கட்டுரை

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 : பின்னணியில் இருந்து இயக்குவது யார்

(சுப்பிரமணியன் குழுவில் ஆரம்பித்து, கஸ்தூரிரங்கன் குழு அமைக்கப்படுவதற்கு முன்பு வரையில் நடந்தவற்றைப் பற்றியும், அவற்றின் பின்னணியில் சந்தேகப்படும்படி நடந்தவை குறித்து நமக்குள் எழுகின்ற கேள்விகள் குறித்தும் பேராசிரியர் ஜே.ஆர்.வி.எட்வர்ட் எழுதி காலச்சுவடு 2017 பிப்ரவரி மாத இதழில் வெளியான கட்டுரை விளக்கமாகச் சொல்கிறது.  )
 
தேசிய கல்விக்கொள்கை திருப்பங்கள், குழப்பங்கள்
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
'புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான புதிய குழு அமைக்கப்படும்' - இது, அண்மையில் ஒரு நாளிதழில் நான் வாசித்த செய்தி. தேசிய கல்விக் கொள்கை 2016ஐ வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் குழுவின் அறிக்கை குறித்த அரசின் முடிவு என்னவென்று சொல்லாமலே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நல்கியிருந்த அறிவிப்பு பற்றிய செய்தி அது. இந்த அறிவிப்பை 'பல்டி'யாக விளங்கிக் கொண்டிருந்தது அந்த நாளிதழ். இந்த அறிவிப்பை அரசின் பலவீனமாகப் புரிந்துகொண்டிருக்கும் இன்னும் பலர் இருக்கிறார்கள்; குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியினர்.
வரைவு தேசிய கல்விக் கொள்கை 2016க்கு நாடெங்கிலும் பரவலாக எழுந்த எதிர்ப்பைச் செரிக்க முடியாமல் அல்லது சகிக்க முடியாமல், 'புதிய கல்விக் கொள்கையை உடனே நடைமுறைப்படுத்தக் கோரி' கையெழுத்து இயக்கமும் சுவரொட்டி இயக்கமும் நடத்திய கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகான இந்த இரண்டரை ஆண்டுகளில் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்த முதல் நிகழ்வாக இந்த அறிவிப்பைப் புரிந்துகொள்ளலாம், அவரது அறிவிப்பு நேர்மையானதாக இருந்தால்! அரசு மக்களின் எதிர்ப்புணர்வை உள்வாங்கியிருக்கிறது என்ற வரையில் அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மக்களின் உணர்வுகளுக்கோ எதிர்க்குரலுக்கோ மதிப்பளிப்பது பலவீனமாகாது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் பலம் என்ற புரிதல் ஜனநாயகக் காவலர்கள் பலரிடம் இல்லாதிருக்கிறது. அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியதா, கவலைக்குரியதா என்று தீர்க்கமாகச் சொல்லத் தெரியவில்லை. எதிர்ப்பாளர்களை ஏமாற்றும் நோக்கிலோ திசைதிருப்பும் நோக்கிலோ எதிர்க்குரல்களை மழுங்கடிக்கும் நோக்கிலோகூட அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம். உண்மையில் புதிய குழு அமைக்கப்படுமா அல்லது ரகசியமாக புதிய குழு அமைக்கப்பட்டாயிற்றா, அப்படி அமைக்கப்பட்டதென்றால் தற்போதைய அதன் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதான எவ்விதத் தகவலும் இந்நாள்வரை பொதுவெளிக்கு வரவில்லை. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைத் துழாவி இந்த ஐயங்களுக்கு விடைபெற முனைந்தது ஏமாற்றத்திலேயே முடிந்தது. 'புறத்தில் பேசுவது ஒன்று; அகத்தில் எண்ணுவதும் நடைமுறைப்படுத்துவதும் இன்னொன்று' என்றவாறு வெளிப்படைத்தன்மையின்றி இயங்கும் ஓர் அரசின் மனஓட்டங்களைக் கணிப்பது எளிதன்று.
