங்கள் காஷ்மீரில் முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. இனி இந்த முற்போக்கு சட்டங்களின் கதி என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக முன்வந்துள்ளது.

ஆதாரங்கள் : இதழியலாளர் கரன் தப்பார் மற்றும் தேசிய சட்ட பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஃபைசன் முஸ்தபா ஆகியோரிடையே நடந்த விவாதம்- வயர் மின் இதழ்/29.08.2019. 


 
 

;