கட்டுரை

img

ஜனரஞ்சகமான தலைவர் - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் கே.வரதராசன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அளப்பரிய சிறந்த தலைவர், 2020 மே 16 அன்று தன்னுடைய 73ஆவது வயதில் காலமானார். அவரது மரணத்தின் மூலம், ஜனநாயக விவ சாய இயக்கம் ஓர் அர்ப்பணிப்பு மிக்க போராளியை இழந்தி ருக்கிறது. அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவில் விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வ தற்கான பாதையிலேயே கழிந்தது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாய சங்கத்தில் தோழர்கள் மற்றும் முன்னணி ஊழி யர்களால் கே.வி. என்று அழைக்கப்பட்ட தோழர் கே. வரத ராசன், தமிழ்நாட்டில் கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் 1946 அக்டோபர் 4 அன்று பிறந்தார். அவர் சிவில் இன்ஜினி யரிங்கில் பட்டயம் பெற்றபின்னர், மாநில அரசின் கீழ் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக சேர்ந்தார். எனினும், அரசு ஊழியராக அவர் பணியாற்றியது சொற்ப காலமேயாகும். இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்ட தோழர் கே.வி. 1969இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1970இலேயே கட்சியின் முழுநேர ஊழியரானார். தோழர் கே.வி. தன்னுடைய வாழ்க்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின்படி, இந்தியாவில்  மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்காக முழுமை யாக அர்ப்பணித்துக்கொண்டுவிட்டதால், இடையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணியிடம் கிடைத்த போதும் அதை நிராகரித்துவிட்டார்.  

இடதுசாரி அரசியல் பக்கம்....

1966இல் உணவு, அந்நியச் செலாவணி, ரூபாய் மதிப்பு முதலிய மூன்றுவிதமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட தைத் தொடர்ந்து 1960களின் பிற்பகுதியில் நாட்டின் அரசியல் மிகவும் நொதித்துப் போயிருந்தது.1967இல் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எட்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்த லில் மட்டும் குறைந்த அளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பசுமைப் புரட்சியின் முந்தைய ஆண்டுகள், கிரா மப்புற இந்தியாவில் வர்க்க முரண்பாடுகள் உக்கிரமாகி இருந்ததையும், நாட்டின் கிழக்கு மற்றும் தென் பிராந்தி யங்களில் இடதுசாரிகளின் தலைமையில் இடதுசாரி இயக்கமும், விவசாய இயக்கமும், குறிப்பாக மேற்கு வங்கத் திலும் கேரளாவிலும் சற்றே எழுச்சியுடன் முன்னேறியதை யும் பார்த்தது. 1960களின் மத்தியிலிருந்து 1970களின் மத்திய காலம் வரைக்கும், பத்தாண்டுகளில், தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்க ளால் இளைஞர்கள் பலர் ஈர்க்கப்பட்டார்கள். இவ்வாறான இந்திய அரசியல் வளர்ச்சிப் போக்குகளுடன், இந்தோ-சைனாவில் (அதிலும் குறிப்பாக வியட்நாமில்) நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டம் இந்தியாவிலிருந்த முற்போக்கு இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஊட்டியது. இந்த ஒட்டு மொத்த பின்னணியும் தோழர் கே.வி.யை இடதுசாரி அரசியல் பக்கம் இணைத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்கு கேவி-யின் அர்ப்ப ணிப்பு, கடினமாக வேலை செய்வதற்கும், நடைமுறை அரசியல் மற்றும் ஸ்தாபன வேலைகளில் கற்றுக்கொள்வ தற்கும் மற்றும் தத்துவத்தைக் கற்பதிலும் அவரிடமிருந்த ஆர்வம் மற்றும் விழைவு ஆகிய அனைத்தும் கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் முக்கியமான பொறுப்புகளை அவரிடம் ஒப்படைப்பதற்கு இட்டுச்சென்றன. 1970களின் முற்பகுதி ஊதிய முடக்கத்தைத் திணிப்பதற்கான முயற்சிகள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் தொழி லாளர்கள் எண்ணற்றப் போராட்டங்களை நடத்தியதைப் பார்த்தது. இத்தகைய வீரஞ்செறிந்த போராட்டங்களின் உச்சம்தான் அகில இந்திய ரயில்வே வேலைநிறுத்தமாகும். திருச்சியில் நடைபெற்ற இப்போராட்டங்கள் அனைத்து டனும் மிகவும் நெருக்கமான முறையில் கே.வி. இருந்தார். 