கல்வி, அறிவியல் ஆகியவற்றின் ஆற்றலைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஓர் அமைப்பின் வழிகாட்டுதல்படி ஆளுகை செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014இல் பொறுப்பேற்றவுடன், கல்வியில் 'தாம் விரும்பும்' பல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏ.பி.வாஜ்பேயி தலைமையிலான முந்திய பாஜக ஆட்சியின்போது - பெரும்பான்மை இல்லாததாலோ என்னவோ - பம்மிப்பதுங்கிச் செய்ய முனைந்த பல பிற்போக்கான அல்லது அவற்றினும் பெரிதான மாற்றங்களைத் துணிவுடன் செய்ய விழைகிறது நரேந்திர மோடி அரசு; அல்லது, அரசை வழிநடத்தும் அமைப்பு..
கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஆரம்பக்கல்வி, உயர்கல்வித் துறைகளை உள்ளடக்கிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பை ஸ்மிருதி இரானியிடம் வழங்கினர். கல்வி மீது அக்கறை கொண்ட பலரையும் புருவம் உயர்த்தச் செய்த செயல் இது. புருவம் உயர்த்தியவர்களில் பாஜக ஆதரவாளர்கள் பலரும் உண்டு. கல்வி மீது தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் 'மரியாதை' எத்தகையது என்பதற்கு இது தக்க சான்று. கல்வியோடு துளியும் தொடர்பில்லாத ஒருவரை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக்கியது முதலில் புதிரான செயலாக நமக்குத் தெரிந்தாலும் பின்னாட்களில் அச்செயலின் நியாயம் புரிந்தது. மேலிருந்து வரும் உத்தரவுகளை அப்படியே செயல்படுத்துவதற்கு கல்வித்துறை அனுபவமொன்றும் தேவையில்லையே..
ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களில், 'அடுத்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும்' என்ற தனது கனவை ஊடகங்களிடம் பகிர்ந்தார். கல்வியில் பல மாற்றங்கள் வேண்டும் என்ற கனவைப் பல நாட்களாக சுமந்தலைந்த ஒருவரால்தான் பதவியேற்ற சில நாட்களிலேயே இப்படியொரு அறிவிப்பை நல்க முடியும். கல்வித்துறைப் பிரச்சினைகள் தொடர்பான எந்தவிதப் புரிதலும் இல்லாதிருந்த ஒருவரிடம் இப்படியொரு கனவு இருந்திருக்க முடியுமா? அப்படியானால், இது யாருடைய கனவு?
ஸ்மிருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தோரைவிட, கல்வியில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்துக் கொள்கை வடிவமைப்பை உருவாக்குவதற்கான குழுவை அவர் அறிவித்தபோது அதிர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை அதிகம். காரணம், அந்த ஐவர் குழு உறுப்பினர்களில் நான்குபேர் கல்வித் துறையுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதோர். குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் ஓய்வுபெற்ற மத்திய கேபினட் செயலாளர் - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான பேராசிரியர் ராஜ்புத் மட்டுமே கல்வியாளர். அவரும்கூட ஆர்எஸ்எஸ் சித்தாந்த ஆதரவாளர். பெண்கள், தலித், மதச்சிறுபான்மையினருக்குக் குழுவில் எந்தப் பிரதிநிதித்துவமும் தரப்படவில்லை.
