கட்டுரை

img

புதிய கல்விக்கொள்கையின் பின்னணி என்ன - முனைவர் தா.சந்திரகுரு

பாகம் 1

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019

எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம் தன்னுடைய புதிய கல்விக் கொள்கைகளை வெளியிட்டது. அந்தக் கல்விக் கொள்கைகள் பின்னர் 1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தால் திருத்தியமைக்கப்பட்டன. இரண்டாவது கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கான தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான குழுவொன்றை மத்திய அரசின் முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் T.S.R.சுப்பிரமணியன் தலைமையில் 2015ஆம் ஆண்டு அமைத்தது. 2016ஆம் ஆண்டு மே 7 அன்று ஏறத்தாழ 90 பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை அந்தக் குழு சமர்ப்பித்தது. ஆனாலும் அந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு

அந்த அறிக்கையை கிடப்பில் போட்ட மத்திய அரசு, தலைநிறந்த அறிவியாலாளர் பத்மவிபூஷண் கஸ்தூரிரங்கன் தலைமையில் தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்காக 2017 ஜூன் 24 அன்று  மீண்டும் குழுவொன்றை அமைத்தது. மும்பை SNDT மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீ K.J. அல்போன்ஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியரும், கணிதத்தில் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவருமான முனைவர். மஞ்சுல் பார்கவா, மத்தியப் பிரதேச மாநில பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.ராம் சங்கர் குரீல், அமர்கந்தக் இந்திராகாந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.T.V.கட்டிமணி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ கிருஷ்ண மோகன் திரிபாதி, கௌஹாத்தி பல்கலைக்கழக பாரசீகத் துறைப் பேராசிரியர் முனைவர். மஜார் ஆசீப், கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் முனைவர்.M.K.ஸ்ரீதர் ஆகியோரைக் கொண்டு ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளரான ஷகிலா சம்ஷு என்பவருக்கு புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கான பணிக்கென்று ஒதுக்கப்பட்டு, அவர் அந்தக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  இந்த குழுவால் ஒத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவர் பின்னர் அந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். ஆக மொத்தம் பதினொரு உறுப்பினர்களுடன் அந்தக் குழு தனது பணியைத் தொடங்கியது.

தொடர் காலநீட்டிப்புகள்

2017 டிசம்பர் 31க்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு ஐந்து முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. வரைவறிக்கையை 2018 மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2017 டிசம்பர் 27 அன்றும், 2018 ஜூன் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஏப்ரல் 6 அன்றும், 2018 ஆகஸ்ட் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஜூன் 20 அன்றும், 2018 அக்டோபர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 28 அன்றும், 2018 டிசம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 அக்டோபர் 31 அன்றும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.  2018 மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கான முதல் கால நீட்டிப்பிற்கான காரணம் எதுவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்படவில்லை இரண்டாவது தடவையாக 2018 ஜூன் 30 வரையிலான கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, வரைவைத் தயாரிக்கும் பணி முடிந்து விட்டதாகவும், இறுதிவரைவிற்கு முந்தைய வரைவு தயாராகி விட்ட நாளுக்கும், இறுதி வரைவைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கான நாளுக்கும் இடையிலான பணிகளை நிறைவேற்றுவதற்காக, குழுவின் வேண்டுகோளுக்கிணங்க கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018 ஆகஸ்ட் 31 வரையிலான மூன்றாவது காலநீட்டிப்பிற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2018 அக்டோபர் 31 வரையில் நான்காவது கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, அறிக்கை தயாராக இருப்பதாகவும், இறுதி வரைவைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக குழு கருதுவதால் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், மாநில கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்ட அவ்வாறான கூட்டம் நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் எதுவும் பெறப்பட்டதாக தகவல்கள் இல்லை. இறுதியாக தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், 2018 டிசம்பர் 15 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு, ஐந்தாவது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிஜோரம் மாநிலத் தேர்தல்களுக்காக 2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி வரை அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளைக் குறிப்பிட்டு அந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நாம் கருதலாம்.

