கட்டுரை

img

மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும்...? இனி மோடி அரசே முடிவு செய்யக்கூடும்...!

உத்தரபிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட  பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா வழக்கில் ‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமக்களுக்கான சுதந்திரம் என்பதை எவ்விதத்திலும் மீறுவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி கனோஜியாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர். ‘‘அரசமைப்புச் சட்டம் தனி நபருக்கு அளித்துள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரமானது, புனிதமானது; மறுக்க முடியாதது. அந்த சுதந்திரத்தை எந்தவொரு அரசும் அபகரிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் தாக்குதல்களை உச்ச நீதிமன்றமும்கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மாணவர்களை மிரட்டும் அரசு? 

ஆனால் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மோடி அரசு நாட்டில் உள்ள சுமார் 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40000கல்லூரிகளுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை உயர் கல்விப்பிரிவு மாணவர்களின் சமுக வலை தள கணக்குகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உள்ளதாத அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 
கண்காணிப்பு நடவடிக்கைக்கு அரசு சொல்லும் காரணம் என்ன வென்றால் மனிதவள மேம்பாட்டுத் துறை சமூக வலைதள கணக்குகளுடன் மாணவர்களின் சமூக வலைதள கணக்குகளை இணைப்பதன் மூலம் அதில் பதிவாகும் நற்பணிகளை அரசு அறிய விரும்புகிறதாம். தங்கள் கல்வி நிறுவனம் பற்றிய நல்ல செய்திகளை வாரத்தில் ஒன்றாவது பதிவிடச் செய்ய வேண்டும் என்று மாணவர்களை நுட்பமாக மிரட்டும் தொனியில் அறிவித்துள்ளனர். அத்தோடு டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மற்றும் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் வரும் ஜூலை 31 ம் தேதிக்கு முன் கணக்குகளை துவங்க தாராளமான மனப்பான்மையுடன் கால அவகாசமும் வழங்கி உள்ளது. 

பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சி

நாட்டில் தலைவிரித்தாடும், தண்ணீர் பஞ்சம், சாதிய மத மோதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவது என்று அடுக்கடுக்காக பிரச்சனைகள் தலைவிரித்தாடும் சூழலில் மாணவர்களின் சமூக வலைத்தளங்களை  கண்காணித்து இப்போது மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. ஆம் இந்த பிரச்சனைகளை எல்லாம் மூடி மறைக்கவே பொதுத்தளத்தில் மாணவர்களின் குரல் வளையை முறிக்க தற்போது மோடி அரசு துடியாத் துடிக்கிறது. இவர்களுடைய இந்த பதற்றமே நாட்டில் கல்வித்துறை தற்போது  பெரும் சிக்கலில் உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மத்திய அரசின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை மாணவர்களின் சுய சிந்தனைக்கு முட்டுக்கட்டை போடும் முதல் உத்தியாகும். 

கல்வியின் தரம்

தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை, கற்பித்தல் தரம், ஆராய்ச்சி எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சி தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட  டைம்ஸ் உயர் கல்வி உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசை- 2019 பட்டியலின் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை; 500 இடங்களுக்குள் ஐந்து இந்திய கல்வி நிறுவனங்களே இடம் பெற்றுள்ளன.   இந்தியாவின் கல்விச்சூழலை இத்தகைய நெருக்கடியில் இருந்து மீட்கவேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசோ தனது கடமையை செய்யாமல் மாணவர்களை உளவு பார்த்து ஆர்எஸ்எஸ் கருத்துக்களை அவர்கள் எண்ணங்களில் விதைப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு திட்டம் தீட்டி உள்ளது. 

பதற்றத்தில் பாஜக 

பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தற்போது இளைஞர்களை குறிவைத்து  சமூக வலைத்தளங்களின் மூலமாகவே கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மதவிரோதம் சாதிய குரூரத்துடன் போலியாக செய்திகளை பதிவிட்டு வருவதை பாஜக இணையக்குழு முழுமையாக ஈடுபட்டு வருகிறது. மிக அருவருப்பான வார்த்தைகளால் பெண்களை டிராலிங் செய்பவர்களையும் கூட இதுவரை அன்பாலோ செய்யாத பிரதமர்தான் மோடி. அப்படியிருக்கையில் சமூக வலை தள கண்காணிப்பு என்பது பாஜகவினரின் போலி முகத்தை மாணவர்கள் அம்பலப்படுத்தி விடக்கூடாது என்ற பதற்றத்தில் தான் மத்திய அரசு கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது. 

