கட்டுரை

img

சித்திரச் சோலைகளே... உமை நன்கு திருத்த இப்பாரினிலே...

கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர் உரிமைகள் குறி வைக்கப்படுகின்றன. பா.ஜ.க வின் உ.பி மாநில யோகி 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்துகிற அறிவிக்கையை வெளியிட்டு பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பொது நல வழக்கு ஒன்றின் பின்புலத்தில் திரும்பப் பெற்றுள்ளது. எனினும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் 4 தவிர மற்ற சட்டங்கள் அம் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு செல்லத் தக்கத்தல்ல என்கிற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஒடிசா, கோவா, மஹாராஷ்டிரா போன்ற மாநில அரசுகளும் இதைப் போன்ற சில முடிவுகளை முன்னரோ, தற்போதோ எடுத்துள்ளன. சி.ஐ.ஐ போன்ற முதலாளிகள் அமைப்புகளும் இது போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு முன் வைத்துள்ளன. தொழிலாளர் சட்டங்களும் உரிமைகளும் நீண்ட நெடிய வரலாறு உடையவை. 170 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உலக அளவிலும், இந்தியாவிலும், தமிழகத்திலும் 8 மணி வேலை நேரத்திற்காக நடந்தேறிய போராட்டங்கள் (1840- 1920) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 

முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே உங்கள் வேரினிலே...

மார்க்சும் வேலை நேரமும்
ஜூலை 1, 1847
10 மணி நேர வேலைக்கான பிரிட்டன் தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றம். 
முதற்கட்டமாக 11 மணி நேரம் என்பது இளைஞர்கள் (13 - 18 வயது), பெண்கள் ஆகியோருக்கு...
மே 1, 1848 ல் இருந்து எல்லா தொழிலாளர்க்கும் 10 மணி நேரம். 
எப்படிப்பட்ட கொடூரமானவை இந்த பிரிட்டன் தொழிலகங்கள்!
மார்க்சின் வார்த்தைகளில் 
“குருதி குடிக்கும் பிசாசுகள். ரத்தத்தை உறிஞ்சி மட்டுமே வாழ முடிந்தவர்கள். குழந்தைகளின் ரத்தமும்தான்...”
இப்படிப்பட்ட பிரிட்டனில்10 மணி நேர வேலைக்கான போர்க் குரல் எழுந்ததை மார்க்ஸ் பாராட்டுகிறார்.
“நவீன தொழில்களில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. அதிலும் தொழில்களின் தாயகத்தில் அது வெடித்துள்ளது... ஆங்கில தொழிலாளர்கள் முன் வரிசை வீரர்கள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு மட்டுமல்ல... நவீன தொழிலாளி வர்க்கம் முழுமைக்குமே... இதற்கான கருத்தியலை உருவாக்கியவர்கள் முதல் தாக்குதலை மூலதனத்தின் கருத்தியலை நோக்கி தொடுத்திருக்கிறார்கள்”
மார்க்ஸ் மேலும் கூறுகிறார்.
“10 மணி நேர வேலை சட்ட வரைவு ஓர் பெரும் அரசியல் வெற்றி மட்டுமல்ல. அது ஓர் கோட்பாட்டின் வெற்றி. பட்டப் பகலில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்திற்கு முதல் முறையாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் கீழ்ப்படிந்த நிகழ்வாகும்”
எவ்வளவு சிறப்பு மிக்க வரலாறு!

பால்டிமோர் சிறப்பு மாநாடு - 16.08.1866
அமெரிக்காவின் தொழிற்சங்கங்கள், எட்டு மணி நேர குழுக்கள், உள்ளூர் தொழிலாளர் அமைப்புகள், நகர கூட்டு குழுக்கள் பங்கேற்ற நிகழ்வு.
வாசல் பதாகை
“உழைப்பின் புதல்வர்களே வருக! வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு... எல்லா திசைகளில் இருந்தும்” என்று பளிச்சிட்டது. அதில் முதல் நாடு தழுவிய கூட்டமைப்பு “தேசிய தொழிலாளர் சங்கம்” (National Labour Union) உருவானது.
அதன் வரலாற்றுச் சிறப்பு பிரகடனத்தில்...
“முதலாளித்துவ அடிமைத் தளையில் இருந்து சுதந்திரத் தொழிலாளர் விடுதலை பெற முதலும் பெரியதுமான தேவை அமெரிக்காவில் எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 8 மணி நேரத்தை உழைப்பு நாளாக அறிவிக்கிற சட்டம் நிறைவேற்றப்படுவதாகும். இந்த சிறப்பு மிக்க நிலையை எட்ட எங்கள் முழு சக்தியையும் ஒன்று திரட்ட உறுதி ஏற்கிறோம்.”

