கட்டுரை

img

திருடன் கையில் சாவி....

ஊரடங்கு 60 நாட்களை எட்டும் நிலையிலும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப நடந்த வண்ணம் உள்ளனர். பலர் இறந்தும் உள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள், ஊதியம் இல்லாத நிலையில், உணவு வாங்க முடியாமல் அல்லது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் இவர்களுக்கு மத்திய அரசு அவர்களை பாதுகாக்க உருப்படியான எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. இந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துக் கொள்ள பெரும்பாலான மாநில அரசுகள் விருப்பப்படவில்லை. ஏனெனில் ஊரடங்கு முடிந்ததும் வேலை தொடங்கியவுடன், இவர்களின் அபரிமிதமான உழைப்பு முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால்தான் பாஜக ஆளும் கர்நாடகாவில் ரயில் ரத்து செய்யப்பட்டது.

இந்த தொழிலாளர்களின் உழைப்பால் பயனடைந்த மாநிலங்கள் இவர்களை கைகழுவியது. இவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவில்லை. ஊரடங்கினால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு அல்லது வேலையைப் பெறுவதற்கான எந்த வழியும் இல்லாமல்  மிகப்பெரிய இக்கட்டத்தில் உள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், இந்த தொழிலாளர்களை பாதுகாத்திருக்கலாம். அவர்கள் படும் துன்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஏமாற்றும் பாஜக அரசு
ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்லாத தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆணைகள் பறந்தன. ஆனால் 18.05.2020முதல் அந்த ஆணைகளை மத்திய அரசு திருப்பி பெற்றுக் கொண்டுள்ளது. நம்பிக்கையோடு இருந்த தொழிலாளர்களை ஏமாற்றி விட்டது இந்த அரசு. அதே போன்று இந்த கொரோனா பாதிப்பிலிருந்து தொழிலாளர்களை, மக்களை பாதுகாக்க வேண்டிய அரசுகள் தொழிலாளர்களை போராடிப் பெற்ற உரிமைகளை சட்ட சலுகைகளை பறித்து மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.உத்தரப்பிரதேச பாஜக அரசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

தொழிலாளர் நலச் சட்டத்தில் சட்டப்பூர்வமான இழப்பீடு வழங்கும் விதி 35 ஐ 3 ஆண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. ஊரடங்கிற்கு பின்  பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்க வேண்டும், தொழில்துறை முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை அரசு நியாயப்படுத்துகிறது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இந்த நடவடிக்கையை காட்டுமிராண்டித்தனமானது என்று கண்டித்ததுடன், இது தொழிலாளர்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியது. தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்னர் தற்போது உபி அரசு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற்றிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட திருத்தங்களில் பெரும்பாலானவை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கின்றன மற்றும் பணிக்கொடை, போனஸ், வருங்கால வைப்பு நிதி மற்றும் அனைத்து சலுகைகளையும் நிறுத்தி வைக்க உ.பி. மற்றும் குஜராத் அரசுகள் முன்மொழிந்து உள்ளன. அவற்றை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற தயார் நிலையில் உள்ளன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப்  மாநிலத்தில் சமீபத்தில் குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்த்தப்பட்ட உயர்வை திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதன் விளைவாக பெரும் பகுதி தொழிலாளர்களின் வாழ்நிலை பாதிக்கப்படும். மேலும் வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதினால் உழைப்பு சுரண்டப்படுவது மட்டுமல்ல வேலைவாய்ப்பிற்காக ஏங்கி இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

மத்திய, மாநில அரசுகளின் இந்த நகர்வுகள் மக்கள் தொகையின் பெரும்பகுதியாக விளங்கும் தொழிலாளர்கள் உழைப்பாளர்களை மனிதாபிமானமற்ற சுரண்டலுக்கு உள்ளாக்கி வறுமைக்குள் தள்ளும் ஏற்பாடாகும்.வேலைநிறுத்த உரிமை, எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்கம் அமைத்தல், கூட்டு பேர உரிமை, தொழில் தகராறு சட்டம் மற்றும் தொழில்துறை உறவுகள், தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன், உழைப்புக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பதற்றங்களைத் தீர்ப்பதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு  பேச்சுவார்த்தை முறை,மகப்பேறு கால பலன்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கையேடு தோட்ட தொழிலாளர் மற்றும் பீடி தொழிலில் பணிபுரிபவர்கள், சுரங்கங்கள் மற்றும் முறைசாரா தொழி லாளர்கள் பாதுகாப்பு போன்ற சட்டங்களை எல்லாம் கோவிட் நிவாரணம் என்ற பெயரால் நீர்த்துப் போக செய்ய மத்திய, மாநில அரசுகள் துடித்து வருகின்றன.

