கட்டுரை

img

பஞ்சாப், மகாராஷ்டிரா வங்கி முறைகேடுகளும் அதற்குப் பிறகும்... - தி.தமிழரசு

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 21 வரை 66வது கூட்டுறவு வார விழா கொண்டா டப்படுகிறது. கூட்டுறவின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள், கொடுமையான முதலாளித்துவ கொள்கைகளிலிருந்து சாதாரண விவசாயிகள், தொழிலா ளர்கள், நடுத்தர வர்க்க தொழிலாளர்களை காப்பாற்றிட உதவு கின்றது. சோசலிசத்தை  உருவாக்கிட முனையும் நாடுகளிலும் சோசலிசத்தை அடைய கூட்டுறவு ஒரு பாலமாக செயல்படு கின்றது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை பெருமளவில் நடத்தி இந்த இயக்கத் தையே மக்கள் மனதிலிருந்து அகற்றிடச் செய்யும் நிகழ்வு கள் நடைபெற்று வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் திடீர் முடிவு 

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (Ponjab and Maharashtra Co - op. Bank) சமீபத்தில் நடை பெற்ற முறைகேடுகள், அதன் தொடர்ச்சியாக  ரிசர்வ் வங்கி ‘வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1949, பிரிவு ‘35-ஏ’ன் கீழ் நடவடிக்கை எடுத்து இவ்வங்கி தனது வாடிக்கையா ளர்களுக்கு ரூ.1000-க்கு மேல் கணக்கிலிருந்து எடுக்கக்கூடாது என்று 2019 செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு பிறகு மக்கள் கொந்த ளித்து 6 மாநிலத்தில் இவ்வங்கியின் கிளைகளின் முன்பாக போராட்டம் நடத்தினர். பின்னர்  ரிசர்வ் வங்கி இந்த ரூ.1000 என்பதை ரூ.10,000 ஆக உயர்த்தியது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. மீண்டும்  ரிசர்வ் வங்கி இந்த தொகையை ரூ.25000; தற்போது ரூ.40,000ஆக உயர்த்தியுள்ளது. எனினும் இவ்வங்கியின் வைப்புதாரர்கள் சொல்லொண் ணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வங்கியில் பணம் இருந்தும் மருத்துவ செலவுக்குக்கூட பணம் எடுக்க முடியாத நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது வரை இதன் வாடிக்கையாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரூ.6500 கோடி வராக்கடன்

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பிப்ரவரி 13, 1984 அன்று நகர கூட்டுறவு வங்கியாக துவக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளில் 6 மாநிலங்களில் 137 கிளைகள் கொண்ட ஷெட்யூல்டு கூட்டுறவு வங்கியாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்க ளில் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. 1814 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நாட்டில் உள்ள 10 பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. கடந்த 2000ஆம் ஆண்டு இவ்வங்கிக்கு ‘ஷெட்யூல்டு’ தகுதியை ரிசர்வ் வங்கி வழங்கியது. இவ்வங்கிக்கு சுமார் ரூ.12,000 கோடி வைப்புகளும், வழங்கிய கடன்கள் மொத்தம் ரூ.8800 கோடியாகும். இதில் சுமார் ரூ.6500 கோடி அளவுக்கான கடன் தற்போது வராக் கடனாக நிலுவையில் உள்ளது. இதை முறையாக செயல்படாத சொத்தாக (NPA) பிரதி ஆண்டு அறிக்கையில் காட்டப்படவில்லை. இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெற்று வந்துள்ளது. சுமார் 21049 பொய்க் கணக்குகள் துவக்கப்பட்டு 44 கடன் கணக்குகளை மறைக்கவும், இவற்றை கணினியில் கொண்டு வராமல் கோர் பேங்கிங் சொல்யூஷனில் சேர்க்காமல் கணக்குகளை மூடி மறைத்துள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்திய பெண் ஊழியர்கள்

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த முறைகேட்டை இங்குள்ள பெண் பணியாளர்கள் முதலில் வெளிக் கொண்டுவந்துள்ளனர். இவ் வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜாய் தாமஸ் மன்றோ வங்கியின் முறை கேடுகள், வெளியில் தெரிந்தால் வங்கியின் நற்பெயர் பாதிக்கும் என்பதால் மூடி மறைத்ததாக கூறுகின்றார். இவ்வங்கியை தணிக்கை செய்திட்ட பட்டயக் கணக்காளர்கள், ஆய்வு செய்திட்ட  ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அனைவரும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

கடன் வழங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் HDIL அதாவது Housing Develpment Infrastructure Limited என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் ரகேஷ்வா தவான், அவ ருடைய மகன் சாரஸ்வா தவான் ஆகியோர், பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ.6,500 கோடியை கடனாக பெற்று வங்கியை நஷ்டத்திற்கு உள்ளாக்கி யுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் அமலாக்கத் துறை யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ.3500 கோடிக்கான சொத்துக்கள் முடக்கம் செய்யப் பட்டுள்ளன.

