கட்டுரை

img

ஜம்மு-காஷ்மீர் உண்மையும், பொய்யும் -ஜி.ராமகிருஷ்ணன்

ஜனநாயக விரோதமாக அரசியல் சட்ட பிரிவு 370ஐயும், 35 ஏ-யும் ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  இந்த இரண்டு பிரிவுகளால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தனிமைப்பட்டு இருந்தது; அம்மாநிலத்து மக்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது இப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜாம் ஜாம் என்று வளர்ச்சியடையும் என்று பேசியிருக்கிறார். இது ஒரு வடிகட்டிய முழு பொய். 

உண்மை நிலவரம் என்ன?
வறுமை எவ்வாறு ஒழிக்கப்பட்டுள்ளது? பிறக்கின்ற போதே இறக்கின்ற குழந்தைகள் எண்ணிக்கை எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது? பிறந்த குழந்தைகள் 5 ஆண்டுகளில் இறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதா?  வாழ்நாள் ஆண்டு உயர்ந்துள்ளதா? போன்ற அளவு கோலின் அடிப்படையில்தான் வளர்ச்சி தீர்மானிக்கப்படு கிறது. ஒட்டுமொத்த ஜி.டி.பி.யை மட்டும் வைத்து வளர்ச்சியை தீர்மானிக்கக் கூடாது என நோபல் விருது பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் அடிக்கடி வலியுறுத்துவார். (பட்டியல் காண்க) ஒப்பீட்டளவில் மனிதவள மேம்பாட்டில் பாஜக அதிகாரத்தில் உள்ள குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை விட ஜம்மு-காஷ்மீர் முன்னிலையில் உள்ளது. ஏதோ ஜம்மு-காஷ்மீர் பின்தங்கியிருப்பதாகவும், இனி தான் அதை தூக்கி நிறுத்தப் போவதாகவும் மோடி நாட்டு மக்களிடம் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியுள்ளார்.  பிரச்சனை இதுவல்ல. வளர்ச்சியடைந்திருந்தாலும் வளர்ச்சியடையாமல் இருந்தாலும் ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது சரியா தவறா என்பது தான் பிரச்சனை.  1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில் தில்லி செங்கோட்டை யில் ஜவஹர்லால்நேரு மூவர்ணக்கொடியை ஏற்றிய போது ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. அங்கு மன்னராட்சி இருந்தது. ஜம்மு - காஷ்மீர் மன்னர் ஹரிசிங் ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பவில்லை. பாகிஸ்தானுடனும் இணைக்க விரும்பவில்லை. தனி நாடாக நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். இச்சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் அரசு ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிக்க படையை அனுப்பியது. அப்படை ஸ்ரீநகர் அருகில் வரை வந்துவிட்டது.  பாகிஸ்தானுடைய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து  தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா மக்க ளை திரட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை முறியடித்தார்.  1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.நா. சபையில் பேசிய ஷேக் அப்துல்லா, நாங்கள் பாகிஸ்தானுடன் சேரு வதை விட இறந்து போக தயாராக இருக்கிறோம். அந்த  நாட்டுடன் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாக குறிப்பிட்டு ள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மக்கள் தொகையில் இஸ்லாமி யர்கள் 67 சதவீதம் பேர். அருகில் ஒரு இஸ்லாமிய நாடு  உருவாகியுள்ளது. இத்தகைய சூழலிலும் இந்தியா வோடு ஜம்மு-காஷ்மீர் இணைய வேண்டும் என்று ஷேக்அப்துல்லா எடுத்த முடிவு அவருடையது மட்டுமல்லாமல் அம்மாநிலத்தின் மக்களுடைய மதச்சார்பற்ற உணர்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு பிறகு தான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைப்பதை ஏற்றுக்கொண்டார்.  இத்தகைய பிரத்யேகமான சூழ்நிலையில் தான் அரசியல் சட்டத்தில் 370வது சரத்து சேர்க்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்ல; வடகிழக்கு எல்லை மாநிலங்களுக்கும், வேறு சில பகுதிகளுக்கும் அரசியல் சட்டம் சில சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது.  “மாநிலங்களின் ஒன்றியம்” தான் இந்தியா என்று அரசியல் சட்டத்தினுடைய முதல் பிரிவு பிரகடனப்படுத்து கிறது. இதன் பொருள் இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி தன்மையை அடிப்படையாகக் கொண்டது. 370வது பிரிவை திருத்த வேண்டும் என்றாலோ, அகற்ற வேண்டும் என்றாலோ அந்த மாநில சட்டமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தான் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப் போனால் காஷ்மீர் மாநில அரசு ஒரு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி அதன் முடிவின் அடிப்படையில் தான் மத்திய அரசாங்கம் முடிவு செய்ய முடியும் என ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வாதிகார நடவடிக்கை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாஜக மக்கள் ஜனநாயக கட்சியுடன் 2014ல் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்போதெல்லாம் பாஜக 370வது சரத்து பற்றியோ, 35 ஏ சரத்து பற்றியோ ஏதும் பேசவில்லை. 