'2015இல் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும்' என்ற ஸ்மிருதி இரானியின் வாக்கு பொய்த்துப் போனது. பிஹார் கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரி, 'ஸ்மிருதி இரானிஜி, புதிய கல்விக்கொள்கை எப்போது வெளியாகும்? உங்கள் காலண்டரில் 2015 எப்போது நிறைவடையும்?' என்ற ட்விட்டர் பதிவும் அதைத் தொடர்ந்த ஸ்மிருதியின் எதிர்வினையும் பரபரப்பான ஊடகச் செய்தியானதை மறந்திருக்க மாட்டோம். அடுத்த சில வாரங்களில் அவசர அவசரமாக வெளியிடப்பட்டது ஓர் 'அரைவேக்காட்டு' வரைவுக் கல்விக் கொள்கை. வரைவுக் கல்விக்கொள்கை தயாரிப்பதற்காய் முறையான கருத்துக் கேட்புகள் நடத்தப்படவில்லை. கருத்துக்கேட்புகள் நடத்தப்பட்டு, கொள்கை தயாரித்திருந்தால் சற்று மேம்பட்டதாய் அமைந்திருக்கும். குழுவினருக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லையா அல்லது அவசியமில்லையென்று கருதினார்களா, தெரியவில்லை. கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், பெற்றோர் என எவரின் கருத்தையும் அறிய முனைப்புக் காட்டாமல் குளுகுளு அறைக்குள் அமர்ந்தவாறே கொள்கைகள் எழுதப்பட்டுள்ளன. வரைவு அறிக்கை வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே ஸ்மிருதியும் ஜவுளித்துறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கல்விக் கொள்கை குறித்து கருத்துக்கேட்புகள் நடத்தப்பட்டு வருவதாகப் புதிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இதுவரை கருத்துக்கேட்பு நடத்தப்பட்டுள்ளதாக புதிய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்த தகவல் வியப்புக்குரியது. ஏனெனில், முறையான கருத்துக்கேட்புகள் அந்த நாள் வரை நடத்தப்படவேயில்லை; நடத்தப்பட்டதெல்லாம் நாடகங்கள் மட்டுமே. ஆளுங்கட்சி ஆதரவாளர்களைக் கூட்டிவைத்து, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவைத் தெரிவிக்க வைக்கும் நாடகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேற்றப்பட்டன. இக்கூட்டங்களில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட அப்பாவிகள் பலர் வரைவுக் கல்விக்கொள்கையில் இருப்பது என்ன என்ற விவரமே தெரியாதவர்கள். தங்களுக்குப் பாதகமான பல அம்சங்கள் அதற்குள் இருப்பதைக்கூட அறியாதவர்கள். கல்வியோடு தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர்களுடன் சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தெளிவான பார்வை கொண்ட சமூகவியலாளர்களிடமெல்லாம் கருத்துக்கேட்பு நடத்தினால்தானே, உண்மையான கருத்துக் கேட்பாக அமையும்? கூடங்குளம் முதல் கல்விக்கொள்கை வரை கருத்துக் கேட்புகளின் லட்சணம் இதுதான்.
வரைவுக் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டவுடன் அதுகுறித்துப் பல்வேறு எதிர்வினைகளும் விமர்சனங்களும் எழத் தொடங்கின. அதற்கு முக்கிய காரணம், ஜனநாயகவாதிகளுக்கும் சமயச் சார்பற்றவர்களுக்கும் இந்த அரசு மீது இருக்கும் அவநம்பிக்கை. தேசத்தின் பன்மைத்தன்மை மற்றும் கருத்துரிமை மீது நடைபெறும் பலவகைப்பட்ட தாக்குதல்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஆட்சியாளர்களின் அணுகுமுறையும் இந்த ஆளுகையில் அடிப்படைவாதிகள் பெற்றிருக்கும் கட்டற்ற சுதந்திரமும் உண்மையான தேசப்பற்றாளர்களுக்குக் கலக்கம் விளைவிப்பவை. அறிவியலைக்கூட மதச்சிமிழுக்குள் அடைக்கும் நவீன உத்திகளை உருவாக்கத் தெரிந்த ஓர் அரசு, கல்வியை விட்டு வைக்குமா என்ற ஐயம் நடுநிலையாளர்களிடம் எழுவது இயல்புதானே?