வரைவறிக்கையைப் பெற்றுக் கொண்ட பொக்ரியால்

ஆனாலும் டிசம்பர் 15க்குப் பிறகான எந்தவொரு கால நீட்டிப்பும் அந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவிக்கவில்லை. அவ்வாறு காலநீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றால், பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு 2018 டிசம்பர் 15க்குள்ளாக இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். 2018 டிசம்பர் 15 அன்று கோவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜவடேகரும் குழுவின் அறிக்கை தயாராக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார். இருந்த போதிலும், ஐந்தரை மாதங்களாக இதுபற்றி எதுவும் பேசாமல் இருந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்த அறிக்கை குறித்த செய்திகள் வெளிவருமாறு பார்த்துக் கொண்டது. தேர்தலுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட மோடி 2.0 மத்திய அமைச்சரவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக ஜவடேகருக்குப் பதிலாக, போலியான கல்வித் தகுதிச் சான்றுகளுடன் ஸ்மிருதி இரானி 2.0 வடிவமாக இருந்த டாக்டர் (?) ரமேஷ் பொக்ரியால் பதவியேற்றுக் கொண்டார். போலிக் கல்வித் தகுதிதான் மோடி அமைச்சரவையில் இந்திய கல்வியமைச்சராவதற்கான தகுதி போலும்! 

மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆர். சுப்ரமணியம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் ரினா ரே உட்பட அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் 2019 மே 31 அன்று கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான வரைவுக் குழு தன்னுடைய வரைவறிக்கையைச் சமர்ப்பித்தது என்று 2019 ஜூன் 1 அன்று பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகி இருந்தன. தேசியக் கல்விக் கொள்கை - 2019 தொடர்பான இந்த வரைவறிக்கையை 2019 ஜூன் 01 அன்று இணையதளத்தில் வெளியிட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூன் 30க்குள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது.

வரைவறிக்கையில் ஜவடேகரின் செய்திக் குறிப்பு

இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வரைவறிக்கையின் முதல் பக்கத்திலேயே அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த பிரகாஜ் ஜவடேகரின் நாள் குறிப்பிடப்படாத செய்திக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் 2015 ஜனவரியில் இருந்தே புதிய கல்விக் கொள்கைகளை வரையறுப்பதற்கான முயற்சிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறும் ஜவடேகர், தொடர்ந்து “முன்னாள் அமைச்சரவைச் செயலாளராக இருந்த மறைந்த ஸ்ரீT.S.R..சுப்பிரமணியன் தலைமையில் நாங்கள் அமைத்த 'புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு' 2016 மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கை - 2016க்கான வரைவு குறித்த சில உள்ளீடுகளை அமைச்சகம் தயாரித்தது” என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில் துறையின் அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி இரானி.

அதற்குப் பிறகு ஜவடேகரின் செய்தியில் இருக்கின்ற வாசகம்தான் நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. “அணுகல், சமம், தரம், மலிவு, பொறுப்பேற்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தேசிய கல்விக் கொள்கை – 2018ஐ என்னுடைய நாட்டின் குழந்தைகள், இளைஞர்களுக்கு அளிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று வரைவறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள நாள் குறிப்பிடப்படாத ஜவடேகரின் அந்த செய்திக் குறிப்பில், வரைவறிக்கையை வெளியிடுவதற்கான தொனியே தொக்கி நிற்கிறது.  

சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தேசிய கல்விக் கொள்கை 2018ஆ அல்லது 2019ஆ?

