கட்டுரை

img

கோவிட் 19ஐ கையாள்வதில் கேரளம் முன்மாதிரியாக திகழ்வது எப்படி?

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவின் பிற பகுதிகள் போராடிக் கொண்டிருக்கையில், அந்த வைரஸைக் கையாள்வதில் கேரள மாநில அரசிடம் இருந்த உத்திகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மாதிரியாக இப்போது கருதப்படுகின்றன.

மாநிலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 691ஆக இருக்கிறது. நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 100,000ஐத் தாண்டி, ஏறக்குறைய 3,000 பேர் இறந்துள்ள நிலையில், இந்த மாநிலத்தில் குணமடைந்தவர்கள் விகிதம், இந்தியாவிலேயே மிக அதிகமாக ஏறக்குறைய 90 சதவிகிதமாக இருக்கிறது. மாநிலத்தில் மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர். உலகளாவிய சராசரி இறப்பு விகிதம் 3 சதவீதமாக இருக்கின்ற நிலையில், இந்த மாநிலத்தில் இறப்பு விகிதம் சுமார் 0.43 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள இறப்பு விகிதம், உலகின் மிகக் குறைந்த கோவிட்-19 இறப்பு விகிதங்களில் ஒன்றாக இருக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 65,000 டாலராக இருக்கின்ற  அமெரிக்காவில் 5 சதவீதம் என்ற இறப்பு விகிதத்தில் 94,000 பேர் இறந்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கேரளாவில் இருக்கின்ற வலுவான சுகாதார வசதிகளே, இந்த தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு உதவியிருப்பதாகத் தெரிகிறது. மூன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலம், ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே அதிக அளவிலான ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டைக் கொண்டுள்ளது.  அல் ஜசீரா மின்னஞ்சல் மூலமாக நடத்திய நேர்காணலில், மாநில முதலமைச்சரான பினராயி விஜயன், உலகின் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில், தனது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

அல் ஜசீரா: இந்தியாவின் பிற பகுதிகள் போராடி வரும் வேளையில், கேரளா நோய்பரவல் வளைவை மிகவும் வெற்றிகரமாகச் சமாளித்து இருக்கிறது. இந்த வைரஸை கேரளா எவ்வாறு கட்டுப்படுத்தியது?

பினராயி விஜயன்: முதல் மற்றும் முக்கியமானது, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கேரள மக்கள் அளித்த உறுதியான ஆதரவுதான். மற்ற அனைவரையும் விட, இங்கே மிக வெற்றிகரமாக நிலைமையைச் சமாளிப்பதற்கு அதுவே உதவியிருக்கிறது. மாநிலத்தின் ஆரம்பகட்ட தயார்நிலை, பொது சுகாதார அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள், சட்ட அமலாக்க அமைப்புகளின் உதவியுடன் திறம்பட மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள், முன்கூட்டியே மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதாரத் தொகுப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சரியான நேரத்தில் செய்யப்பட்ட உதவி, குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்  பரவலாக்கப்பட்ட முயற்சிகள், துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, மற்றும் இதுபோன்று மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள், இந்த தொற்றுநோய்க்கு எதிரான கேரள மாடலுக்கான தூண்களாகச் செயல்பட்டன.
சந்தேகத்திற்கிடமானவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தல், நோய் இருப்பவர்களின் தொடர்புத் தடமறிதல், போதுமான பரிசோதனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை ஆகியவை  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  திறம்பட சிகிச்சையளிக்கப்படுவதையும், அவர்கள்  குணமடைவதையும் உறுதி செய்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்தே, வைரஸைக் கட்டுப்படுத்துவதில் எங்களுடைய வெற்றிக்கு வழி வகுத்துத் தந்துள்ளன.

அல் ஜசீரா: மிகக் குறைந்த அளவில் கோவிட்-19 இறப்பு விகிதமும், நாட்டிலேயே அதிக அளவிலான குணமடைந்தவர்கள் விகிதமும் கேரளாவில் உள்ளது  அதை எவ்வாறு உங்களால் அடைய முடிந்தது?

