கட்டுரை

img

சாதியற்ற சமூகம் படைக்க சங்கமிப்போம் தஞ்சையில்..! -என்.சிவகுரு

சென்ற ஆண்டே தங்களையெல்லாம் எங்கள் தஞ்சைக்கு அழைத்திருக்க வேண்டும். நாம் விவாதிக்க வேண்டிய, களமாட வேண்டியவைகளை முடிவு எடுத்திருக்கலாம். புது வழிகளை உருவாக்கியிருக்கலாம் ஆனால் எங்கள் மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் வீசிய கஜா புயல் மாவட்டத்தின் சரி பாதி பகுதிகளின் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. (இன்னும் அந்த நிவாரணம் கிடைக்க போ ராட்டங்கள் தொடர்கின்றன) பின்னர் வந்த தேர்தல் மேலும் சில மாதங்கள் தள்ளி போட்டது. இதோ ஆகஸ்ட் 15,16, 17 தேதிகளில் தமிழகத்தின் மிக முக்கிய அமைப்பான, பலதரப்பட்ட நல் உள்ளங்களால் பாராட்டப்படும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு தியாகி களின் பூமியாம் தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற வுள்ளது. தமிழகத்தின் மிக முக்கியமான முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்குநர் ராஜு முருகனை தலைவராக கொண்ட மாநாட்டின் வரவேற்புக்குழு தோழர்கள் மாநாட்டை வெற்றி கரமாக்க  பம்பரமெனச் சுற்றிப் பணியாற்றி வருகிறார்கள். இது சமூகக் கொடுமையை பற்றி விவாதிக்க உள்ள மாநாடு. ஆகவே தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு கரம் கோர்த்து சிந்தனையால், செயலால், களத்தில் போராடும் 40 அமைப்புக்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. 

இது 2000 ஆண்டுகளாக இம்மண்ணில் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக போராடும் அமைப்பு. சமூகத்தின் மிக கொடிய நோயாக இருக்கும் சாதியத்தின் கூறாக இருக்கும் தீண்டாமைக் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்வது? உரிமைகள் மறுக்கப்படுவோ ருக்கு எவ்வாறு பெற்றுத் தருவது? கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று எவ்வாறு நியாயத்தை நிலைநாட்டுவது? என பல தளங்களில் களமாட வேண்டி யுள்ளது. ஆனாலும் துவக்கப்பட்ட 10 ஆண்டுகளில் தமிழ கமே திரும்பிப் பார்க்கும், முற்போக்காளர்களால் பாராட்டப் படும், சமூக சிந்தனையாளர்களால் போற்றப்படும் அமைப்பாக எல்லோரின் பங்களிப்போடு விருட்சமாக வளர்ந்துள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.  மார்க்சின் வர்க்க பேதமின்மை, அண்ணல் அம்பேத்க ரின் சாதிய ஒழிப்பு, தந்தை பெரியாரின் சமூக நீதியை அடிப்ப டையாக கொண்டு இந்த அமைப்பு இயங்குகிறது. தீண்டாமை ஒழிப்புக்கும் தமிழகத்துக்கும் நீண்ட பாரம்பரி யம் உண்டு. பல ஆளுமைகள் இதற்காக பல தியாகங்கள் செய்துள்ளனர். தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலி ருந்து வெளியில் வந்ததே அன்று இருந்த தீண்டாமைக் கொடுமையால் தான். அதே போல் தஞ்சை மாவட்டத்திற்கும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பல நூறு போராட்டங்களின் சாட்சியாக இன்றும் இருப்பது ஒன்றுபட்ட தஞ்சை மண்.

பெருமை மிகு பாரம்பரியம்

கணக்கிட்டுச் சொல்வதற்காக, பெருமை பேசுவதற்காக அல்ல, மாறாக மக்களின் உரிமைப் போராட்டத்தில் எப்போ தும் சமரசமின்றி முன் நின்றுள்ளோம் என்பது தான்.  இன்றளவும் பல சமூக ஆராய்ச்சியாளர்களால் வியந்து பார்க்கப்படும் போராட்டங்கள் ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில் தான் நடந்துள்ளன. அதிலும் சிறப்பு என்ன வென்றால், சமூக நீதிக்கான போராட்டத்தோடு இணைந்து பொருளாதார உரிமைகளுக்கான இயக்கமும் நடந்தது. அதன் மகத்தான சாதனைகள் நம் அனைவருக்கும் தெரியும். அது உருவாக்கியிருக்கும் அடித்தளத்தில் தான் நாம் இன்று பயணிக்கின்றோம். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், சமூக நீதி போராட்டங்க ளில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முன்நின்றது மற்ற சமூக மக்களே.

