கட்டுரை

img

தெருவிளக்கு : கொரோனா அவதாரத்தின் கோபத்தைத் தணிக்க..!

இந்தியாவின் பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் கொச்சைப் படுத்துகிறவர்கள் அந்த மதத்தின் பெயராலேயே சுவாமிகள், குருஜிகள் என்றெல்லாம் தங்களையும் சொல்லிக்கொண்டு பவனி வருகிறவர்கள்தான். இதற்குத் தற்போதைய சாட்சியம், உலகெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கோவிட்-19 எனப்படும் கொரோனா கிருமியைச் சாக்கிட்டுக் கிளப்பிவிடப்பட்டுள்ள கற்பனையும் சிகிச்சையும்.

கொரோனா வைரஸ் கடவுளின் ஒரு அவதாரமாம். விலங்குக்கறி உண்பவர்களால் கோபப்பட்ட கடவுள் கொரோனா அவதாரமாக உலகிற்கு வந்து தண்டனையளிக்கிறாராம். தீ வளர்த்து யாகம் நடத்தி, “இனிமேல் இந்திய மக்கள் கறிசாப்பிட மாட்டார்கள், ஆகவே கோபத்தைக் கைவிடுங்கள்” என்று கொரோனா அவதார பகவானை வேண்டிக்கொண்டால் அவர் திரும்பிப் போய்விடுவாராம். அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் தலைவர் சுவாமி சக்ரபாணி என்பவர் இதை அறிவித்திருக்கிறார். அத்துடன் தமது பக்தர் படையைக் கொண்டு இப்படியொரு யாகத்தை மார்ச் 14 அன்று தலைநகர் தில்லியில் நடத்தியிருக்கிறார்.

“இறைச்சிக்காக விலங்கைக் கொல்கிறபோது அங்கே ஒரு புதிய சக்தி வெளியேறும். அந்த சக்தி ஒரு அழிவை ஏற்படுத்தும். அதுதான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது,” என்கிறார் சுவாமி. விலங்குக் கறி சாப்பிடுகிற பழக்கம் 2020 ஆண்டில்தான் முளைத்ததா என்ன? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருவதாயிற்றே! ஏன், வேதங்களில் குறிப்பிடப்படும் யாக வேள்விகளில் விலங்குகள் பலியிடப்பட்ட தகவல்கள் உண்டே? உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் உணவுக்காகவோ தோலுக்காகவோ எலும்புக்காகவோ மருந்துக்காகவோ கொல்லப்பட்ட விலங்குகளின் உடல்களிலிருந்து எத்தனை டிகிரி சக்தி வெளியேறியிருக்கும்? அந்த சக்தியில் இந்தப் பூமியே பஸ்பமாகியிருக்காதோ? 

யாகத்தோடு நிறுத்தியிருந்தால் கூட, தங்களது நம்பிக்கை உரிமையின் அடிப்படையில் ஏதோ செய்கிறார்கள், செய்துவிட்டுப் போகட்டும் என்று, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட நம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கே அதிலே முழு நம்பிக்கை இல்லை போலும், கொரோனா கிருமிக்கான மருந்தையும் அறிவித்திருக்கிறார்கள். அது கொரோனா தொற்றுவதைத் தடுக்குமாம், ஏற்கெனவே தொற்றியிருந்தால் குணப்படுத்துமாம். அவதாரத்தையே அடிபணிய வைக்கிற அந்த மருந்து – பசு மாட்டுச் சிறுநீர். கோமியம்.பல தலைவர்கள் இந்த மருந்தை ரகசியமாகப் பருகுகிறார்கள், வெளியே சொல்வதில்லை என்கிறார் சுவாமிகள். அவரும் அந்தத் தலைவர்கள் யார் என்று வெளியே சொல்லவில்லை. உலக நாடுகளின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பார்க்கட்டும், பிறகு அவர்களே தங்கள் மக்களுக்கு இதை வழங்குவார்கள் என்றும் சுவாமிகள் அருளியிருக்கிறார்.

இதைப் படிக்கிற உங்களுக்கு உடனே ஏற்படக்கூடிய சந்தேகத்திற்கும் அவரே பதில் சொல்லியிருக்கிறார். அதாவது இந்தியப் பசுக்களின் சிறுநீருக்குத்தான் இந்த மகிமை உண்டாம். ஜெர்ஸி உள்ளிட்ட மற்ற இனப் பசுக்களிடம் அப்படிப்பட்ட கோமியம் உற்பத்தியாகாதாம். மற்ற நாடுகளின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் இந்தியப் பசுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீரையே இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆகா, இந்தியாவின் அமோகமான ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய சரக்கு!