பினராயி விஜயன்: மூன்று விலைமதிப்பற்ற உயிர்களை நாங்கள் இழந்துவிட்டோம். எனினும் எங்களிடம் உள்ள வலுவான பொது சுகாதார அமைப்பு காரணமாகவே, இந்த சுகாதார நெருக்கடியை கேரளாவால் திறம்பட சமாளிக்க முடிந்திருக்கிறது. பொது சுகாதார அமைப்புகள் முற்றிலும் அவசியமானவை என்பதை கோவிட்-19 உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. எங்களிடமுள்ள சுகாதார சேவைகள், கட்டமைப்பு மற்றும் உள்ளாட்சி அதிகாரங்களுக்கிடையே இருக்கின்ற ஒருங்கிணைந்த தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் வகையில் நடந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தையும் கொண்டு, அந்த வளைவை நாங்கள் தட்டையாக்கியதன் மூலம், மிக உயர்ந்த அளவில் நோயிலிருந்து மீட்பு வீதமும், உலகிலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதமும் கேரளாவில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எங்களால் முடிந்திருக்கிறது.மே 19 நிலவரப்படி, கேரளாவில் 142 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இதுவரையிலும், பாதிக்கப்பட்ட 642 பேரில் 497 பேர் குணமாகியுள்ளனர். மேலும் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, எங்களிடம் இருக்கின்ற இந்த  எண்ணிக்கை மிகவும் முன்னேறிய மற்றும் வளமான நாடுகளைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகவே இருக்கிறது.

அல் ஜசீரா: 2018 நிபா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடிய கேரளாவின் அனுபவம், இப்போது கொரோனா வைரஸ் பரவலைக் கையாள உதவியுள்ளதா?

பினராயி விஜயன்: தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எங்களுடைய மாநிலத்திற்கு கிடைத்த அனுபவங்கள், சிலவகைகளில் இந்த கோவிட்-19 க்கு எதிரான போரில் எங்களுக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது உண்மைதான். நிபா வைரஸ் பரவிய போது, நோய் உள்ளவர்களின் தொடர்புத் தடம் குறித்து நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.நோய் உள்ளவர்களின் தொடர்புகளைக் கண்டறிவதற்காக, பொது சுகாதார வல்லுநர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் உள்ள அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்களை இப்போது அமைப்பதற்கு, அந்த அனுபவமே எங்களுக்கு உதவியிருக்கிறது. தனிமைப்படுத்துதல், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை அடையாளம் காணுதல், பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் பல நடவடிக்கைகளிலும் அந்த அனுபவம் எங்களுக்கு கை கொடுத்திருக்கிறது.

அல் ஜசீரா: பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் விதித்த கடுமையான ஊரடங்கு புலம்பெயர்ந்தோர் தொடர்பான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அந்த நெருக்கடியை கேரளா எவ்வாறு கையாண்டது?

பினராயி விஜயன்: ஊரடங்கு மக்களுக்கிடையேயான தொடர்புகளை மட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். அதன் மூலம் வைரஸ் பரவுவதைக் குறைக்க முடியும். இருந்தாலும், அது ஒரு மந்திரக்கோல் அல்ல. அதைக்  கையில் வைத்துக் கொண்டு  சுகாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை அடையாளம் காண்பது, அவர்களைத் தனிமைப்படுத்துவது, போதுமான பரிசோதனைகளை நடத்துவது, நோய் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவர்களுடைய தொடர்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நாம் ஊரடங்குடன் இணைக்க வேண்டும். அது ஒரு சுழற்சியான நடைமுறையாகும். சிகிச்சைக்குள்ளான அனைவரும் குணமடைந்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் அனைவரும் நோய் இல்லாதவர்கள் என்பதைக் கண்டறியும் வரைக்கும் அந்த நடைமுறையைத் தொடர வேண்டும்.ஊரடங்கின் போது, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் அன்றாட கூலித் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருமே, இவ்வாறான கூலித் தொழிலாளர்களே. ஊரடங்கு  நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். கேரளா அதைச் செய்து தந்தது. நாங்கள் அவர்களுக்குத் தேவையான சுகாதார உதவி மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கான பொருட்களுடன் நிவாரண முகாம்களை ஏற்பாடு செய்து கொடுத்தோம். அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், சமைத்த உணவு அல்லது சமைக்கத் தேவையான பொருட்களை நாங்கள் வழங்கினோம். மத்திய அரசாங்கம் பயணத்தை அனுமதித்தபோது, அவர்களுடைய  சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுத்தோம். இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 முகாம்களில் 3,00,000க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அல் ஜசீரா: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உங்களுக்கு அச்சம் இருக்கிறதா? அதற்கான உங்களுடைய திட்டங்கள் என்ன?