1985இல் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கையானது, 1986இல் அப்போதைய பிரதம அமைச்சர் ராஜீவ் காந்தியால் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. காந்தியின் கிராமராஜ்யக் கனவை நனவாக்கும் முயற்சியாக விளக்கப்பட்ட கிராமியப் பல்கலைக்கழகங்கள், கல்வியின் வெளிவட்டத்தில் கிடப்போரை உள்ளிழுக்கும் உயரிய நோக்கம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட திறந்தநிலைப் பல்கலைக்கழகத் திட்டம் போன்ற 'புரட்சி'த் திட்டங்கள் சில இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக கல்விக்கு இக்கொள்கை பெரும் கெடுதலையே விளைவித்தது. கல்வியை வணிகப் பண்டமாக மாற்றிய அக்கொள்கையானது கல்வியுடன் பிணைந்திருந்த அறத்தைக் கொன்று புதைத்தது. புதிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமாகிய 'சுயநிதிக் கல்வி'த் திட்டமானது கல்வியைப் பரவலாக்கவும் ஜனநாயகப்படுத்தவும் பெரிதும் துணை புரியும் என்ற பிரச்சாரத்தில் மயங்கிப் போயினர் பலரும். சமூக அக்கறை கொண்ட பலர் அதன் அபாயம் குறித்து எச்சரித்தது எவ்விதப் பலனையும் தரவில்லை. மக்கள் விழித்துக்கொண்டபோது மூக்குவரை மூழ்கிவிட்டிருந்தது. கோடிகோடியாய்ச் சம்பாதித்துக் கொடுக்கும் 'தொழிலாக' மாறியிருந்தது கல்வி அப்போது. சாராய வியாபாரிகள், கொள்ளையர்கள் பலரையும்கூட கல்வித் தந்தையர்களாக விளம்பரப்படுத்த உதவியது அக்கொள்கை. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்ற பழமொழி உண்டு. இந்தப் பழமொழியில் 'அரசியல்' இருக்குமிடத்தில் 'கல்வித்துறை'யை நிரப்பினாலும் பொருந்தும் நிலை உருவாகியிருக்கிறதே; இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியது புதிய கல்விக் கொள்கையின் முக்கிய 'சாதனை'களுள் ஒன்று. ராஜீவ்காந்தி தொடங்கி வைத்த இச்சீரழிவை வீரியப்படுத்தியதில் நரசிம்மராவின் பங்களிப்பு எல்லையற்றது. அவர் பிரதம அமைச்சராயிருந்த காலத்தில் 'புதிய கல்விக்கொள்கை'யில் இன்னும் சில மாற்றங்களைச் சேர்த்தார். அவை கல்வியை மேம்படுத்த அல்ல, மேலும் சீரழிக்க உதவின. கல்வியில் இன்று நாம் காணும் ஏற்றத்தாழ்வுகளுள் பல அவற்றின் விளைவுகளே.
மன்மோகன்சிங்கின் கல்விக்கொள்கையானது நரசிம்மராவின் கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல. சரியாகச் சொல்வதென்றால், நரசிம்மராவ் பின்பற்றியதே அவர் காலத்தில் நிதியமைச்சராயிருந்த மன்மோகன் சிங்கின் கொள்கைகளைத்தான். ஆனால் மன்மோகன், காலமாற்றத்திற்கேற்ற சில கொள்கை முடிவுகளை எடுத்தார். பல ஆண்டுகளாக அரசு புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்காதிருந்த நிலைக்கு மாறாக, புதிய உயர்கல்வி உயர் ஆய்வு நிறுவனங்களைத் தொடங்கியதாகும் அது. ஐ.ஐ.டி.க்கள், அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (IISER - Indian Institute of Science Education and Research) பல அவர் காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டன.
பாஜகவானது கொள்கைகளில் காங்கிரசுக்கு முரணானதாக அறியப்படுகிறது. ஆனால், இரு கட்சிகளுக்குமே பொருளாதாரக் கொள்கை ஒன்றுதானே. புனிதமான கல்வியை (?) விற்பனைப் பண்டமாக்கிய காங்கிரசின் கொள்கையில் பாஜகவுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அக்கொள்கையை இன்னும் தீவிரப்படுத்துவதுடன் அதில் காவி வண்ணம் பூசுவதையும் தம் கடமையாகச் செய்கிறது பாஜக அரசு. வாஜ்பேயி ஆளுகைக் காலத்தில் முன்மொழியப்பட்ட சோதிடம் - வேத கணிதப் படிப்புகள், சரஸ்வதி வந்தனம் முதலான சொல்லாடல்கள் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாயின அல்லவா? புதிய கொள்கை அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே மறைமுகமாக, அத்தகு மாற்றங்களை நுழைத்தார்கள் என்பது வரலாறு.