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் வரைவறிக்கையில் ஜவடேகரின் இந்த செய்திக் குறிப்பைத் தொடர்ந்து, வரைவறிக்கையைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் இருந்த ஒன்பது பேர் கையொப்பமிட்டு 2018 ஆகஸ்ட் 15 நாளிடப்பட்ட ஜவடேகருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜவடேகருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ’நாங்கள் தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவறிக்கையைச் சமர்ப்பிக்கிறோம்’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் முந்தைய பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை – 2018 என்பதாக ஜவடேகர் குறிப்பிடுகிறார். எதை நாம் ஏற்றுக் கொள்வது? 2019 மே 31 அன்று வரைவைத் தயாரித்த குழு தற்போதைய கல்வி அமைச்சர் பொக்ரியாலிடம் அறிக்கையைச் சமர்ப்பித்ததாக செய்திகள் வெளியாகின்றன. உண்மையில் 2018 இந்த வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 15 அன்றா அல்லது 2019 மே 31 அன்றுதானா? 2018 ஆகஸ்ட் 15க்கும் 2019 மே 31க்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? உண்மையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது அன்றைய அமைச்சர் ஜவடேகரிடமா அல்லது இன்றைய அமைச்சர் பொக்ரியாலிடாமா? யாரிடம் கேட்டு நாம் தெரிந்து கொள்வது?

வரைவறிக்கை 2019 மே 31 அன்றுதான் பொக்ரியாலிடம் சமர்பிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஜவடேகருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை – மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் இந்த வரைவறிக்கைக்கான செய்திக் குறிப்பை எழுதுவதற்கான வாய்ப்பை - பொக்ரியாலுக்கு வழங்காத அவசரம் ஏன் நிகழ்ந்தது? ஜவடேகரிடமே வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றால், சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கையை வெளியிடுவதில் ஐந்தரை மாதங்கள் தாமதம் ஏன் நிகழ்ந்தது?

பதினொன்று ஏன் ஒன்பது ஆனது?

இந்த வரைவறிக்கை தொடர்பாக இவை மட்டுமே நமக்கு ஏற்படுகின்ற குழப்பங்களல்ல. 2017 ஜூன் 27 அன்று வரைவறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்ட போது கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவுடன், அந்தக் குழுவிற்கென  செயலாளர் ஒருவரும் அமைச்சகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்தக் குழு  ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவரை ஒத்து தேர்ந்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆக பதினொரு பேர் கொண்ட குழுவாகவே வரைவறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது.  வரைவறிக்கை தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்ட போதே, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பற்றி அளிக்கப்பட்ட தகவல்கள் முழுமையானதாக இல்லாததுடன், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தரப்படாமல், பெரும்பாலும் அவர்கள் இதற்கு முன்னராக வகித்து வந்த பதவிகளைக் குறிப்பிட்டு முன்னாள் பிரபலங்களாகவே அந்தப் பட்டியலுக்குள் இருந்தனர். குழு உறுப்பினர்கள் யார் என்று அறிய முற்பட்ட வேளையில் கிடைத்த தகவல்கள், அனைவரின் கவனத்தையும் சற்றே திசை திருப்புகின்ற வகையிலே தரப்பட்ட அந்த தகவல்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவையாக, திட்டமிட்டு தரப்பட்டிருப்பதாகவே இப்போது தோன்றுகின்றது.

பதினொரு பேர் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த குழுவின் செயலாளர் உள்ளிட்டு ஒன்பது பேர் மட்டுமே கையொப்பமிட்டு ஜவடேகருக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? இன்னும் இரண்டு பேர் என்ன ஆனார்கள்? ஏன் அவர்கள் குழுவிலிருந்து விடுபட்டுப் போனார்கள்? அது ஒரு தனிக்கதை. 

(தொடரும்)

 

பாகம் 2

விலகிக் கொண்டவரும், ராஜினாமா செய்தவரும்

பதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக வெளியிடப்பட்டிருக்கிற குழு உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. K.J.அல்போன்ஸ் அமைச்சராகி விட்டதால் விலகி விட்டதாகவும், ராஜேந்திர பிரதாப் குப்தா ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, ஒன்பது உறுப்பினர் மட்டுமே கொண்ட குழுவாகவே அந்த குழு உறுப்பினர் பட்டியல் வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. 