தேர்தலில் பொய் பிரச்சாரம்

உத்திரபிரதேசத்தில் கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின்  வாட்ஸாப் குழுக்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளன. 10,344 வாட்ஸாப் குழுக்கள் மூலம் 15 லட்சம் மக்களை இணைத்துள்ளனர். பாஜக தன் அதிகாரத்தின் மூலம் முழுநேர ஊழியர்களாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், மாநிலத்தில் 5,031 நபர்களை நியமித்து செயல் படுத்தியுள்ளது. இதையே திரிபுரா,மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் செயல்படுத்தியது. தற்போது மாணவர்களை குறிவைத்து தனது அடுத்த காயை நகர்த்த துவங்கி உள்ளது. மாணவர்களிடம் தனது அரசியல் நோக்கத்தை வலுக்கட்டாயமாக  திணிக்க முயற்சிக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது. 
இதையும் தாண்டி மாணவர்களின் வலைத்தள பதிவுகள் வழியாக மாணவர்களின் மனநிலையை ஆராய்ந்து அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஒன்று திரள முயலும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு கருவியாகவே பயன்படுத்தும் ஆபத்தும்  அடங்கி உள்ளது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 

விமர்சனத்தை கண்டு அஞ்சும் பாஜக

ஏற்கனவே மோடி அரசின் தோல்வியடைந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சித்த மத்திய பிரதேச மாநிலம் சந்தர்ப்பூரைச் சேர்ந்த அபிஷேக் மிஸ்ரா என்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த மாணவர் திருமுருகன் மோடியை விமர்சித்து கருத்து பதிவிட்டதற்காக  கைது செய்து பின் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். மேலும் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட  ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி,மாரிமுத்து  மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது எல்லாவற்றையும் விட மாணவர்கள் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்தனர் என்று பாஜகவைச் சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டார். இதன் நீட்சியாகவே தற்போது உயர் கல்வி கற்கும் பெரும்பான்மை மாணவர்கள் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிரான கோபம் அதிகமாக உள்ளது என்பதை அறிந்தே மத்திய அரசு அவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர வலை வீசுகிறது.  இதுபோன்ற கண்காணிப்புகளால் மாணவர்களை உளவியல் ரீதியான மிரட்டுவதேயன்றி வேறு ஒன்றும் இல்லை. 

கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் முயற்சி

மேலும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள்பற்றி வாரம் ஒரு நல்ல செய்தியை பதிவிட வேண்டும் என்று வற்புறுத்தவதன் வழியே நிர்வாகத்திற்கு எதிராக கேள்வி கேட்கக்கூடாது என்று வெளிப்படையாகவே அச்சுறுத்துகின்றனர். கல்வியை முற்றிலும் தனியாரிடம் தாரைவார்க்க துடிக்கும் அரசு அக்கல்வி நிறுவனங்களின் முறைகேடுகளை மண்போட்டு மூடும் நடவடிக்கையாகவே உள்ளது.

உதாரணமாக தமிழகத்தில் உள்ள  537 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் கல்லூரிகள் பற்றி மாணவர்கள் எவ்வாறு வாரத்திற்கு ஒரு நல்ல செய்தியை பதிவிட முடியும். 
ஒருவேளை இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் அரசின் கட்டாயத்தால்  மாணவர்களால் பதிவிடப்படும் நல்ல செய்திகளை காரணம் காட்டியே அந்த கல்லூரிகளின் முறைகேடான நடவடிக்கைகள் மறைக்கப்படும். இதன்வழியே மேலும் மாணவர்களை வதைக்க முயல்வர். 

கேள்விக்குறியாகும் கருத்து சுதந்திரம்

மோடியின் ஆட்சியை பயன்படுத்தி நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் சங்பரிவார் அமைப்புகள் இறங்கி உள்ளன. இதற்கிடையில் சமூக வலைத்தள கண்காணிப்பை காரணம் காட்டி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் வரிசையில் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்க முயல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்ற வரிசையில் மாணவர்களுக்கான அஜெண்டாவாக ஒரே சிந்தனை என்பதை மோடி அரசே முடிவு செய்யும் அபாயம் சூழ்ந்துள்ளது. 

-எம்.பாண்டீஸ்வரி.

;