கட்டுரை

கொரோனா உலகமும் கொடூர முதலியமும்

உலக வல்லரசுகள் கொரோனா  தொற்றால் நடுங்கி கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில நல்லரசுகள் இந்த நோய் தொற்றை எதிர்த்து தங்களால் இயன்ற வரை போராடிக் கொண்டிருக்கின்றன கொரோனா குறித்து நிறைய தகவல்கள் நாம் அறிந்ததே.  அது இவ்வளவு வீரியத்துடன் பரவும் என் பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள் தான்.

உலக சுகாதார அமைப்பு இந்த நோய்த்தொற்று தொடர்பாக ஒரு கால வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் மாதத்தின் இறுதியிலேயே சீனா தங்கள் நாட்டில் நிமோனியா தாக்குதல் பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தந்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுவதில் உலக வல்லரசுகளின் நான்கு மாத தாமதம் இந்த நோய் தொற்று இன்றைய நிலையை அடைந்ததற்கு ஒரு காரணம்.  மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர்கள் பலர் கொரோனா போன்றதொரு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அக்டோபர் மாதத்திலேயே அறிவித்திருந்தனர். உலகில் எந்த அரசுகளும் இதை கண்டுகொள்ளவில்லை. 

இந்த உலகிற்கு கொரோனா வைரஸ் ஒன்றும் புதிதல்ல இந்த வைரஸ் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இதே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பாதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்த்தொற்று என்ற பட்டியலில் கொரோனா வைத்துள்ளது. இதுபோன்ற  எச்சரிக்கைகளை கணக்கில் கொண்டு உலக வல்லரசுகள் நோய்த்தொற்றை சமாளிக்க முன் தயாரிப்புகளை செய்ததா என்றால், இல்லை. ஒருவேளை குறைந்தபட்ச முன் தயாரிப்புகளை செய்திருந்தால் கூட இவ்வளவு பெரிய உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்திருக்காது. குறைந்தபட்சம் அமெரிக்கா போன்ற நாடுகள் குளோரோக்குவின் மாத்திரைகளை அதிகார பிச்சை கேட்டு பெற்றிருக்கதேவை இருந்திருக்காது. இந்தியா போன்ற வளரும் நாடுகளும் அந்த அதிகாரத்திற்கு பணிந்து குளோரோக்குவின் மாத்திரைகளை  ஏற்றுமதி செய்து இருக்க தேவை இருந்திருக்காது.

சார்ஸ் போன்றகொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் இப்பொழுது கோவிட்19 ஆக மாற்றமடைந்துள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணியாக இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறிய  கருத்துக்களுக்கு இதுவரை எந்த நாடும் செவிசாய்க்கவில்லை. இந்நேரத்தில் உலகில் தற்போது  கொரானா நோய் தொற்றால் அதிகமாக பாதிப்புக்குள்ளான அமெரிக்கா காலநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் உடன்படிக்கைகளை நாங்கள் செயல்பட மாட்டோம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே உலக நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பாக தாங்கள் கொண்டுள்ள எண்ணங்களுக்கு ஒரு சான்றாகும்.