K.J.அல்போன்ஸ்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

வரைவறிக்கைக் குழு அமைக்கப்பட்ட போது, அமைச்சகம் வெளியிட்ட கடிதத்தில் உறுப்பினர் பட்டியலில்  ஸ்ரீ K.J.அல்போன்ஸ் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, அந்தக் குழு அமைக்கப்பட்ட நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக மாறியிருந்தார். 1953ஆம் ஆண்டில் பிறந்த இவர், 1979ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, பணி நிறைவடைய எட்டு ஆண்டுகள் இருந்த நிலையில் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக 2006ஆம் ஆண்டு தனது அரசுப் பணியைத் துறந்தார். 2006 முதல் 2011 வரை இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் கேரள சட்டமன்றத்தில் கஞ்சிரப்பள்ளி தொகுதி சுயேட்சை உறுப்பினராக இருந்தார். 2011ஆம் ஆண்டு நிதின் கட்கரி தலைமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2017 ஜூன் 24 அன்று தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவறிக்கை தயாரிப்பதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்காகவே 2017 செப்டம்பர் 3 அன்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பொறுப்புகளுடன் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2017 நவம்பர் 11 முதல் ராஜஸ்தானிலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட போது சாலக்குடி தொகுதியில் தனக்காக வாக்கு கேட்டு பிரசாரம் செய்து தோற்றுப் போனதும், மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்கிற இவருக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காமல் போனதும் இங்கே தொடர்பில்லாத தகவல்கள்தானே!  

2017 செப்டம்பர் 3 அன்று அமைச்சராக்கப்பட்ட பிறகு, அந்தக் குழுவில் இருந்து இடையிலேயே அவர் விலகிக் கொண்டதாக அந்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2017 டிசம்பர் 27 அன்று 2018 மார்ச் 31க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், 2018 ஏப்ரல் 6அன்று 2018 ஜூன் 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழுவிற்கான கால நீட்டிப்புகள் வழங்கப்பட்ட போது, அந்த கடிதங்களின் நகல் அல்போன்ஸிற்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. உண்மையில் 2017 செப்டம்பரில் அமைச்சரானதுமே அவர் குழுவில் இருந்து விலகிக் கொண்டாரா? அல்லது 2018 ஜூன் இறுதி வரைக்கும் குழுவில் உறுப்பினராகத் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டாரா? அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே குழுவில் இருந்து அல்போன்ஸ் விலகி விட்டதாகக் கருதினால், அதற்குப் பிறகும் அவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்து செயல்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகளின் தன்மை நமக்குத் தெளிவாகிறது. அதுமட்டுமல்ல ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பதினொரு பேருடன் இருந்த அந்தக் குழு பத்து பேர் என்றாகி விட்டதுவும் நமக்குப் புலப்படுகிறது. .

ராஜேந்திர பிரதாப் குப்தா

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சரின் முன்னாள் ஆலோசகர்

ஒத்திசைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரைவுக்குழு உறுப்பினர்

அல்போன்ஸிற்கு அடுத்ததாக, ஒத்திசைவு உறுப்பினராக குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ராஜேந்திர பிரதாப் குப்தா 2017 டிசம்பரில் ராஜினாமா செய்து விட்டார் என்று இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஏப்ரல் 6 அன்று 2018 ஜூன் 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழுவிற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, இடை விலகி விட்டு அமைச்சரான அல்போன்ஸிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் ராஜேந்திர பிரதாப் குப்தாவிற்கு அனுப்பப்படவில்லை என்பதன் மூலம் 2017 டிசம்பரிலேயே ராஜேந்திர பிரதாப் குப்தாவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அமைச்சகம் தெளிவாகச் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. அல்போன்ஸ் அமைச்சரானதால் இடைவிலகினார் என்று காரணம் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ராஜேந்திர பிரதாப் குப்தா குழுவிலிருந்து ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குழுவிலிருந்து ராஜேந்திர பிரதாப் குப்தா ஏன் ராஜினாமா செய்தார் எனும் கேள்விக்கான விடை நம்மை மேலும் அதிர்ச்சியடைய வைப்பதாகவே இருக்கின்றது.