1975இல் ஜூன் 25 நள்ளிரவிலிருந்து இந்திரா காந்தி யால் தலைமை தாங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், நாட்டில் உள்நாட்டு அவசரநிலையைப் பிரகடனம் செய்தது. இதனால் கேவி தன்னுடைய அரசியல் பணிகளைத் தொடர்வதற்காக தலைமறைவானார். ஓராண்டு கழித்து அவசரநிலையை விலக்கிக்கொண்ட பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழுவின் செயலாளராக தோழர் கே.வி. தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் கட்சியின் மத்தியக் குழுவிற்கும், மத்திய செயலகத்திற்கும் பின்னர் 2005இல் அரசியல் தலைமைக்குழுவிற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 வரை  அரசியல் தலைமைக் குழுவில் செயல்பட்டார். அதன்பின்னர் இறக்கும் வரையில் மத்தியக் குழுவில் செயல்பட்டார்.

சாதிய ஒடுக்குமுறைக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் எதிராக...

தோழர் கே.வி. 1970 மத்தியிலிருந்து 1980 மத்திய காலம் வரையிலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி னார். இந்தக் காலகட்டத்தில், மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் விவசாயத் தொழிலா ளர் இயக்கத்தின் வளர்ச்சியையும், சாதிய ஒடுக்குமுறை அதே போன்று வர்க்க ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக எண்ணற்றப்  போராட்டங்களையும் பார்த்தது.

வெகுஜன அரசியல் பணியில் கேவி-யின் பிரதான அரங்கம் விவசாய இயக்கமாகும். 1986இல் கேவி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த பத்தாண்டுகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றில் கேந்திரமான பங்களிப்பினை ஆற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின் புரிதலுடன், இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சு, தொழி லாளர்-விவசாயிகள் கூட்டணி என்பதையும், அதிலும் கிரா மப்புறங்களில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்களை அணிதிரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலும் எப்போதும் விழிப்புடன் இருந்து செயல்பட்டார். 1998இல் கேவி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 2013 வரையில் பணியாற்றினார். அவர் மரணம் அடையும் சம யத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

தோழர்கள் இ.எம்.எஸ்., பி.சுந்தரய்யா மற்றும் பி.டி. ரணதிவே ஆகியவர்களின் எழுத்துக்களால் மிகவும் ஈர்க்கப் பட்டிருந்த தோழர் கே.வி. சாதிய ஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை ஆகிய இரண்டுக்கும் எதிராக ஒரேசமயத்தில் போராட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக, சாதிய அமைப்புமுறையானது உற்பத்தி உறவுகளிலும், அரசியல் மற்றும் சித்தாந்த மேல்கட்டுமானத்தில் பிராமணீய சிந்த னையை உயர்த்திப்பிடிக்கும் விதத்திலும் இருப்பதை அவர் உய்த்துணர்ந்திருந்தார்.

பிரச்சனைகளைத் தீர்க்க...