சார்ஸ் என்கிற கொடிய நோய் தொற்று பரவி பல ஆண்டுகள் ஆகின்றன.  அதே கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த மெர்ஸ் என்கிற நோய் தோற்று பரவி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தற்போது வரை  ஏன் இதற்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 நோய் தொற்று பரவி வருகிறது.  கொரானா தொடர்பாக  உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை, நோய்தொற்று தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை, காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களின் தரவுகள்,  சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நாம் பெற்ற அனுபவம் என்று பல இருந்தும் கொரோனாவை குணமாக்கும் மருந்துகளையோ அது வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துகளையோ இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. ஏன் எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏனென்றால் சந்தை அதை கோரவில்லை. தாராளவாத பொருளாதாரத்தில் சந்தையை பொறுத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படும்.  எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. நவீன தாராளமயம் நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகள் இடம் அளித்துவிட்டது . கார்ப்பரேட்டுகளின் ஒரே நோக்கம் லாபம். எவை சந்தையில் லாபம் தரக்கூடியவையோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கார்ப்பரேட்டுகள் மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும் கண்டுபிடிப்பதிலும் நேரம் செலவிட்டனர். மக்களைக் கொல்லும்  பெரும் தொற்றுக்கு மருந்தை விட சரும பொலிவிற்கான க்ரீம்கள் அதிக லாபம் தரக்கூடியது என்று கார்ப்பரேட் நினைக்கும். 2018 இல் உலக சரும க்ரீம்களுக்கான சந்தை மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இதுவே 2025ல் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்றும் கணிக்கப்படுகிறது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதாவது மருந்து தயாரித்து அதிலிருந்து மீட்கும் என்று எதிர்பார்க்கலாமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. தாராளமயமாக்கம் முதலாளித்துவத்தின் சட்டத்திட்டங்கள் அவற்றை மக்கள் நலன் சார்ந்து இயங்க விடுவதில்லை.  தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பந்தயத்தை, தேசங்களின் ஆளும் வர்க்கத்திற்கு இடையேயான சந்தை போட்டிகள் கெடுத்து குட்டிசுவர் ஆக்குகின்றன. அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் இந்தத் தடுப்பு மருந்தை முதலில் தனதாக்கிகொண்டு சர்வதேச நாட்டாமை செய்ய துடிக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருவாயில் அணுகுண்டு தயாரிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்ற அமெரிக்கா உலக நாட்டாமையாக இன்று வரை ஆட்சி செய்கிறது. இன்று அணு ஆயுதத்திற்கு பதிலாக கொரோனா தடுப்புமருந்து. நேற்று முன்தினம் வரை சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவிவருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெர்மனி மருத்துவ கம்பெனியான க்யூர்வேக் ஐ வாங்க முயற்சி செய்தார் என்பதே அந்த செய்தி. க்யூர்வேக் நிறுவனம்தான் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் அதை வாங்க ட்ரம்ப் முயற்சிப்பதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதே அந்த செய்தி. அதன் பின் ஐரோப்பிய யூனியன் இதே கம்பெனிக்கு 85 மில்லியன் பவுண்டுகளை மானியமாக அளித்து உள்ளது நம் சந்தேகத்தை வலுப்படுத்தும்.

இதுபோன்ற நெருக்கடியான காலத்திலும் கார்ப்பரேட்டுகள் மக்களின் அவலநிலையை பணமாக்கவே பார்க்கின்றன. பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளின் விலைகள் 98% உயர்த்தப்பட்டுள்ளன என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.  இந்த மாத்திரைகள் கொரானாவிற்கு எதிராக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரெம்டெசிவிர்  என்கிற மாத்திரைகள் ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏகபோகமாக மாற்றப்பட்டுள்ளது.

முதலாளித்துவ சந்தைப் போட்டி என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றும் என்ற முதலாளித்துவ வாதத்திற்கு எதிராகவே அனைத்தும் உள்ளது என மீண்டும் ஒரு முறை கொரானா பெரும் தொற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது.  எப்போதும் உற்பத்தி சாதனங்களின் தனியுடமை என்பது மனிதகுல வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாகவே இருந்து வந்துள்ளது. இன்று அது மனித குலத்தை அழிவு என்னும் பள்ளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

தீவிர தாராளமயக் கொள்கைகளை பின்பற்றாத நாடுகளே கொரானாவிற்கு எதிரான போரில் மக்களைக் காக்க முன்னணியில் உள்ளன. உலக வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்வதன் மூலமாக  இந்தியா போன்ற நாடுகளிலோ சொந்த நாட்டு மக்களை முட்டாள் ஆக்குவதன் மூலமாக மக்களை பேரழிவை நோக்கி வேகமாக தள்ளி கொண்டுள்ளன. சோசலிச நாடுகள் மட்டுமே மக்களை காக்க தங்களால் இயன்றவரை போராடிக் கொண்டிருக்கின்றன. 

-பாலா

 


 

;