அமைச்சரின் ஆலோசகர்

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ராஜேந்திர பிரதாப் குப்தா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். ஐந்தரை மாதங்கள் மட்டுமே மோடியின் முதலாவது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனுக்குப் பதிலாக, தற்போது பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜேபி நட்டா 2014 நவம்பர் 9 முதல் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். நட்டா சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு 2016ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று நட்டாவின் ஆலோசகராக ராஜேந்திர பிரதாப் குப்தா நியமனம் செய்யப்பட்டார்.

வெளிநாட்டு நிதி ஊழல்

ராஜேந்திர பிரதாப் குப்தாவும், அவரது மனைவி கோபல் குப்தாவும் இயக்குநர்களாக இருந்த ’உலகளாவிய ஆலோசனைக் கழக சேவை’ என்கிற மும்பை தனியார் நிறுவனம், மும்பையில் இருந்த அரசு சாரா நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டு அரசு சாரா நிறுவனத்திடமிருந்து ஒன்றே முக்கால் கோடி ரூபாய் பணத்தை விதிகளை மீறி பெற்றுக் கொண்டதாக புகார் எழுந்தது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமலேயே வெளிநாட்டு நிறுவங்களுடன் ராஜேந்திர பிரதாப் குப்தா தொடர்பு கொண்டு பயனடைந்ததாகவும், வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டதாகவும் தகவல்களை பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் பேரில், 2010ஆம் ஆண்டைய வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக ராஜேந்திர பிரதாப் குப்தா மீது குற்றம் சுமத்தப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. 2018 ஆகஸ்ட் 3 அன்று சுகாதாரத் துறை அமைச்சரின் ஆலோசகர் பதவியில் இருந்து குப்தா தூக்கியெறியப்பட்டார். அமைச்சரின் ஆலோசகர் என்றும் பாராமல் மோடி அரசாங்கம் ஊழலுக்கெதிரான நடவடிக்கையை எடுத்திருப்பதாக அப்போது பாஜக ஆதரவாளர்கள் மார் தட்டிக் கொண்டனர். ராஜேந்திர பிரதாப் குப்தா 2017 டிசம்பரில் வரைவறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்து ராஜினாமா செய்தது என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலேயே நடந்திருக்கக் கூடும். அதற்குப் பிறகே அவர் மீதான நடவடிக்கைகள் செய்தியாக கசிந்திருக்கக் கூடும். ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குழுவில் இருந்து அவரை நீக்கி விடாமல், வெறுமனே ராஜினாமா மட்டும் செய்ய வைத்தது என்பது உண்மையிலேயே ஊழலுக்கெதிரான மோடி அரசாங்கத்தின் சாதனைதானே! 