தேசத்தின் தேகம் அவர்கள்...
ஜெனிவாவில் 1866 செப்டம்பர் 3-8  நடந்த முதல் அகிலம் வேலை நேர வரையறுப்பு பற்றி பேசியது. மார்க்ஸ் அதற்கான நகலை எழுதினார். வேலை நேர வரையறை என்ற அத்தியாயத்தில்,
“தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலம், உடல் பலம் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. அவர்களே தேசத்தின் தேகம். அவர்களுக்கு அறிவார்ந்த வளர்ச்சி, சமூக ஊடாடல், சமூக - அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஆகவே நாங்கள் 8 மணி நேர வேலை என்பதை ஒரு வேலை நாளுக்கான சட்டப்பூர்வ வரம்பாக முன் மொழிகிறோம்”
இதன் முக்கியத்துவத்தை மார்க்ஸ் மூலதனம் நூல் கடிதம் ஒன்றில் விளக்குகிறார். 
“வேலை நேரம் வரையறுக்கப்படாமல், வரையறுக்கப்பட்ட அளவை உறுதியாக அமலாக்காமல் மாற்றங்களை நோக்கி வெற்றிகரமாக நகர்வதற்கான எந்த நம்பிக்கையும்  பிறக்காது”.
8 மணி நேர வேலை என்பதற்கு பின்னால் எவ்வளவு செய்திகள். அர்த்தங்கள்

எனது நியாயமே உங்கள் குற்றச்சாட்டுதான்
1886 மே உலக வரலாற்றில் திருப்பு முனை. 8 மணி நேர வேலை கோரிக்கைக்கு உயிர் தந்த உன்னதமான நாள்.
இது ஹே மார்க்கெட் வழக்கில் மே தின தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள். உனக்கு ஏன் மரண தண்டனை விதிக்கக் கூடாது என நீதிபதி கேரி கேள்வி. ஸ்பைஸ் பதில் இதோ...
“நான் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக இன்னொரு வர்க்கத்தின் பிரதிநிதியோடு பேசுகிறேன். 500 ஆண்டுகளுக்கு முன்பாக வெனிஸ் நகரத்து டோகே ஃபலேரி ஓர் நீதி மன்றத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளையே இங்கு கூற விழைகிறேன். எனது நியாயம் என் மீதான உங்கள் குற்றச்சாட்டுதான். என் மீதான குற்றச்சாட்டின் அடிப்படை காரணம் உங்களது வரலாறு”.
ஆஸ்கார் நுபே குற்றவாளிகளில் ஒருவர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. அவர் நீதிபதியிடம் கூறுகிறார். 
“என் மற்ற சகாக்கள் உடன் சேர்ந்து தூக்கில் ஏற இயலாததற்காக வருந்துகிறேன், யுவர் ஆனர்”
ஒருவர் மரணத்திற்கு சவால் விடுகிறார். இன்னொருவர் மரணத்தை நாடுகிறார். துணிச்சல் மிக்க தீரர்கள். தியாகிகள்.

இருளை கொண்டு வந்த மின்சாரம்
மின்சாரம் அறிமுகம் ஆவதற்கு முன்பாக இரவுப் பணிகள் குறைவாக இருக்கும். முதலாளிகள் வேலை வாங்க நினைத்தாலும் இருட்டு அவர்களை ஓரளவிற்கு மேல் அனுமதிக்காது.
1905ல் மின்சார விளக்குகள் அறிமுகம் ஆனவுடன் பல மில் அதிபர்கள் வேலை நேரத்தை அதிகரித்து விட்டார்கள். நிறைய வேலை நிறுத்தங்கள் அங்கும் இங்குமாய் நடந்தேறின. பம்பாய் பஞ்சாலைகளில் அதீத வேலை நேரம் சுமத்தப்படுகிற முடிவுகளை எதிர்த்து 1905ல் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. அமிர்த பஜார் பத்திரிகையின் பதிவு இது.
“அண்மைய பம்பாய் மில் தொழிலாளர் போராட்டம் அக்டோபர் 8 அன்று மாலையில் பெரும் குழப்பமாக உருவெடுத்தது. பெரும் என்ணிக்கையிலான, அதாவது 3000 லிருந்து 4000 பேர் பல மில்கள் முன்பு தீவிரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள். அவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வேலை பார்க்க மறுத்தது மற்றுமின்றி மற்ற விருப்பமுள்ள தொழிலாளர்களையும்  அனுமதிக்கவில்லை.”