மணலூர் மணியம்மை துவங்கி பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி, கோ.வீரய்யன், தியாகி என்.வெங்கடாசலம், கோ.பாரதிமோகன், ஏ.எம்.கோபு, கே.ஆர்.ஞானசம்பந்தம் என அந்த பட்டியல் நீளும். இது ஒரு அடையாளத்திற்காக பதியப்படவில்லை. மாறாக, தீண்டாமை உள்ளிட்ட சமூக நீதிக் கான போராட்டங்களில் அனைவரும் இணையாவிட்டால் மாற்றம் நிகழாது. அதைத் தெரிந்து தான் அன்றைய இயக்கத்தினர் உழைத்தனர். அதன் விளைவாகவே பெரும் எழுச்சி கண்டது எம்மண். பாரம்பரியம் மிக்க போராளிகளான வாட்டாக்குடி இரணி யன், ஜாம்புவனோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறு முகம் என தோழர்களின் தியாகத்தால் புடம் போட்ட மண். இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் மட்டுமல்லாமல், தஞ்சை மண்ணில் பல இடங்களில் தீண்டாமைக்கு எதிராக சுயமரியாதை இயக்க தோழர்களின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

உரிமைப் போராட்டங்கள்
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் முக்கிய ஊரான நீடாமங்கலத்தில் சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒரு நிலவுடைமையாளர் வீட்டில் கட்சிக் கூட்டம், பின்னர் சமபந்தி போஜனம் என்று அறிவித்து விட்டு அந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கால பண்ணை அடிமைகளை சாதியைச் சொல்லி திட்டி, நீ எல்லாம் எப்படி இதில் கலந்து கொள்ளலாம் என ஒதுக்கிய போது தந்தை பெரியார் இவ்விசயத்தில் தலையிட்டு,இயக்கங்கள் நடத்தி போராட்டங்களுக்கு வழிகாட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வைத்துள்ளார்.  அதே போல, தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா வில் உள்ள மிக முக்கிய கிராமம் வரகூர். அந்தக் காலத்தில் இந்த ஊரின் அக்ரஹாரம் மாவட்டத்தில் மிக பிரபலம். இந்த ஊரில் இருந்த பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களுக்கு சொந்தமாக இருந்தது. அதனால் அக்கிராமத்தில் இருந்த தலித் மக்கள் ஊரின் பொது பாதையை பயன்படுத்த முடியாது. அங்குள்ள கோவி லுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இது அங்கிருந்த உழைப்பாளி மக்களுக்கு பெரும் சங்கடமாக இருந்தது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர சாமிநாதன் சுய மரியாதை இயக்கத்தின் முன்னோடியான வரகூர் நடராசன் ஆகியோர் மக்களை திரட்டி இயக்கம் நடத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கினர். பொது பாதை பயன்பாட்டுக்கு வந்தது. 1940 ஆம் ஆண்டு அதிகாரிகள் தலையீடு மூலம் இதற்கு முழு தீர்வு காணப்பட்டது. 

என்.வெங்கடாசலம்
சுதந்திரத்திற்கு பிறகு தஞ்சையின் மேற்குப் பகுதிகளில் சாதிய மேலாதிக்கமும், அதையொட்டி தீண்டாமைக் கொடு மைகளும் ஏராளமான வடிவங்களில் இருந்தன. அந்த கொடுமைகளுக்கு எல்லாம் மக்கள் போராட்டங்களால் தீர்வு கண்டவர் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.வெங்கடாசலம்.  தாழ்த்தப்பட்டவன் செருப்பு அணியக் கூடாது என சாதி ஆதிக்க வெறியர்கள் சொன்ன போது அவர்கள் தெருவில் தலித் மக்களை செருப்பணிய வைத்து நடக்க வைத்தார். இறந்து போனவரின் சடலத்தை பொது தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்றவுடன் சடலத்தை தெருவிலேயே கிடத்தி ஆட்சியாளர்களை அலற வைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, உரிமை பெற்று கொடுத்தார். அவரது வரலாற்றில்  தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்கான போராட்டங்களே அதிகம். இந்த மகத்தான களப்போராளிகளின் அடிச்சுவட்டில் இன்றைய நிலைகளுக்கேற்ப தஞ்சை மாவட்ட தோழர்கள் பணியாற்றுகின்றனர்.

நவீன வடிவங்கள்...
சாதியம் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எப்படி நவீனமயமாக மாற்றிக் கொண்டதோ அதே போல் தீண்டா மையும் நவீனமயமானது. நிலவுடைமையின் ஆதிக்கம் இன்னும் தொடரும் நம் மண்ணில் பிற்போக்குத் தனங்க ளுக்கு பஞ்சம் இருக்குமா என்ன? அதனால் தீண்டாமை, கிராமம் முதல் நகரம் வரை வெவ்வேறு வடிவங்களை கண்டுள்ளது. உதாரணமாக, தாழத்தப்பட்டவர்களின் வீட்டில் வளர்க்கப் படும் மாடுகளிலிருந்து கறக்கப்படும் பாலை ஊருக்குள் இருக்கும் பால் சொசைட்டியில் வாங்க மறுத்தனர். ஒரு கிராமக் கோயிலின் திருவிழாவின் போது, அவ்வூரில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி எடுக்கும் (காணிக்கை கொடுப்பது) உரிமை மறுக்கப்பட்டது. மற்றுமொரு கிராமத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் பாலக்கட்டையில் உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டி கொண்டிருந்தார்கள் என்பதற்காக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள். இப்படி புதுப்புது வடிவங்கள்.