முன்பொரு முறை இது தொடர்பாக நடந்த கருத்தரங்கம் முடிந்த பிறகு பார்வையாளர்களிடையே நடந்த விவாதம் நினைவுக்கு வருகிறது. எல்லாப் பசுக்களுக்கும் இந்த மகிமை கிடையாது என்ற வாதத்தை ஒருவர் மறுத்தார். “இந்தியப் பசு, அந்நியப் பசு என்றெல்லாம் பேதம் பண்ணக்கூடாது. எந்தப் பசுவானாலும் இதே மகிமை இருக்கிறது – ஆனால் இந்தியப் பசுக்களின் கோமியத்துக்கு இந்தியாவில் மட்டும் எஃபெக்ட் இருக்கும், மற்ற நாடுகளுடைய பசுக்களின் கோமியத்துக்கு அந்தந்த நாட்டில் எஃபெக்ட் இருக்கும்,” என்றார் அவர்! 

வெளிநாடுகளின் பிரதமர்களை விடுங்கள், இந்தியாவின் பிரதமரே, கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்தால் பரிசளிக்கப்படும் என்று ட்விட்டர் போடுகிறார். மருந்து கண்டுபிடித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறவர்கள் நேராக இந்திய மருத்துவ மன்றத்தின் ஆய்வுக்கு அதை உட்படுத்தி நிரூபித்தால் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். சுவாமிஜி இவர்களிடம் தனது கண்டுபிடிப்பு பற்றிச் சொல்லி பரிசையும் அங்கீகாரத்தையும் பெறலாமே? இதற்கான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்கு எடுத்துச் சொல்லி உலக அறியாமையைப் போக்கலாமே?

மத்திய மாநில அரசுகள் கோவிட்-19 தடுப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறித்த ஆவணங்களை வெளியிட்டுள்ளன. அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களில், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. நோய்க்கிருமியை(Pandemic)  விட மோசமானது வதந்திக்கிருமி (Info demic) என்பதால் நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், பீதியைப் பரப்புவது மட்டுமே வதந்தியல்ல, அறிவியலற்ற  தகவல்களைப் பரப்புவதும் வதந்திதான்.

\ஆனால், மதவாத அடிப்படையில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத சிந்தனைகள் பரப்பப்படுவது போல, இதிலே கூட மதப்பாகுபாடு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிற செய்திகள் கவலையைத் தருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் தன்னை “கொரோனாவாலே பாபா” என்று சொல்லிக்கொண்டு, 11 ரூபாய்க்கு கொரோனா விரட்டுத் தாயத்து விற்பனை செய்த ஆசாமியைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். முகக்கவசம் அணிய முடியாதவர்கள் தனது தாயத்தை அணிந்துகொண்டால் வைரஸ் அண்டாது என்று விளம்பரம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டது சரிதான். ஆனால் அஹமது சித்திக் என்ற அந்தப் போலி மகிமைவாதியைக் கைது செய்ததில் உள்ள பொதுநல அக்கறையும் வேகமும், சுவாமி சக்ரபாணி போன்றோர் விசயத்தில் காட்டப்படவில்லையே?

பதஞ்சலி நிறுவன அதிபரும் யோகா ‘குரு’வுமான பாபா ராம் தேவ், ஒரு மூலிகையைக் கையில் பிடித்துக்கொண்டு, கொரோனா முறியடிப்பு மருந்து தயாரித்துவிட்டதாக வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு மருந்துகள் விற்பனை 30 சதவீதம் வரையில் அதிகரித்திருக்கிறதாம். தனது கண்டுபிடிப்பு பற்றி ஒரு அறிவியல் பத்திரிகைக்குக் கட்டுரை அனுப்பியிருப்பதாகக் கூறும் ராம் தேவ், அது எந்தப் பத்திரிகை என்று சொல்லவில்லை. உண்மையிலேயே அப்படியொரு அறிவியல் பத்திரிகைக்குக் கட்டுரையை அனுப்பி, அது பரிசீலிக்கத் தக்கதாக இருக்கிறதென்று ஆசிரியர் குழுவினர் கருதியிருப்பார்களானால் உலகத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள அவசரத்தில் அந்தக் கட்டுரை இந்நேரம் வெளியாகியிருக்கும். இந்தியாவிலேயே மணிபால் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி என்ற நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், தில்லியைச் சேர்ந்த பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் பாபாவின் கொரோனா மருந்துக் கூற்றை மறுத்துள்ளனர். ஆனால் கார்ப்பரேட் பாபாவுக்கு ஒரு நீதி, தெருவோரம் கடைவிரித்த பாபாவுக்கு ஒரு நீதியா? இந்தப் பாகுபாட்டுக் கிருமிக்கு என்ன மருந்து?

இதற்கு முன் உலகை அச்சுறுத்திய பல நச்சுக் கிருமிகளை முறியடித்தது போல, கொரோனா கிருமியையும் வெற்றிகொள்ள மருத்துவ அறிவியலாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் இந்திய மக்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள்? அறிவியல் ஆராய்ச்சிகளின் பக்கமா, மகிமைக் கற்பனைகளின் பக்கமா? ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாலும் ஒத்துழைப்புகளாலும் முறியடிக்கப்பட வேண்டியது உடலை அரிக்கும் நோய்க்கிருமி மட்டுமல்ல, அறிவை அரிக்கும் மூடநம்பிக்கைக் கிருமியும்தான்.

;