கட்டுரை

img

தேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்! -எஸ்.பாலா

“பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ” என்று பாடினார் மகாகவி பாரதி. அப்படித்தான் இருக்கிறது டிஎன்பிஎஸ்சி செயல்பாடுகள். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை நாசப்படுத்தி, கொள்ளை அடிக்கிற இடமாக, ‘தமிழ்நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷனாக’ மாறி இருக்கி றது. ஒவ்வொரு நாளும் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
டிஎன்பிஎஸ்சி... எத்தனை தேர்வு?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெற்றது. 9 ஆயிரத்து 938 பணி யிடங்களுக்கு 16, 29, 865 பேர் விண்ணப்பித்தனர். அதில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் 12.11.2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பின்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இப்பணியிடத்திற்கு ஒரே (இராமேஸ்வரம்) மையத்திலிருந்து தேர்வு எழுதிய 37 பேர் ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர். மிக அதிக மதிப்பெண் எடுத்தவரிடம் விசாரித்தபோது ஏற்பட்ட சந்தேகம்தான். இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்பிரச்சனையில் மிக முக்கியப் புள்ளி யாக தேடப்பட்டு கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டியின் உறவினர்கள் 4 பேர் குரூப்-2 பணியிடத்தில் நியமனம் பெற்று இருப்பதாக கிடைத்த செய்திகள் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதை உணர்த்தின.  கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, தொடர்ந்து பாலிடெக்னிக் , விஏஓ, பேராசிரியர் நியமனம் மற்றும் காவலர் தேர்வுகளிலும் மிகப்பெரிய மோசடி நடை பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
குரூப் 2ஏ
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் 2018 மார்ச்சில் வெளியிடப்பட்டன. 41 துறைகளில் 1993 இடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வினை லட்சக்கணக்கானோர் எழுதியுள்ளனர்.
பாலிடெக்னிக் தேர்வு
1056 பணியிடங்களுக்கு 1.5லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் நடைபெற்ற முறைகேடு மிகப்பெரிய அளவில்  வெளிவந்து, 196 பேருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
விஏஓ தேர்வு
713 இடங்களுக்கு 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். தற்சமயம்  இத்தேர்வு குரூப்-4 தேர்வுடன் இணைத்து நடத்தப்பட்டுள்ளது.
காவலர் தேர்வு
8888 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 3 லட்சத்து 25,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் எழுத்துத் தேர்வில் 47 ஆயிரம் பேர் பாஸ் ஆகி உள்ளனர். தகுதித்தேர்வில் 8,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் ஆயிரம் பேர் போலியான விளையாட்டு சான்றிதழ்களை அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வந்ததன் காரணமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
பேராசிரியர் பணியிடங்கள்
நெட், செட் தேர்வுகளில், தேர்வு எழுதியவர்கள் 2340 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியர் பணி நியமனங்கள் நடைபெறாமல் இருந்த சூழலில் இத்தகைய அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்ட இடைத்தர கர்கள் ஆளுங்கட்சியினர் துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தீவிர வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு 30 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, நியமனத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. பணி நிய மனங்கள் இன்னும் முற்றுப் பெறாமல் இருப்பதற்கு வசூல் வேட்டை தான் காரணம் என்கின்றனர்.
30 லட்சம் பேரின் எதிர்காலம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ, பாலிடெக்னிக், விஏஓ, பேராசிரியர், காவலர் தேர்வுகளில் தமிழகத்தில் 30 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வுகளை எழுதி உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து வரக்கூடிய செய்திகள் இவர்களின் கனவை சிதறடித்து, விரக்திக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு வேலை என்பது டிஎன்பிஎஸ்சியால் தரப்படும் சாதாரண வேலைவாய்ப்பு மட்டுமல்ல; குடும்பத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்தின் துவக்கப்புள்ளி ஆகும். இதனால் தேர்வுகளில் பாஸ் ஆக வேண்டுமென இரவு பகலாக தங்களை தயார் செய்கின்றனர். தங்களுடைய சுக, துக்கங்களை மறந்து தேர்வை தன்னுடைய இலட்சி யமாக வரிந்து கொண்டு தீவிரமான முயற்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கார்ப்ப ரேஷன் பூங்காக்களிலும், நூலகங்களிலும் பயிற்சி மையங்களிலும் தங்களுடைய தேடல்களை நனவாக்க அதற்கான முயற்சியில் அனுதினமும் இயங்கி வருகின்றனர். தேர்வு அன்று கூட திருமணம் முடிந்த கையோடு எழுதுபவர்கள், பச்சிளம் குழந்தையுடன், தேர்வு மையத்தில் இளம் பெண்களும், ஆண்களும் வாசலில் காத்திருக்கின்றனர். வயதான தாயும், தந்தையும் பராமரிக்காமல் வீட்டில் விட்டுவிட்டு கவலைகள் தேய்ந்த முகத்தோடு அவர்கள் வருவது, தன் வாழ்வில் மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கையோடு தான். ஆனால் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டது தமிழக அரசு.
எங்கிருந்து துவங்குகிறது பிரச்சனை?