உறங்கா உழைப்பு
இன்று வேலை நேர அதிகரிப்பு நோக்கி அரசு நகரத் துடிக்கிற, நகர்ந்திருக்கிற நேரம். வரலாற்று சக்கரத்தை பின்னோக்கி அவர்கள் சுழற்ற முனைகிற சூழலில் தொழிலாளி வர்க்கம் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. 
இதோ 1908ல் அமைக்கப்பட்ட இந்திய தொழிலாளர் ஆணையத்தின் அறிக்கை கூறுவது...
* அகமதாபாத்தில் சராசரி வேலை 12 மணி நேரம். மின்சாரத்தால் இயங்குபவை எனில் 14 மணி நேரத்திற்கும் அதிகம். 
* பம்பாயில் சராசரி வேலை நேரம் 12 மணி. ஆனால் அங்கிருந்த 85 பருத்தி ஆலைகளில் 60 மின்சாரத்தால் இயங்குபவை. அவற்றில் எல்லாம் சராசரி வேலை நேரம் 13 மணி முதல் 15 மணி. 
* தில்லியில் 13 1/2 முதல் 14 1/2 மணி நேரம். 
* ஆக்ராவில் 13 3/4 முதல் 15 1/4 மணி நேரம். 
* லாகூர், அமிர்தசரசில் 13 மணி முதல் 13 மணி 40 நிமிடங்கள்.
* பிரிட்டிஷ்காரர்கள் கல்கத்தாவில் வைத்திருந்த சணல் ஆலைகளில் 15 மணி, 15 1/2 மணி, 16 மணி என்று இருந்துள்ளது. 
* நூற்பாலைகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 17 மணி, 18 மணி நேரம் என்று இருந்திருக்கிறது.
* அரிசி ஆலை, மாவு மில்களில் சில நேரம் 20 லிருந்து 22 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டுள்ளது. 
* அச்சகங்களில் 22 மணி நேர வேலை தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வாங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1905 டைம்ஸ் ஆப் இந்தியாவின் பதிவு இது....
“ அமைப்பு இயங்கிக் கொண்டே இருந்தது அளவற்ற லாப வேட்கை, பேராசை மீது எந்த கட்டுப்பாடும் இல்லாமல்... லாபம் குவிந்தது. ஆலை அதிபர்கள் புனிதமான பல தீர்மானங்களை போடுவார்கள். ஆனாலும் சமத்துவமின்மை தொடரும். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் கசப்பான கதறல்கள் காதில் விழாது...இந்த கதைகள் மிகைப்படுத்தப்பட்டவையோ என கருதுபவர்கள், இப்படி சலிப்பும், கேவலமான முறையில் வேலை வாங்கப்படுபவர்கள் கொஞ்ச நேரம் தூக்கத்தையும் வலிய கலைத்து கொண்டு வேலைக்கு மீண்டும் ஓடுகிற காட்சிகளை காணலாம்.”
“கும்மிருட்டை கடந்து சென்றால் அங்கு கடவுள் ஓர் அழகான  ரோஜா போன்ற விடியலை  செய்து வைத்திருக்கிறார்”
இது 112 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ணனை. இவ்வளவுக்கும் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு பிரிட்டிஷ் ஆதரவு இதழ். 
விடியலை தரிசிக்க எவ்வளவு போராட்டங்கள்... தியாகங்கள்....