சாதி ஆணவப் படுகொலை
அதேபோல சாதி ஆணவப் படுகொலை தஞ்சைக்கு அருகில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் ஒரு தலித் இளைஞரும், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும் மீறி சென்னை யில் குடியேறுகிறார்கள். பொருளியல் தேவைகளுக்காக கடு மையான உழைப்பு. இந்த வேளையில் அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறக்கிறது. பெரு நகரத்தின் பொருளாதாரச் சிரமங்களை சந்திக்க முடியாமல் சொந்த ஊருக்கே வருகிறார்கள். இவர்கள் வந்ததை அறிந்து கொண்டு சாதிய வன்மத்தை மனதில் கொண்டு தாழ்த்தப்பட்ட இளைஞரை பழி தீர்க்க வேண்டுமென முடிவெடுத்து  குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவோம் எனச் சொல்லி நயவஞ்சமாக ஓர் அடர்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்தனர். இது தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எடுத்து கொண்ட மிகப்பெரிய பிரச்சனை. தொடர் போராட்டங்கள், சட்ட தலையீடுகள், மனித உரிமை ஆணையத்தில் முறையீடு என அனைத்து வழிகளிலும் போராடி இறுதியில் குற்றவா ளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட அந்தச் சகோதரிக்கு தொடர் பாதுகாப்பு, பின் தளராத முயற்சியால் அரசு வேலையும் பெற்றுக் கொடுத்தோம்.

இது போல இன்னொரு சம்பவம். ஒரு தாழ்த்தப்பட்ட இளம் பெண்ணை அந்த ஊரின் சில இளைஞர்கள் கடத்தி கொண்டு போய், பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்து விடுகின்றனர். இந்தக் கொடுமையை எதிர்த்து பெரும் இயக்கங்கள் நடத்தி, நீதி விசாரணையை முறையாக நடத்த வைத்து, அரசின் நிவாரணத்தை பெற்றுத் தந்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தர அக் குடும்பத்தினர்க்கு துணை நின்றோம். இது போல சுடுகாட்டுப் பிரிவினை, முடி திருத்தும் உரிமை, உணவகங்களில் சமமாக சாப்பிடும் உரிமை என பல தலை யீடுகளை நடத்தி ஒரு பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது இயக்கம்.

உரையாடல் நிகழ்வுகள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்க, வெகுஜன இயக்கங்கள், பெரியாரிய அமைப்புக்கள், இசுலா மிய அமைப்புகள் கரம் கோர்த்துப் பணியாற்றுகின்றன. மேலும் பல அமைப்புக்களும் வரும் காலங்களில் நம்மோடு களத்தில் இணையும். கடந்த ஒரு மாத காலமாக ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கத் தோழர்களின் அயராத உழைப்பால் இம்மாநாடு எழுச்சியோடு தங்களின் பங்கேற்போடு நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கண்கவர் சுவர் விளம்பரங்கள் துவங்கி, இம்மாநாட்டின் அடிப்படை நோக்கங்களை விளக்கி பரந்த அளவில் மக்கள் மற்றும் முக்கிய நபர்களின் சந்திப்பு அதையொட்டி மனம் திறந்த உரையாடல்கள், அனுபவப் பகிர்வுகள், ஊர்க் கூட்டங்கள் நடத்தினோம். இப்படி பல வடிவங்களில் மக்களை சந்தித்து நிதி சேகரித்து வருகிறோம்.  நம் சகோதர அமைப்புகளும், நம் பணிகளுக்கு ஆக்கப்பூர்வமாக, பக்கபலமாக நின்று பேருதவி ஆற்றி வருகின்றன. 

மாநாட்டை வாழ்த்தி தஞ்சை மாநகரமெங்கும் விளம்பரப் பதாகைகள் தோழமைச் சங்கங்களால் வைக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், “ சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்” எனும் உரையாடலை இளம் தலைமுறையி னரிடமிருந்து துவக்க வேண்டும் எனும் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரதான கல்லூரிகளில் உள்ள மாணவர்களை சந்திக்கத் துவங்கி கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெரும் வரவேற்பைக் கண்டுள்ளது. இதை வரும் நாட்களில் இன்னும் பல இடங்களில் நடத்திட ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ஆகஸ்ட் 13 ஆம் தேதி செவ்வாயன்று “சாதிய இருள் அகற்ற அறிவொளி தீபம் ஏற்றுவோம்”  எனும் நிகழ்வினை தஞ்சையின் முக்கியப் பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வண்ணம் நடத்தி மாநாட்டுச் செய்தியை தமிழகம் அறியச் செய்துள்ளோம். பல்வேறு கள மற்றும் போராட்ட அனுபவங்களோடு, சிந்தனைச் செறிவோடு  இச்சமூகத்தின் மிக கேவலமான நோயான தீண்டாமையை அகற்றிட வரும் போராளிகளே வருக வருக தங்களின் பங்கேற்பால் தஞ்சை மாநாடு தமிழ கத்திற்கு புது வெளிச்சம் தரட்டும். வாருங்கள் தோழர்களே! புதுக்களம் காண, சாதியற்ற சமூகம் படைக்க!
 

;