பினராயி விஜயன்: ஆபத்தான இரண்டாவது அலைக்கான சாத்தியம் இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தனிமைப்படுத்தல் என்பது ஒரு முக்கிய பகுதியாகும். நாங்கள் கடைப்பிடித்து வருகின்ற வீட்டில் தனிமைப்படுத்தும் முறை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அதைத் தொடர  வேண்டும் என்று எங்கள் நிபுணர் குழுவும் பரிந்துரைத்துள்ளது. தனிமைப்படுத்தப்படுத்துவதற்கான போதுமான நிறுவன வசதிகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன. இன்றுவரை, கிட்டத்தட்ட 2,00,000 குளியல்அறையுடன் கூடிய அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படுபவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். சமூக சமையலறைகள் மூலமாக உணவு ஏற்பாடு செய்து தரப்படும். தங்களுடைய சொந்த செலவில் தனிமைப்படுத்தலில் இருக்க விரும்புவோருக்கு, ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளிலும் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேவையான ஏற்பாடுகளைச் செய்ய எஸ்.டி.ஆர்.எஃப் இலிருந்து (மாநில பேரிடர் எதிர்வினை நிதியம்) இதுவரை ரூ.13.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையுமானால், தனிமைப்படுத்தப்படுவது மட்டும் போதாது, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள 1,296 அரசு மருத்துவமனைகளில் 49,702 படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றில் 1,369 ஐசியு படுக்கைகள் மற்றும் 800 வென்டிலேட்டர்கள் உள்ளன. 866 தனியார் மருத்துவமனைகளில் 6,059 ஐசியு படுக்கைகள் மற்றும் 1,578 வென்டிலேட்டர்கள் கொண்ட 81,904 படுக்கைகள் உள்ளன. நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க 207 அரசு மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பிரத்தியேகமாக கோவிட்-19 பராமரிப்பு வசதிக்காக மட்டும் 27 மருத்துவமனைகளை மாற்ற முடியும். தேவைப்பட்டால் 125 தனியார் மருத்துவமனைகளும் பயன்படுத்துவதற்காக, தயார் நிலையில் உள்ளன. எந்தவொரு அசாதாரண நிகழ்வையும் எதிர்கொள்ள கேரளா தயாராகவே இருக்கிறது.

அல் ஜசீரா: வணிகங்களையும், வாழ்வாதாரங்களையும் ஊரடங்கு அழித்த போது, வணிகங்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

