திங்கள், ஆகஸ்ட் 3, 2020

கட்டுரை

img

வதந்திக் கோட்டைக்குள் பதுங்கும் பாஜக....

வதந்தி பரப்புவதில் இரண்டு வகை உண்டு.தனக்குக் கிடைத்த தகவல் பொய்யானது என்று தெரியாமலே உண்மையென நம்பி மற்றவர்களுக்கும் பரப்புவது ஒரு வகை. பொய்தான் என்றுநன்றாகத் தெரிந்து வேண்டுமென்றே பரப்புவது இன்னொரு வகை. இரண்டாவது வகையில் வல்லுநர்களைப் பராமரித்து வருவது பாஜக. அதற்கொருபுதிய சான்றுதான், பாஜக-வின் சமூக ஊடகவாசிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிப் பரப்பிய வதந்தி.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக்பகுதியில் உண்மைக் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில்ஏற்பட்ட மோதல் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியையும் வேதனையையும் தருவன. தமிழ்நாட்டின் பழனிஉட்பட இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதை நாட்டுமக்கள் தங்கள் வீட்டுத் துக்கமாகக் கருதி அவர்களுக்குஅஞ்சலி செலுத்துகிறார்கள். இந்நிலையில், “சீன வீரர்கள் 5 பேரை இந்திய ராணுவம் அழித்ததைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தில்லியில்இந்திய ராணுவத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், பிரகாஷ் காரத் மற்றும் பலர் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று இந்தி மொழியில் ஒரு செய்தி ட்விட்டர்,முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

யெச்சூரி, பிருந்தா உள்ளிட்டோர் இந்திய ராணுவஎதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளைக் மார்பில்தொங்கவிட்டு, முழக்கம் எழுப்புவது போன்ற இரண்டுபுகைப்படங்களும் அந்தச் செய்தியோடு இணைக்கப்பட்டிருந்தன. விசுவாசமாக அந்தச் செய்தியும் படங்களும் வேகமாகப் பரப்பப்பட்டு “வைரல்” ஆக்கப்பட்டன.இது திட்டமிட்ட வதந்தியெனக் குற்றம் சாட்டியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல.இத்தகைய பரபரப்புத் தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கென்றே இயங்கிவரும் அமைப்புகளில் ஒன்றான ‘தி லாஜிக்கல் இண்டியன்’ என்ற நிறுவனமும் இதைக் கூறியிருக்கிறது. இந்தத் தகவலையும் படங்களையும் தொழில்நுட்பங்களின் துணையோடு ஆராய்ந்து, இது ஒரு “பொய்ச்செய்தி” என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.உண்மையில் அந்தப் படங்கள் இரண்டும், ஜுன் 16 அன்று மார்க்சிஸ்ட் கட்சி நாடுதழுவிய அளவில், கொரோனா துயரங்களுக்குத் தீர்வு காண்பதில் மத்திய மோடி அரசின் அக்கறையின்மைக்கும், அதன் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்து நடத்திய போராட்டக் காட்சிகளேயாகும்.

வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ளகுடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.7,500 வழங்குதல், ஏழைக் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி விநியோகித்தல், ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமங்களில் 200 நாள் வேலையளித்தல், அந்தத் திட்டத்தை நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்துதல், அரசை விமர்சித்தவர்கள் மீதான கைது/வழக்கு நடவடிக்கைகளை விலகிக்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் வாய்ப்புக்கேற்ற முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு தில்லியில்நடந்த போராட்டப் படத்தில் ஒட்டுவேலை செய்து,எழுத்துகளை மாற்றி, இந்திய ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்றும் ‘தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவித்திருக்கிறது.

பாஜக வல்லுநர்கள் இத்துடன் நிற்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் வங்கமொழிப் பத்திரிகையான ‘கணசக்தி’ நாளேட்டில், இந்தியச் துருப்புகள்தான் லடாக்கின் கல்வான் பகுதியில் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி சீனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சீனாவுக்கு ஆதரவான கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்று ஒரு கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர். ‘கணசக்தி’ ஜூன் 17 இதழில் லடாக் பிரச்சனை பற்றியகட்டுரை வெளியானது உண்மைதான். “லடாக் மோதல்:இரு தரப்பிலும் உயிரிழப்புகள்” என்ற தலைப்புடன் பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே தொடங்குகிற கட்டுரையின் தொடர்ச்சி 2-வது பக்கத்தில் இருக்கிறது. முதல் பக்கக்தில், மோதல் தொடர்பாக, சீனத்தரப்பிலிருந்துதான அத்துமீறல் நடந்ததென இந்தியவெளியுறவுத்துறை சொல்லியிருப்பது குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சிப் பக்கத்தில், இந்தியவீரர்கள் அத்துமீறியதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள் என்று உள்ளது.

எந்தப் பத்திரிகையானாலும் இது போன்ற பிரச்சனைகளில் இரு தரப்பிலும் சொல்லப்படுவது என்னஎன்று கூறுவது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஊடகவியல் நடைமுறை. இந்தியப் பத்திரிகைகளும் லடாக் பிரச்சனை பற்றிய செய்திக கட்டுரைகளை இப்படித்தான் இருதரப்புக் குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வெளியிட்டுள்ளன. ஆனால். பாஜக ஊடக வல்லுநர்கள் ‘கணசக்தி’ கட்டுரையின் உள்பக்கப் பகுதியை மட்டும் படமெடுத்துப் போட்டிருக்கிறார்கள்.எதிரிகளைத் தாக்குவதற்கு நேர்மையான வழிகளை மேற்கொள்ள பாஜக தயாராக இல்லை.இன்றைய கொரோனா போராட்டக் காலத்திலும் மத்திய அரசு எப்படியெல்லாம் மக்களைக் கைவிடுகிறது என்று கூர்மையாகச் சுட்டிக்காட்டுகிற பணியைச்செய்துகொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கட்சியைத் தாக்குவதற்கும் வதந்திக் குதிரையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.எல்லை நிலவரம் குறித்துத் தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19 மாலையில் இணையத்தள வழியில் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஒருமைப்பாடு தெரிவித்துள்ளார். இருநாட்டு அரசுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு, இந்தப் பிரச்சனைக்குஇறுதியான தீர்வு காண வேண்டும் என்று கட்சி விரும்புகிறது என்றும் பதிவு செய்திருக்கிறார்.மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த விருப்பத்திற்கும், பாஜக-வின் பொய்ச்செய்திக் கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

===அ.குமரேசன்===

;