வைப்புதாரர்கள் பாதிப்பு

வாடிக்கையாளருக்கு ரூ.40,000, ஆறு மாதம் வரை திரும்பப் பெறலாம் என்பதன் மூலம் 73 சதவீத வாடிக்கையா ளர்களின் தேவைகள் நிறைவேறி இருக்கும் என்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால் வைப்புதாரர்களின் பணத்திற்கு வைப்பு இன்சூரன்ஸ் மற்றும் கடன் பாதுகாப்பு நிறுவனம் (Deposit Insurance and Credit Guarantee Corporation) மூலம் ஒவ்வொரு வைப்புக்கும் அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே பெற முடியும். இந்த ஒரு லட்சம் என்பது 1993ஆம் ஆண்டு நிர்ண யிக்கப்பட்ட அதிகபட்ச அளவாகும். 26 ஆண்டுகள் கழித்தும் இத்தொகை மத்திய அரசு மற்றும்  ரிசர்வ் வங்கியால் உயர்த் தப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

கடந்த 40ஆண்டுகளில் நட்டத்தில் ஆழ்த்தப்பட்ட பல்வேறு தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளோடு இணைக் கப்பட்டு வாடிக்கையாளர்களின் வைப்புகள் காப்பாற்றப் பட்டன.  Nedungadi Bank, Bank of Tanjore, Bank of Tamil nadu, Global Trust Bank போன்றவைகளாகும். ஆனால் இந்த காலகட்டத்தில் இது போன்று நட்டத்திற்கு ஆட்பட்ட ஒரு கூட்டுறவு வங்கி கூட மற்ற வங்கிகளோடு இணைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் கூட்டுறவு வங்கிகள் இரட்டைக் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன என கூறப்படுகின்றது. அதாவது  ரிசர்வ் வங்கி நிதி மற்றும் ஆய்வு கட்டுப்பாடுகளை மேற்கொள்வது; மாநில அரசின் கூட்டுறவு சங்கப் பதிவாளர், நிர்வாகம், சட்டம், துணைவிதி மற்றும் தேர்தலை கவனிப்பவராக இருப்பது. 

தனியார் வசம் போகும் அபாயம்

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படும் போதே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு காரணம், வங்கி நிர்வாகத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்றவர்களின் நிர்வாகத் தலைமையினால் தான் என்று அனைவரும் பேசவும், எழுதவும் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி இது போன்ற பெரிய கூட்டுறவு வங்கிகளை தனியார் வங்கிக ளாக மாற்றிடும் யோசனையை தனது கொள்கை அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. தனியார் வங்கிகளின் செயல்பாட்டை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. சிறிய நகரக் கூட்டுறவு வங்கிகளை சிறிய நிதி வங்கிகளாக மாற்றிடவும் பாரத ரிசர்வ் வங்கி ஆலோசனை கூறுகின்றது. தற்போது பெரிய தனியார் நிறுவனங்களே சிறு நிதி வங்கிகளை (Small Finance Banks) துவக்கிட தயங்குகின்றன. 2008 உலக பொருளாதார  நெருக்கடியின்போது அமெரிக்காவில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர வங்கிகள் மூடப் பட்டன என்பது வரலாறாகும்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் நிலை