பினராயி விஜயன்: ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பொறுத்தவரை, இந்த கடினமான காலகட்டத்தில் கேரளா அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் பாடுபட்டோம். அதன்படி, கேரளாவில் 55 லட்சம் மக்களுக்கு - முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் - தலா ரூ.8,500  வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிலாளர் நல நிதிகளில் பதிவு செய்து கொண்டிருக்கும் 46 லட்சம் நபர்களுக்கு – தலா ரூ.1,000-5,000 வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் பதினைந்து கிலோ அரிசி மற்றும் பருப்பு வகை, வாசனைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, ஊரடங்கு தொடங்கியதிலிருந்து மே 10 வரை நாங்கள் அமைத்துள்ள சமூக சமையலறைகள் மற்றும் குடும்பஸ்ரீ ஹோட்டல்கள் மூலம் 82,26,264 பேருக்கு இலவச மற்றும் மானிய உணவு வழங்கப்பட்டுள்ளது.இந்த தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு கவனம் குவிக்கும் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். முதலாவது சுபிக்ஷா கேரளம், இது கேரளாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு 3,860 கோடி ரூபாய் செலவாகும். இரண்டாவதாக,  வியவாசய பத்ரதா.  இதன் மூலம் நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.3,434 கோடி உதவி வழங்கப்படும்.இப்போது வரை, ஊரடங்கின் காரணமாக கேரளாவிற்கான மொத்த பொருளாதார செலவு ரூ.80,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஜசீரா: வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து மலையாளிகள் பெருமளவில் வருவார்கள் என்று கேரளா எதிர்பார்க்கிறது. அதை எவ்வாறு கையாளத் திட்டமிட்டுள்ளீர்கள்? அதன் பொருளாதார தாக்கம் என்னவாக இருக்கும்?

பினராயி விஜயன்: ஒரு மாநில அரசாக, எங்கள் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுக்குள் நாங்கள் ஏற்கனவே நோர்கா [வெளிநாடு வாழ் கேரளத்தவர்களுக்கான திட்டம்] மூலம் உதவி வழங்கி வருகிறோம். பிரவாசி நல நிதியில் [வெளிநாட்டினருக்கான நிதி] உறுப்பினர்களாக உள்ள அனைத்து கோவிட்-19 நோய் உள்ளவர்களுக்கும் அவசர உதவியாக ரூ.10,000 வழங்கப்படும். செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் பணி விசாவுடன் திரும்பி வந்த அனைவருக்கும் ரூ.5,000 வழங்கப்படும். திரும்பி புலம் பெயர்பவர்களுக்கான நோர்கா துறை திட்டம் (என்டிபிஆர்இஎம்) மூலம், நடுத்தர, சிறு மற்றும் குறு நிருவனங்களை அமைப்பதற்கும், விவசாயத்தை மேற்கொள்வதற்கும் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரை மூலதன நிதி கிடைக்கும்.பண ரீதியாகப் பார்த்தால், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் அதிக நன்மை பெறுவது இந்திய அரசுதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது வெளிநாட்டு வாழ் இந்தியர் பணம் இந்தியாவில் டெபாசிட் செய்யப்படும் போது, வெளிநாட்டு நாணயத்தின் மூலம் இந்திய கருவூலம் வளமடைகிறது. ஆனாலும் திரும்பி புலம்பெயர்ந்து வருபவர்களின் மறுவாழ்வுக்கான பொறுப்பு முக்கியமாக மாநிலங்களிடமே இருப்பதாக இந்திய அரசாங்கம் கருதுகிறது. அடிப்படையில், இந்த அணுகுமுறை மாற வேண்டும். இந்த இக்கட்டான காலகட்டத்தில், நமது சகோதர சகோதரிகளைத் திரும்ப அழைத்து வருவதற்குக்கூட பயன்படுத்தப்படாத,  வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவுவதற்காக 2009இல் அமைக்கப்பட்ட இந்திய சமூக நல நிதியத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம்தான் பொறுப்பேற்றிருக்கிறது. திரும்பி வருபவர்களுக்கு மறுவாழ்வு தொகுப்பை உருவாக்குவதற்கு, அந்த நிதி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே எங்களுடைய புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளின் பாதுகாப்பான வருகைக்காக நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். முழுவிவரங்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தோம். கடந்த வாரத்தில் அவர்கள் வருகையின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. மே 19  நிலவரப்படி, 6,054 பிரவாசிகள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர்.

தமிழில்: தா.சந்திரகுரு

அல் ஜசீராவிற்காக சாயிப் காலித்

;