அரசுப் பணி நியமனங்களில் தொடர்ந்து பிரச்சினைக்கு உரியதாக இருந்து வருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களையும், தலைவரையும் அரசு தான் தீர்மானிக்கிறது. எந்த அரசு ஆட்சியில் இருக்கிறதோ அது தன்னுடைய கட்சியினரை நியமிக்கிறது. தேர்வாணைய உறுப்பினர் பதவி யை பிடிப்பதற்கு பலகோடிகள் செலவு செய்துள்ளதாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்வாணைய உறுப்பினர் மற்றும் தலைவர்கள் நியாயமான, நேர்மையான முறையில் நியமிக்கப்படுவதில்லை என்பதில் துவங்குகிறது இப்பிரச்சனை. எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் துறையில் நடை பெறும் முறைகேடுகளுக்கு ஆளும் அரசே முழு பொறுப்பாகும். பல்வேறு துறைகளில் முறைகேடுகளுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசு எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஏனெனில் நியாயமாக செயல்பட்ட இத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்தேவையற்ற முறையில் இடமாற்றம் செய்யப் பட்டதை அறிவோம். அவர் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் தான் பல் மருத்துவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர் 2 ஆகிய தேர்வுகளில் முறைகேடு உள்ளதாக, தலைமைச் செயலர், ஊழல் தடுப்பு துறைக்கு அனுப்பியதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் வீடுகளில் சோதனை நடை பெற்றது. எனவே பிரச்சனை என்பது அதிகாரத்திலுள்ள ஆளும் கட்சியிடம் இருக்கிறது. தேர்வாணைய நியமனத்தில் அரசியல் நடைபெறுவதால் ஆளுங்கட்சியினுடைய தேர்வாணையமாக மாற்றப்படு கின்ற நிலை தமிழகத்தில் உள்ளது. தற்சமயம் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. ஆனால் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தால் எப்படி முழுமையான விசாரணையை மேற்கொள்ள முடியும்? எனவேதான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பொதுச் சமூகம் உரத்துக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. கைது செய்யப்பட்ட சாதாரண ஊழியர்கள், ஒரு நீண்ட சங்கிலியின் கடைசி கண்ணிகள் ஆவார்கள்.
சித்தாண்டியின் சித்து வேலை...
சாதாரண காவலராக இருக்கக்கூடியவர் தேர்வாணையத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களை கையில் வைத்துக் கொண்டு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மீண்டும் மீண்டும் புனைகதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். சித்தாண்டியின் சித்து வேலை மட்டுமல்ல இது; இதற்குப் பின்னால் அதிகார வர்க்கமும் அரசியல் பின்புலமும் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்லமுடியும்.  உலகமய தேசிய சூழலில் நாளுக்கு நாள் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது. உலக வங்கி முதல் மூடிஸ் நிறுவனம் வரை மிகப்பெரிய பிரச்சினை ‘வேலையின்மைதான்’ என்பதை சுட்டிக் காட்டியுள்ளன. இந்நிலையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.
நவீன தொழில்நுட்பம் போதுமா?
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் தேர்வு முறையில் முறைகேடுகளை தடுக்கமுடியும் என்று கூறு கின்றனர். ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் மட்டும் இத்தேர்வு முறைகளில் உள்ள முறைகேடுகளை தடுக்க முடி யாது. அதற்கு உறுதியான அரசியல் தைரியமும் தேவைப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக ஆன்லைன் தேர்வுகள் நடத்தி இதனை முழுமையாக தடுக்கலாம் என்கிறார்கள். ஆனால் 14 லட்சம் பேர் ஆன்லைனில் தேர்வு எழுதக் கூடிய அளவிற்கு தமிழகத்தின் கட்டமைப்பு இல்லை. அது மட்டுமல்ல, ஆன்லைன் தேர்வு நடைபெற்றாலும் அந்த இடம் பாதுகாப்பானதா அல்லது மேற்பார்வை யாளர்கள் எப்படி; அவர்கள் நியாயமாக செயல்பட முடியுமா என்று ஏராளமான கேள்விகள் உள்ளன. சென்னை துவங்கி இராமேஸ்வரம் வரை உள்ள வலைப்பின்னல் வலுவானதாக உள்ளது என்பதையே இம்முறை கேடுகள் வெளிப்படுத்துகின்றன. டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை தடுத்திடுவதற்கும், முறைகேடுகளை புரிந்தவர்கள் மீது உறுதியான தண்டனை கிடைப்பதற்கு வலுவான குரலை எழுப்ப வேண்டியுள்ளது. தேர்வு எழுதியவர்களின் பிரச்சனை அல்ல; இது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த பிரச்சினையாகும். தேர்வுத்துறையில் ஊழலின் வெளிப்பாடு ஒட்டுமொத்த ஆட்சியின் வெளிப்பாடுதான். இத்துறையின் அமைச்சர் இதற்குரிய கேள்வி கேட்ட போது எனக்கும் முறைகேடுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். ஏனிந்த பதட்டம்? சமீபத்தில் மத்திய குற்றப்பிரிவு, நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய விவரங்களை வெளி யிட்டுள்ளது இதில் வேலை இல்லாதவர்கள் மற்றும் சுய வேலை செய்பவர்கள் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேலையின்மை பயங்கரத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். ஒருநாளைக்கு 36 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.மேற்குறிப்பிட்ட டிஎன்பிசி முறைகேடுகள் இத்தகைய கடுமையான விளைவுகளை மேலும் அதிகரிக்கும்.  எனவே,

♦    சிபிஐ விரிவான விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்பு உள்ள அனைவரையும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 
♦  தேர்வு முறைகளை மேலும் நவீனப்படுத்த வேண்டும்.
♦    தேர்வாணையத்தில் அரசியல் தலையீடுகள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
♦    புதிய வேலைவாய்ப்பு குறித்த கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
- என வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 18 கப்பற்படை எழுச்சி தினத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இளைஞர் பேரணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிறது.

;