நரேந்திர மோடி அரசு வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையின் முகப்புரை இவ்விதம் தொடங்குகிறது: “இந்தியா கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்ந்த கல்விமுறை வேதம் சார்ந்த கல்விமுறை என்று அறியப்படுகிறது. இவ்வுலக வாழ்விலும் அதைக் கடந்த வாழ்விலும் சிறப்புற வாழ்வதற்குத் தேவையான அறிவைக் கொடுத்தல் என்பதாக இல்லாமல் ஒருவர் தம்மைத்தாமே முழுமையாக உணர்ந்து கொள்வதற்கான கல்வியாக அது இருந்தது...” முதல் பத்தியிலேயே வரலாற்றுப் பிழை இருப்பதாகத் தோன்றுகிறது. வேதக்கல்விதான் இங்கு உருவான முதல் கல்வியா? நவீன கல்வி தொடர்பான ஓர் அறிக்கையில் இதன் பொருத்தப்பாடு என்ன? கல்விக்குழுவினரின் சிந்தனைப் போக்குக்கு இது ஓர் உரைகல். இவர்கள் தயாரிக்கும் கொள்கை எவ்வாறிருக்கும்? மக்களையல்ல, பண்பாட்டை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கல்விக்குழு அறிக்கை என்று சிலர் பெருமைப்படுகிறார்கள். ஆம், பண்பாடு குறித்த கவலை அறிக்கையில் பரவலாக விரவிக் கிடக்கிறது. 'இந்தியக் குழந்தைகள் இந்தியப் பண்பாடு, மரபுகளில் வேர் ஊன்றியவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையையும் கொண்டுள்ளது' என்று முகப்புரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக இதை வாசிக்கையில் உளப்பூரிப்பு அடையாமலிருக்க முடியாது. ஆழ்ந்து நோக்கும்போதுதான் அதனுள் புதைந்து கிடக்கும் சிக்கல் புரிகிறது. இந்தியப் பண்பாடு என்பது என்ன? இரண்டாண்டுகளாக அந்தப் பண்பாட்டுப்போர்தானே நடந்துகொண்டிருக்கிறது! டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் குழுவினர் கருத்தில் கொள்ளும் பண்பாடு எது? அந்தப் பண்பாட்டில் எல்லோரும் வேர் ஊன்றவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமான கருதுகோள்தானா?
அறிக்கையில் தரப்பட்டுள்ள சில பரிந்துரைகள், அவை குறித்த நியாயங்கள் மற்றும் விளக்கங்களில் தன்முரண்கள் பல இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்காக சமஸ்கிருதம் பயிற்றுவிக்க ஆவன செய்யப்படும் என்று முன்மொழிகிறது வரைவுக் கல்விக்கொள்கை. ஆனால், சமஸ்கிருதம் பண்பாட்டு மோதல்களையல்லவா உருவாக்கியிருக்கிறது? பெரும்பாலான பரிந்துரைகள் பற்றி ஊடகங்களில் விரிவாக விவாதித்தாயிற்று. ஒன்றை இங்கு குறிப்பிடலாம்.
பத்து லட்சம் மாணவர்களுக்காக தேசிய ஆதரவுத் தொகை வழங்கப்படும் என்ற முன்மொழிதலில், பொருளாதார ரீதியில் நலிந்த மாணவர்களுக்கு இந்த நிதியிலிருந்து படிப்புதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வரியில் பத்தாம் வகுப்பிற்குப் பின் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வின் அடிப்படையில் படிப்புதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்விரண்டும் ஒரே திட்டமா அல்லது வேறுவேறு திட்டங்களா என்று தெளிவில்லை. ஒரே திட்டமெனில், அதன் பலனை அனுபவிக்கப் போவது மேல்தட்டினர் மட்டும்தானே?
வெளியிடப்பட்டிருக்கும் வரைவுக் கல்விக்கொள்கையை ஒரு பின்நவீனத்துவ ஆவணமாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. வாசிப்பு சுவாரசியத்தையும் வாசித்தபின் பல்வேறு ஐயங்கள், வினாக்கள் கிளைத்தெழும் சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ள இந்த அறிக்கையை அனைவரும் 'வாசித்து' இன்புறலாம். பின்னர், யோசித்து வருந்தலாம்.