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் குறித்தும் அவற்றில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ஆராயவும்சந்தானம் ஐஏஎஸ் தலைமையில் 1969இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு கூட்டுறவு வங்கிகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை அரசியல்வாதிகள் ஏற்கக்கூடாது என்று பரிந்துரைத்தது. 1977இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கூட்டுறவுக ளுக்கான தேர்தலை நடத்தாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளைக் கொண்டே கூட்டுறவு வங்கிகள் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் 1996இல் தான் கூட்டுறவு வங்கி களுக்கான தேர்தல் நடைபெற்றாலும், ஆளும் கட்சி பிர முகர்களுக்கான தேர்தலாகவே நடத்தப்பட்டு வருகின்றது.  97வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கூட்டுறவை அடிப்படை உரிமையாக்கி தேர்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று 13.1.2012 தேதியில் மைய அரசு அரசாணையாக வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு மாநில சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தேர்தல் நடை முறைகள் அடையாள அட்டை அடிப்படையில் நடைபெறு வதை இன்று வரை உறுதிப்படுத்திட இயலவில்லை. இதனால் கூட்டுறவுத் தேர்தல் என்பது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக அமையவில்லை.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி யில் உள்ள அதிமுக அரசு, அதேபோல் கூட்டுறவுகளுக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள் அதிமுக பிரமுகர்களே. இவர்கள் தலைமையில் கூட்டுறவு கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. தமிழ கத்தில் உள்ள 4500 பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்க ளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் மிக மோசமான நிதி நிலையை உடைய சங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. பேராசிரியர் வைத்தியநாதன் குழு பரிந்துரையின் அடிப்படை யில் பெற்றிட்ட நிதிக்கு பிறகு மாவட்ட வங்கிகளும், பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்களும் ஓரளவுக்கு வளர்ச்சியை அடைந்தது. ஆனால், அவை மீண்டும் ஊழல் பாதைக்கே திரும்பியுள்ளன. பிரதம வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் புத்தக சரிகட்டலா கவே உள்ளன. உண்மைக் கடன் விவசாயிக்கு போய்ச் சேரவில்லை. பயிர்க்கடன் இன்சூரன்ஸ் திட்டத்திலும் பிரதம சங்கங்க ளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. தலைவர், துறை  அதிகாரிகள் ஆதரவுடனே அரங்கேறுகின்றன என்ற தகவல் பரவலாக உள்ளது. நகைக் கடனுக்காக கொடுக்கப்படும் காசு கடனுக்கான ‘முழு ஈடு’ (Cover) நிர்வகிக்கப்படுவதில்லை. இத னால் Imbalance எனப்படும் நிதி ஏற்றத்தாழ்வு மாவட்ட மத்திய வங்கிகளின் ஆஸ்தி பொறுப்புப் பட்டியலில் பொறுப்பாக காட்டப்படுகின்றது.

பிரதம கூட்டுறவு சங்கங்களின் லாபமீட்டும் தன்மையை அதிகரிக்க மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, நபார்டு, ரிசர்வ் வங்கி போன்ற வங்கிகளும் கூட எந்தவித உருப்படியான ஆலோசனையை நல்குவதில்லை. எனவே இன்று ஒட்டு மொத்த கூட்டுறவும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்துறையை கண்காணிக்க சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசும், கூட்டுறவு நிறுவ னங்களும் சம்பளம் வழங்குகின்றன. இத்துறை சீரழிந்தால் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி

எனவே, உடனடியாக தமிழக அரசு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும்  மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து “தமிழ்நாடு கூட்டுறவு வங்கி” உருவாக்கிட வேண்டும். பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள செயலர்க ளை பணி மாற்றம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை முழுமையாக அமல்படுத்தினாலே இச்சங்கங்களில் உள்ள முறைகேடுகள் வெளிவரத் தொடங்கிவிடும். எந்த குறிப்பிட்ட அளவு வியாபாரம் செய்தால் சங்கச் செலவுகள் மற்றும் வருமானம் சரியாகி லாபமீட்டப்படும் என்பதற்கான குறியீடுகள் நிர்ணயித்து இதற்கு சங்கத் தலைவர், கூட்டு றவு வட்ட துணைப் பதிவாளர், மண்டல இணைப் பதிவாளர் ஆகியோரை பொறுப்பாக்க வேண்டும். மாவட்ட மைய வங்கி ஊழியர்களை மட்டும் பொறுப்பாக்கும் நிலையை தவிர்க்க வேண்டும்.

கூட்டுறவு வங்கி/சங்க நிதி இழப்புக்கு ஊழல் மற்றும் முறைகேடுகளை செய்த நிர்வாகம் மற்றும் துறை அதிகாரி களின் சொத்துக்களை கைப்பற்றும் சட்டத் திருத்தம் கொண்டு வர காரணமாக வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு வங்கி என ஒருங்கிணைக்க வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் நட்டமடைந்துவரும் வங்கிகளில் பணியாற்றிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர்களை இதற்கு பொறுப்பாக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மற்றும் முறைகேடுகளால் கிராமப்புற பொருளா தாரம் சீரழிவதோடு நவீன தாராளமயமாக்கல் கொள்கை க்குப் பல நாடுகளில் மாற்றாக திகழும் கூட்டுறவு அமைப்புகள் அழிவை நோக்கிச் செல்லும் பேரபாயம் உள்ளது. அத னால்தான் இத்தகைய துறையை காத்திட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்துடன் (பெபி) இணைந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் நவம்பர் 9 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்து கின்றது.

கட்டுரையாளர் : தலைவர், இந்திய வங்கி 
ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாடு 

;