4 ஆண்டு களுக்கு பிறகு ஆட்சியில் இருந்து பாஜக விலகியது. பெரும்பான்மையை இழந்த மக்கள் ஜனநாயக கட்சி இதர கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆளு நருக்கு கடிதம் எழுதியது. இத்தகைய ஆட்சி உருவாகக் கூடாது என்ற நோக்கத்தோடு மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு அங்கே ஜனாதிபதி ஆட்சியை உருவாக்கியது.  ஜனாதிபதி ஆட்சியில் ஜம்மு-காஷ்மீர் உள்ளது. அந்த ஜனாதிபதியே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாத காலத்தில் 370வது பிரிவை ரத்து செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இது சர்வாதிகார நடவடிக்கை மட்டுமல்ல. இது ஒரு மிகப்பெரிய ஜனநாயக படுகொலையும் ஆகும். மக்களுக்கு ஆற்றிய பிரதமர் உரையில் “370ஐ ரத்து செய்வதன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், அண்ணல் அம்பேத்கர், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி,  வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் இன்று நனவாகின்றன”  என பெருமிதம் கொள்கிறார். இதிலும் உண்மையை மறைக்கிறார்.  சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ரான சர்தார் வல்லபாய்படேல், பிரதமர் நேரு, அமைச்சர்  கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் சந்திப்பின் போது (வல்லபாய்படேல் இல்லத்தில்) 370வது பிரிவை சேர்ப்பது என்று முடிவு செய்தனர். வல்லபாய்படேல் 370ஐ ஏற்க மறுத்ததாக பிரதமர் பொய் உரைக்கிறார். இந்த முடிவை அண்ணல் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார்.  இந்து மகாசபையின் தலைவராக இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த சியாம பிரசாத் முகர்ஜி  370வது பிரிவை ஆட்சேபித்தார் என்பது உண்மை. அவர் கனவை நிறைவேற்றுவதாக மோடி பேசியிருக்கிறார். 370வை எதிர்ப்பது மட்டும் சியாம பிரசாத் முகர்ஜியின் கனவல்ல. சியாம பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்திய அரசியல் சட்டத்தையும் மூவர்ண தேசியக் கொடியையும் ஏற்க மறுத்தனர். அரசியல் சட்டத்தையும்; தேசியக் கொடியையும் எதிர்ப்பது தான் ஆர்.எஸ்.எஸ்சின் கனவு என்றால் அதை மோடி நனவாக்கப் போகிறாரா?  ஆர்கனைசர் என்ற ஆர்.எஸ்.எஸ் இதழின் (30.11.1949) தலையங்கத்தில் அரசியல் சட்ட வரைவு அறிக்கையில் மனுநீதியைப் பற்றி ஒன்றுமில்லை என்றும் மேலை நாடுகளுடைய அரசியல் சட்டங்களை அப்படியே காப்பி அடித்துள்ளதாகவும் குறிப்பிடப்படு கிறது. சனாதன நால்வருண சாதி அமைப்புகளை கட்டிக்காக்கக்கூடியதாக அரசியல் சட்டம் இருக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்சின் லட்சியம். அதனால் தான் சாதிய ஒடுக்குமுறையை ஆதரிப்பதோடு சாதி மறுப்புத் திருமணத்தை இப்போதும் ஆர்.எஸ்.எஸ். எதிர்த்து வருகிறது.  மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் தன்னுடைய ‘சிந்தனைக் கொத்து’ என்ற நூலில் மூவர்ண தேசியக்கொடியையும் எதிர்த்து எழுதியிருக்கிறார். இவர்கள் கனவை மோடி நிறைவேற்ற விரும்புகிறாரா?  370ஐ ரத்து செய்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக மட்டும் பார்க்கக்கூடாது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சியின் மீதே மோடி அரசு தாக்குதல் தொடுத்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டுகிறது. மேலும் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மீது தாக்குதல் தொடுப்பது மாநிலம் முழுவதும் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கமும் மோடி அரசின் முடிவில் பதுங்கியுள்ளது.  7.8.2019 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜீத் தோவல் ஸ்ரீநகருக்குச் சென்று பாதுகாப்புப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடுகிறார். ஜம்மு - காஷ்மீரில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தான் சாலையோர கையேந்தி பவனில் சாப்பிட்டதாகவும் பேட்டியளித்திருக்கிறார். இது தான் உண்மை என்றால் 9.8.2019 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜாவையும், விமான நிலையத்திலேயே தடுத்து பல மணி நேரம் ஏன் நிறுத்த வேண்டும்.  அவர்கள் என்ன கேட்டார்கள்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை சந்திப்பதோடு எதிர்க்கட்சி தலைவர்களையும் மக்களையும் சந்திக்க வேண்டும் என்று 8.8.19 அன்று ஜம்மு-காஷ்மீர் ஆளுனருக்கு கடிதம் எழுதிவிட்டுத்தான் ஸ்ரீநகருக்குச் சென்றனர். ஆனால் இரண்டு தலைவர்களையும் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.  370ஐ ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 10.8.2019 அன்று சென்னையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு ஜம்மு-காஷ்மீர் சென்று மக்கள் கருத்தறிய அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரையில் மத்திய அரசு எடுத்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை பாது காக்கவும் மதச்சார்பற்ற, ஜனநாயக கூட்டாட்சி குடியரசை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவருக்கும் உள்ளது.

கட்டுரையாளர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

 

 

;