நரேந்திர மோடி ஆட்சியில் புதிய பண்பாடு உருவாகியிருக்கிறது. அரசு ஒரு கொள்கை அறிக்கை அல்லது ஆவணம் வெளியிட்டால் அதன் மீது கருத்துரைக்கவோ, விமர்சிக்கவோ எதிர்க்கவோ எல்லா குடிமக்களுக்கும் உரிமை உண்டு. விமர்சனங்களை எதிர்கொள்வது அரசின் கடமை. கட்சிக்கு இங்கு என்ன வேலை? கல்விக்கொள்கை மீதான அறிக்கைகளுக்கும் விமர்சனங்களுக்கும் எதிர்வினையாக கட்சியினர் அறிக்கை விடுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, கையெழுத்து இயக்கம் நடத்துவதெல்லாம் இதற்கு முன் இல்லாத பண்பாடு.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை 2016 மே 27ஆம் நாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட்டும், அது உடனே வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இதனால் சுப்ரமணியன் வெகுண்டெழுந்து, அமைச்சகம் வெளியிடாவிட்டால் தானே வெளியிடப்போவதாக அறிவித்தது சில ஐயங்களை எழுப்பியது. சுப்ரமணியன் குழு அறிக்கை அரசுக்குத் திருப்தியாக இல்லையா அல்லது அறிக்கை வெளியிடப்படுமுன் அரசை வழிநடத்தும் அமைப்பின் ஒப்புதலுக்காகத் தாமதப்படுத்தப்பட்டதா என்ற ஐயம். இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்தும் சுப்ரமணியன் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். தாம் சமர்ப்பித்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற அதிருப்தி. அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டே வரைவுக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது போலும். இத்திருத்தங்களைச் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு எது? நிழல் அதிகார மையம் ஒன்றின் இருப்புக்கான நிரூபணம் அல்லவா இது?
டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தி இந்து ஆங்கில ஏட்டுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்த இரு கருத்துகள் கவனிக்கத்தக்கன. கல்விக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்த சமகால எதார்த்தங்கள் மீதான பல விமர்சனங்கள் வெளியிடப்பட்ட வரைவுக்கொள்கையில் இடம்பெறாதது குறித்து அவர் இவ்விதம் தெரிவித்திருந்தார்: “செயல்பாட்டிலிருக்கும் நடைமுறைகளைப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்த்தார்களோ, என்னவோ? நாங்கள் முழுமையாக விமர்சனம் செய்திருந்தோம். அந்த விமர்சனங்கள் வெளியிடப்படவில்லை.”
விமர்சனங்கள் விஷயத்தில் சகிப்புத்தன்மையற்ற ஓர் அரசு நமக்கு அமைந்திருப்பதற்கு இன்னுமொரு சான்று இது. இந்த எதார்த்தமான, நேர்மையான கருத்து பாராட்டுக்குரியது. அதேநேரம் இன்னொரு கேள்விக்கு அவர் அளித்த பதில் முதிர்ச்சியற்றது. 'கல்விக் குழுவில் உண்மையான கல்வியாளர்கள் இல்லையே?' என்ற கேள்விக்கு சுப்ரமணியன் அளித்த பதில் இதோ: “நான் மூன்றாண்டுகள் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராயிருந்தேன். அரசின் முதன்மைச் செயலர் என்ற வகையில் வாஷிங்டனில் நடந்த 'அனைவருக்கும் கல்வி' என்ற உலக வங்கி நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். இம்பீரியல் கல்லூரிக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் போயிருக்கிறேன்...” கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழுவின் தலைமைக்கான தகுதிகளாக அவர் கருதும் இந்த விஷயங்களே அவரது தகுதியின்மைக்கான காரணங்களும். அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த தகுதி எதுவும் இந்திய கல்வியின் சமகால எதார்த்தங்களைப் புரிய உதவுவன அல்ல. மேலைநாடுகள் சிலவற்றின் கல்வி நடைமுறைகளைக் கனவாகக் கொண்டு, அவற்றுடன் தேசபக்த நெடிக்காகச் சில பழமைவாதச் சிந்தனைகளைக் கலந்து படைத்திருக்கிறார் சுப்ரமணியன். பின்தங்கியிருக்கும் இந்தியக் கல்வியை இன்னும் பல அடிதூரம் பின்னிழுக்கவே இந்தக் கல்விக் கொள்கை உதவும்.