பி அண்ட் சி மில் சென்னையின் எழுச்சி 1878 முதல்
பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்களில் (இரட்டை மில்கள்) துவக்க காலத்திலேயே நிறைய வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 
அது துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே பக்கிங்காம் மில்லில் ஜூன் 26, 1878ல் முதல் வேலை நிறுத்தம். கோரிக்கை என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் மில் மூடப்பட வேண்டும் என்பதுதான். நிர்வாகம் இவ்வேலைநிறுத்தத்தை உடைக்க தொழிலாளர்களை பம்பாயில் இருந்து கொண்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்திய தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
1889ல் கர்நாடிக் மில்லில் வேலை நிறுத்தம். கோரிக்கை, வார விடுமுறை வேண்டும் என்பதாகும். இவர்களுக்கு ஆதரவாக பங்கிம்காம் தொழிலாளர்களும் சகோதர வேலை நிறுத்தம் செய்கிறார்கள். எவ்வளவு அற்புதமான தொழிலாளி வர்க்க உணர்வு பாருங்கள். 
ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் வேலை பார்க்க மறுக்கிறார்கள். “கலவரம்” நடந்தேறியது. நிர்வாகம் காவல் துறையை அழைக்கிறது. வழக்கம் போல வெளி தொழிலாளர்களை பம்பாய், பாண்டிச்சேரியில் இருந்து வரவழைத்து வேலை நிறுத்தத்தை உடைக்கிறது.

இந்தியா
1862 ல் 8 மணி நேரத்திற்கு ஒலித்த குரல்இந்திய ஆலைத் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமாக ஆவணங்களில் பதிவாகி இருப்பது ஹௌரா ரயில் நிலைய தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகும். 
இது 1862 ஏப்ரல்- மே மாதங்களில் நடந்தேறியுள்ளது. 1200 பேர் பங்கேற்றுள்ளனர். 1853 ல் தான் இந்தியாவில் ரயில்வே அறிமுகம் ஆகிறது. எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு வேலை நிறுத்தம் என்பது நம் புருவங்களை உயர்த்துகிறது. புகழ் பெற்ற சிகாகோ ஹே மார்க்கெட் மேதின  போராட்டத்திற்கு 24 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் 8 மணி நேர வேலைக்கான குரல் எழுந்திருப்பது இன்னும் நம்மை வியக்க வைக்கிறது. 
இதற்கு முன்னதாக, பின்னதாக நடந்த வேலை நிறுத்தங்கள் உண்டு. 1823 ல் கல்கத்தா பல்லக்கு தூக்கிகள், 1853 ல் ஆற்று போக்குவரத்து, 1862 ல் மாட்டு வண்டிகள், 1866 ல் பம்பாய் நகராட்சி கறிக்கடைகள், 1873 ல் அகமதாபாத் தையல், செங்கற்சூளை... என சிறு சிறு தொழில் சார்ந்த வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. 
ஆனாலும் 1862 ரயில்வே வேலை நிறுத்தம்தான் நவீன தொழிலாளி வர்க்கத்தின் முதல் நடவடிக்கையாக உள்ளது. அதிலும் 8 மணி நேர வேலைக்காக நடந்திருக்கிறது.

எட்டு மணி நேரம் : இந்திய கம்யூனிஸ்ட்டுகளின்  குரல்
இது வெளி நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் “தேச விடுதலை மற்றும் மறு கட்டுமானத்திற்கான திட்டம்” ஒன்றை இந்திய தேசிய காங்கிரசின் கயா மாநாட்டிற்கு (டிசம்பர் 1922) அனுப்பி வைத்தனர். இதோ அதன் வார்த்தைகளில்
“எட்டு மணி வேலை நாள்: ஆண் தொழிலாளர்க்கு உச்சபட்ச வேலைக் காலமாக எட்டு மணி நேர வேலையை கொண்ட ஐந்தரை நாள் வாரம் அமைய வேண்டும். பெண்கள், குழந்தை உழைப்பாளிகளுக்கு சிறப்பு விதி முறைகள் வகுக்கப்பட வேண்டும்.”
1923ல் சிங்கார வேலரின் தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் செயல் திட்டம்
“எட்டு மணி நேர வேலை சட்டம், மைனர்களுக்கும் செவிலி பெண்களுக்கும் 6 மணி நேரம், குழந்தைகளுக்கு 4 மணி நேரம்” என்ற கோரிக்கையை வைத்திருந்தது. இவை எல்லாம் தொழிலாளர்களின் கற்பனையை தொடாத நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான கருத்தியல் தளத்திற்கு அடித்தளம் அமைத்து தந்தன.

ஆதாரம் :       1) May day and Eight hours struggle in India - Sukumal sen        2) Working class of India: History of Emergence and movement 1830- 2010        3) The making of the Madras Working class - D. Veera raghavan

====தொகுப்பு: க.சுவாமிநாதன்=====

;