தகவல் தொடர்பு ஊழியர்களின் அவல நிலை
இது மட்டுமல்ல தகவல் தொடர்பு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்பது மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தற்போது வீட்டிலிருந்து வேலை என்பதை நிரந்தரமாக்கும் ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. ஐடி முதலாளிகள் சங்கமான நாஸ்காம் அமைப்பு வீட்டிலிருந்து வேலை முறையை 2025 ஜூலை வரை நீடிப்பதற்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. வீட்டிலிருந்து வேலை என்பது ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, வேலைபளு மேலும் அதிகரிக்கப்படுகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை வாங்குகிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையில் சமீபத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருவர்  வேலை செய்த நிலையில் மரணமடைந்துள்ளனர். ஏராளமான ஊதிய வெட்டுகள், இடைநீக்கங்கள் என பிரச்சனைகள் பெரிதாகி வருகிறது. இதனை முறைப்படுத்த வேண்டிய தொழிலாளர் துறை மௌனமாக உள்ளது. ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு வந்தவுடன் முதலாளிகளின் கோரதாண்டவம் தீவிரமாகும் நிலை தென்படுகிறது. மேலும் ஐடி ஊழியர்களுக்கான புதிய சட்ட திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை ஐடி துறை தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் ஐடி முதலாளிகள் சங்கத்திடம் மத்திய மோடி அரசு வழங்கியுள்ளது என்பது திருடன் கையில் சாவி கொடுப்பதை போன்றதாகும்.

இந்தியாவை திரும்பிப் பார்க்கும் உலக நாடுகள்
உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கிறது பாராட்டுகிறது என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் பாஜகவினர். உண்மையில் உலக நாடுகள் ஏளனம் செய்கின்றன. கொரோனா நிவாரணம் இந்தியா தவிர உலகில் உள்ள பல நாடுகள் தங்களது தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் நிவாரண நிதியை அவர்களது வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது. அமெரிக்க அரசு மாதந்தோறும் 4500 டாலர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை. பிரதமர் மோடி  கூறியது போன்று இந்தியாவை எந்த நாடும்  புகழவில்லை மாறாக ஏளனம் செய்கின்றனர் .மோடியை பாராட்டுபவர்கள் நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே. 

சுயசார்பு என்று நாமகரணம் சூட்டி நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அந்நிய முதலீடு ஈர்க்கப் போவதாக நிதி அமைச்சர் ஐந்து நாள் பேட்டியில் தெரிவிக்கிறார். ஆனால்   உழைக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் சட்டங்களை நீர்த்துப் போக செய்தால் முதலீட்டை  ஈர்க்க முடியாது. இது தான் உலக நாடுகளின் அனுபவம். 

போலிக் கண்ணீர் வடிக்கும் பிஎம்எஸ்
பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ்ன் ஆதரவுடன் செயல்படும் பாரதிய மஸ்துர் யூனியன் மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை பெயரளவில் எதிர்த்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் என்று அறிவித்து கேரளாவில் மட்டும் பெயரளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத போக்கினை கண்டித்து தொடர்ந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை நடத்தி வந்துள்ளது. தொழிலாளர்களின் நலனுக்கான சங்கமாக இருந்தால் அந்த போராட்டங்களில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது நானும் எதிர்க்கின்றேன் என்று போலிக் கண்ணீர் வடிப்பது என்பது பகல் வேடமாகும்.தொழிலாளர்களின் உரிமைகள், கண்ணியமான வாழ்க்கை வாழ ஊதியம், பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகள்,  ஒரு நல்ல வாழ்க்கைத் தரம் மற்றும் ஓய்வு, சமூக மற்றும் கலாச்சார வாய்ப்புகளை முழுமையாக அனுபவித்தல் ஆகியவை நமது அரசியலமைப்பில் உள்ள கோட்பாடுகள் . அவற்றை இந்த மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், அகில இந்திய தொழில்வாரி சம்மேளனங்கள், அரசு திட்ட ஊழியர்கள் என நாட்டின் உழைப்பாளர்கள் மீது அக்கறையுள்ள தொழிற்சங்கங்கள் 22.05.2020 அன்று நாடு முழுவதும் போராட்ட இயக்கங்களை நடத்துகின்றன. போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க நாட்டின்  சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட, ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.7500 என மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் தேசபக்தி மிக்க இயக்கத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

====கே.சி.கோபிகுமார்===

மாநிலச் செயலாளர், சிஐடியு

;