தோழர் கே.வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குறிப்பி டத்தக்க அளவிற்கு ஸ்தாபனத் திறமைகளைப் பெற்றி ருந்தார் என்பதை அனைவரும் அறிவோம். கட்சியிலும்,  வெகுஜன ஸ்தாபனங்களிலும் அனைத்து மட்டங்களிலும் முக்கியமான பொறுப்பு வகித்திடும் தோழர்களை மதிப்பிடு வதில் பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அதன்மூலம் எண்ணற்ற தோழர்களை கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் உயர் பொறுப்புகளுக்கு உயர்த்தி இருக்கிறார்.  உள்கட்சி ஸ்தாபனப் பிரச்சனை களைப் பொறுத்தவரை தோழர் கே.வி. நடைமுறைப் படுத்திய கொள்கை என்பது, விவாதங்கள் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு,  பிரச்சனைகள் மீதுதான் அடிப்படையாக இருக்க வேண்டுமேயொழிய, நபர்களின் மீது இருக்கக்கூடாது என்பதாகும். விவாதங்களின்போது தோழர்கள் மற்றும் கட்சிக் குழுக்கள் புரிந்திட்ட தவறுகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்மூலம் சரிசெய்யப்படும். கட்சியிலும் சரி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்திலும் சரி, பிரச்சனைகள் முன்னுக்கு வரும் சமயங்களில் கேவி தலையிட்டு பல ஸ்தாபனப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவி இருக்கிறார்.

விவசாய இயக்கத்தின் அன்றாட வெகுஜனப் பணிக ளிலும், கட்சியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அரசியல் கட மைகளை நிறைவேற்றுவதிலும் அவர்  ஆழமான முறையில் பங்கேற்றிருந்தபோதிலும், தோழர் கே.வி. மார்க்சிய இலக்கியங்களையும், இதர இலக்கியங்களையும் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கி இருந்தார். அதன் மூலமாக அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் நடப்பு வளர்ச்சிப்போக்குகள் குறித்தும் நன்கு அறிந்தவராக இருப்பதற்கு முயற்சித்தார்.  கட்சிக் கல்வியைக் கற்பித்திடும் முக்கிய கல்வியாளராகவும் அவர் விளங்கி, கடந்த பல பத்தாண்டு களாக கட்சியிலும்,  வெகுஜன ஸ்தாபனங்களிலும் இயங்கி வரும் முன்னணி ஊழியர்களுக்கு பல்வேறு அரசியல் வகுப்பு களையும் எடுத்திருக்கிறார். அவர், மார்க்சிய தத்து வம் மற்றும் இந்திய தத்துவம் உட்பட அரசியல், சமூக மற்றும் கலாச்சாரப் பிரச்சனைகள் மீது  எண்ணற்ற நூல்களையும் சிறுபிரசுரங்களையும் எழுதியிருக்கிறார்.  

தோழர் கே.வி., தேசிய அளவில் தலித் ஒடுக்குமுறை விடு தலை முன்னணி மூலமாகவும், தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மூலமாகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டை வலுப்படுத்துவதில் கேந்திரமான பங்க ளிப்பினைச் செய்திருக்கிறார்.

படைப்பாளியாக...

தோழர் கே.வி., பன்முகத் திறமைகள் படைத்தவர். அவர் பாடல்களும், கட்சியின் வீதி நாடகங்களுக்கான நகைச் சுவை உரையாடல்களையும் இயற்றி இருக்கிறார். அவற்றிற்கு இசையும் கூட அமைத்துத் தந்திருக்கிறார். கட்சி மற்றும் விவசாய சங்க மாநாட்டு மேடைகளிலே அவர் பாட லிசையுடன் ஆடுவதைப் பார்த்துப் பலரும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பியிருக்கின்றனர். இவ்வாறு இவர் இந்த அமைப்புகளில் உயர் பொறுப்புகளில் இருந்தபோதும், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஊழியர்களுடன் இரண்டறக் கலந்து செயல்படுவதற்கு அவை இவருக்குத் தடையாக இருந்ததில்லை.  

கே.வி.யின் பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், அவர், அவருடன் சேர்த்து தங்கள் குடும்பத்திலிருந்து எண்ணற்றோரை கட்சிக்கும் இயக்கத்திற்கும் கொண்டு வந்திருப்பதாகும். தோழர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் இணைந்து கூடுதல் நேரம் செலவழிக்க எப்போதும் அவர் தயாராக இருந்தார்.

செவ் வணக்கம் தோழர் கே.வி.!

தமிழில்: ச.வீரமணி
 

;