மோடியைப் பாராட்டும் குப்தா

”கல்வித் தொழில்நுட்பத்திற்கான தேசிய அமைப்பு உருவாக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் சரியாக அமல்படுத்தப்படுமேயானால், தேசிய கல்விக் கொள்கை 2019 என்பதே மனிதர்களால் எழுதப்பட்ட இறுதி அறிக்கையாக இருக்கும். இதற்கு அடுத்ததாக கல்விக் கொள்கை தொடர்பாக எழுதப்படும் எந்தவொரு அறிக்கையும் நிச்சயம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு எழுதப்படுவதாகவே இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த வரைவறிக்கை முழுமையானதாக, எதிர்காலத்திற்கானதாக களத்தில் நிலவுகின்ற நிலைமைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மருத்துவத்துறையில் சீர்திருத்தங்களை முன்னிறுத்தியது. இப்போதைய மூன்றாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கல்வி குறித்த சீர்திருத்தங்களை நிச்சயமாக அமல்படுத்தும்” என்று தேசிய கல்விக் கொள்கை குழுவின் முன்னாள் உறுப்பினர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டு ராஜேந்திர பிரதாப் குப்தா பெயரில் 2019 ஜூன் 15 அன்று எக்கானமிக் டைம்ஸ் செய்தித்தாளில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அந்தக் கட்டுரையில் ”தன்னுடைய இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கின்ற புதிய இந்தியாவை பல்வேறு கொள்கைகள், திட்டங்களின் மூலமாக கட்டியெழுப்புவதற்கான பெரிய அளவிலான சீர்திருத்தங்களை சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் நடத்திக் காட்டியிருப்பதன் மூலமாக நீண்ட காலத்திற்கு தான் நிலைத்து நிற்கப் போவதை மோடி வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது, சமையல் எரிவாயு இணைப்பு, திறன்மிக்க இந்தியா மற்றும் ஏழைகளுக்கான சுகாதார காப்பீடு போன்ற சமூகத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பல்வேறு திட்டங்களின் நீண்ட பட்டியலிலிருந்து இதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் வாரத்திற்குள்ளாகவே அரசாங்கத்தின் தேசிய கல்விக் கொள்கை – 2019 பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மோடியின் சீர்திருத்தங்கள் அடங்கிய அந்த நீண்ட பட்டியலில் இப்போது கல்வி சீர்திருத்தங்களும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தட்டித் தடுமாறி மெதுவாக காரியங்களைச் செய்து முடித்தால் போதும் என்ற எண்ணமின்றி, ஒரே மூச்சில் அனைத்து காரியங்களையும் உடனடியாகச் செய்து காட்டுகிற பிரதமரை இப்போதுதான் நான் முதன்முறையாகக் காண்கிறேன்” என்று ராஜேந்திர பிரதாப் குப்தா மோடியைப் புகழ்ந்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள், வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக நிதி பெற்றதாக அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அறிவிக்கப்பட்ட சிபிஐ விசாரணை ஆகியவற்றின் இன்றைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவாகவே காட்டுகின்றன.

கேள்விகள் ஆயிரம்

ஆக 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அல்போன்ஸ், டிசம்பரில் ராஜேந்திர பிரதாப் குப்தா ஆகியோர் குழுவில் இருந்து விலகியதால் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதைத் தொட்டு விடுகிறது. இந்த ஒன்பது பேர்தான் இறுதி அறிக்கையுடன் உள்ள ஜவடேகருக்கு எழுதப்பட்ட கடிதத்தை எழுதியவர்கள். அமைச்சராகி விட்ட அல்போன்ஸ் குழுவில் இருந்து விலகி விடுகிறார். பிரச்சனை எதுவுமில்லைதான். ஆனால் அவர் அமைச்சராகி குழுவிலிருந்து இடைவிலகிய பிறகும், அந்தக் குழுவில் அவர் தொடர்ந்து இருந்து பணியாற்றினாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக நம் முன்பு நிற்கிறது. இடைவிலகிய ஒருவருக்கு இரண்டு முறை அலுவலகரீதியான கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பது நமக்குள் ஏற்படுகின்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஆனால் ராஜேந்திர பிரதாப் குப்தாவின் ராஜினாமா குறித்தோ, நம்மிடையே ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ராஜேந்திர பிரதாப் குப்தா சுகாதாரத்துறை அமைச்சரின் ஆலோசகராக எவ்வாறு நியமனம் பெற்றார்? ராஜேந்திர பிரதாப் குப்தாவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒத்திசைவு இந்த வரையறை தயாரிப்புக் குழுவிடம் எவ்வாறு ஏற்பட்டது?  அந்த ஒத்திசைவு தானே ஏற்பட்டதா அல்லது ஏற்படுத்தப்பட்டதா? எந்த அடிப்படையில் அல்லது யாருடைய பரிந்துரையின் பேரில் இந்தக் குழு அவரைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது? ஏதோவொரு காரணத்தால் இவ்வாறு ஒத்திசைந்து நியமிக்கப்பட்ட ராஜேந்திர பிரதாப் குப்தா பின்னர் எந்த காரணத்தை முன்னிட்டு குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் நிச்சயமாக இந்தக் குழுவால் வடிவமைக்கப்பட்டிருக்கும் கல்விக் கொள்கைகளின் தரம் குறித்தும் விளக்குபவையாக இருக்கக் கூடும். 