உலக அளவில் முன்னணியிலிருக்கும் 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது சுப்ரமணியன் குழு அறிக்கையின் 95 பரிந்துரைகளில் ஒன்று. கண்ணை மூடி ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்து, இதுகுறித்து யோசித்துப் பாருங்களேன்! இதன்மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மேம்பாடு அடையுமா அல்லது மூடு விழாவுக்குத் தள்ளப்படுமா? கோகோ கோலா, பெப்சி பானங்களால் நம் பாரம்பரிய பானங்களுக்கு நேர்ந்த துயர கதை குறித்த அறிவுகூட இல்லாமல் இயங்கும் இதுபோன்ற மனிதர்கள்தான் கொள்கைகளை வடிக்கிறார்கள் இங்கு. இதுதான் பிரதமர் மோடியின் கொள்கையும். அதாவது, தேசபக்தி பற்றிப் பிரசங்கித்துக் கொண்டே தேசத்தை விற்பது!
புதிதாக இன்னொரு குழு அமைத்தாலும், அமைக்காமல் போனாலும் விளைவு ஒரே மாதிரிதான் அமையப்போகிறது. இந்த முடிவுக்கு வர காரணம் உண்டு. வெளிப்படையாக புதிய கொள்கை முடிவை அறிவிக்காமலே சி.பி.எஸ்.இ ஆட்சிமன்றக் குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியைத் தருகிறது. சி.பி.எஸ்.இ. ஆட்சிமன்றக் குழு சுயமாக எடுத்த முடிவுகளாக இருக்குமா இவை? மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தீர்மானங்களாக ஆவணப்படுத்தும் பணியை மட்டுமே அது செய்வதாகத் தெரிகிறது. அப்படி எடுத்திருக்கும் தீர்மானத்தின்படி தனியார் கல்வி நிறுவனங்கள் நேரடி அன்னிய முதலீட்டை ஏற்றுக் கொள்ளலாம். பாராளுமன்றத்தில் நிறைவேறாமல், பரவலான விவாதப் பொருளாக இருக்கும் ஒன்றை சி.பி.எஸ்.இ ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலரது முடிவால் எளிதாக நடைமுறைப்படுத்த முடியும் என்றால், கொள்கை வடிவமைப்புக் குழுக்களும் அவற்றின் அறிக்கைகளும் அவை குறித்த விவாதங்களும் இறுதி முடிவை எடுக்க வேண்டிய பாராளுமன்றமும் எதற்காக, பொழுதுபோக்கிற்காகவா?
அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டே வரைவுக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது, இந்த திருத்தங்களைச் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு எது? நிழல் அதிகார மையம் ஒன்றின் இருப்புக்கான நிரூபணம் அல்லவா இது? என்ற எட்வர்டின் சந்தேகங்களுக்கு அடிப்படையாக, 2014 நவம்பர் 13 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் சியாம்லால் யாதவ் எழுதிய ”சங்கம்: ஆர்எஸ்எஸ் எவ்வாறு கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது” என்ற கட்டுரையில் வெளியான செய்திகளும், தகவல்களும் காரணமாக இருந்திருக்கலாம். 
ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக அந்த அமைச்சகத்தில் நடந்தேறிய ரகசிய செயல்பாடுகளையும், உருவாக்கப்படவிருக்கின்ற கல்விக் கொள்கைகள் தொடர்பாக அந்த காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் எடுக்கப்பட்ட முன்முயற்சிகளையும்  சியாம்லால் யாதவ் எழுதிய அந்தக் கட்டுரை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
(தொடரும்) 
கட்டுரையாளர்
முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்.

;