குழுவில் இருந்து விலகிக் கொண்ட அல்லது ராஜினாமா செய்தவர்களின் கதை இதுவென்றால், இறுதி வரை குழுவில் இருந்து பணியாற்றி நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்களைக் கட்டியெழுப்பப் போகின்ற வருங்கால இந்தியாவின் நவீன கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கின்ற பிறரின் கதை எவ்வாறு இருக்கிறது? இதோ தொடர்கிறது…

(தொடரும்)

 

 

பாகம் 3

சூத்திரதாரியின் கைகளில் வரைவறிக்கை குழு...

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள ஸ்ரீதரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. அவற்றை அறிந்து கொண்டால், அவர் வெறுமனே கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் மட்டுமாகவே இருக்கவில்லை என்பதுவும், அதற்கும் மேலானவராக இருந்திருப்பதுவும், இப்போதும் இருந்து வருவதுவும், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கனுக்கும் அவருக்குமிடையே இருந்த உறவும், தொடர்புகளும்கூட நமக்குத் தெரிய வரும். 

1954 செப்டம்பர் 15 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் பிறந்த ஸ்ரீதர் தன்னுடைய நான்காவது வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, உடல் செயல்பாடுகளை இழந்தவர். மிக இளம் வயதான பத்தாவது வயதிலேயே தன்னுடைய பெற்றோரைப் பிரிந்து, சென்னை அடையாறில் இருக்கின்ற எலும்பியல் மையத்துடன் இணைவிக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளியில் பயில்வதற்காகத் தனித்து வாழ்ந்தவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே நடமாடிய இவர், தன்னிடமுள்ள உடல்ரீதியிலான குறைபாடுகள் தன்னுடைய நடவடிக்கைகளை ஒருபோதும் பாதித்ததேயில்லை என்கிறார். அதுதான் உண்மையாகவும் இருக்கிறது. வணிகவியல் பட்டதாரியான இவர் 1979 முதல் 1999 வரையிலும் விஜயா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கனரா வங்கி நிர்வாகவியல் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார்.

கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் உறுப்பினராக ஸ்ரீதர் இருந்த போது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட கர்நாடக மாநில அறிவாணையத்தின் முதல் உறுப்பினர் செயலாளராகவும், நிர்வாக இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, மாநில உயர்கல்வித்துறைச் செயலாளர் சுரஞ்சன் தலைமையில் 2008 செப்டம்பர் 5 அன்று மூன்றாண்டு காலத்திற்கு நிறுவப்பட்ட இந்த அறிவாணையத்தின் இருப்புக் காலம், 2011 செப்டம்பரில் முடிவடைந்தது. பின்னர் அப்போதைய பாஜக முதல்வர் சதானந்தா கவுடாவால் 2013 ஜூன் வரைக்கும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. கோவாவிற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே இரண்டாவதாக இத்தகைய மாநில அறிவாணையம் அமைக்கப்பட்டது.

அறிவாணையத்தின் காலம் 2013 ஜூன் வரை நீட்டிக்கப்படிருந்தாலும், 2013 பிப்ரவரி மாதத்திலேயே அது கலைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. 2013 மார்ச் மாதம் மாநில சட்டமன்றத்திற்கான வேலைகள் துவங்கவிருப்பதால் ஆணையத்தைக் கலைத்து விடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக ஆணையத்தின் செயலாளரான ஸ்ரீதர் அப்போது தெரிவித்தார். மாநிலத் தேர்தலுக்கும், 2013 ஜூன் வரை தன்னுடைய இருப்பைக் கொண்டிருந்த அறிவாணையம் தொடர்ந்து செயல்படுவதற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது புரியவில்லை. ஆணையத்தில் பணி புரிந்தவர்களின் தன்விவரக் குறிப்புகளை பல அரசு நிறுவனங்களும் கேட்டு வாங்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் பணி இழப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஸ்ரீதர் அப்போது தெரிவித்தார். அந்தப் பணியாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசாங்கம் முன்கூட்டியே செய்து முடித்திருப்பதையே அது நமக்கு காட்டுகிறது.

மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜகவிடமிருந்து காங்கிரஸின் கைகளுக்கு ஆட்சி சென்று, சீத்தாராமையா முதல்வரான பிறகு 2013 டிசம்பர் 28 அன்று கஸ்தூரிரங்கன் தலைமையிலேயே அந்த ஆணையம் மீண்டும் அமைக்கப்பட்டது. கஸ்தூரிரங்கன் தலைமையிலேயே அந்த ஆணையம் திரும்ப அமைக்கப்பட்டாலும், பெங்களூரு பல்கலைக்கழக கனரா வங்கி நிர்வாகத்துறைப் பேராசிரியர் பணிக்கே திரும்பிச் சென்றிருந்த ஸ்ரீதர் மாநில அறிவாணையத்தின் பணிக்கு மீண்டும் அழைக்கப்படவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக் வெற்றி பெற்று மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற பிறகு, 2015ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பிற்கான தேசிய துணைத்தலைவராக ஏற்கனவே சேவை புரிந்திருந்த இவர், 2017 நவம்பர் 26 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் கர்நாடகப் பிரதேசத்திற்கான பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் பெங்களூரு மாநகர சங்சாலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடக மாநில அறிவாணையத்தின் செயலளாராக ஸ்ரீதர் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக மாநில அரசால் வழங்கப்படும் கர்நாடக மாநில அரசின் உயர் விருதான ராஜ்யோத்சவ விருது 2010ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று பெங்களூருவில் தற்போது வசித்து வரும் இவர் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிர்வாகவியல் படிப்புகளுக்கான வாரிய உறுப்பினர், குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தலுக்கான பண்டிட் மதன்மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் கீழ்  பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதலை வழங்குகின்ற வாரியத்தின் உறுப்பினர், மாணவர் கல்விச் சேவை அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகின்ற கல்வி மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையத்தின் கௌரவத் தலைவர், சேவைக்கான இளைஞர்கள் அமைப்பின் ஆலோசகர், மாநில ஆளுநர் வஜுபாய் வாலா தலைவராக இருக்கின்ற கர்நாடக செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவர் என்று பல பதவிகளையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதின் பின்னணியில் மத்திய பாஜக அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு இருப்பது தெரிகிறது. 

வரைவறிக்கை குழுவின் செயல்பாடுகளிலும் ஸ்ரீதருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம்  பல்வேறு தளங்களில் வெளிப்பட்டிருக்கின்றது. பெங்களூருவில் வசித்து வரும் வரைவறிக்கைக் குழு உறுப்பினரான ஸ்ரீதர் தலைமையிலே, வரைவறிக்கை தயாரிக்கும் குழு அன்றாடம் உரிய முறையில் செயல்படுவதற்கென்று தொழில்நுட்பச் செயலகம் பெங்களூருவிலேயே தனியாக உருவாக்கப்பட்டது.  இந்த செயலகத்திற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அலுவலகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடனான அலுவலகத்தை பல்கலைக்கழக மானியக் குழு ஏற்படுத்திக் கொடுத்தது.  கிடைக்கின்ற தரவுகளை ஒருங்கிணைப்பது, ஆய்வு செய்வது போன்ற இந்த செயலகத்தின் பணிகளைச் செய்வதற்கென்று ஒன்பது பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  வரைவறிக்கை குழுவிற்காக அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பச் செயலகம் 2017 ஆகஸ்ட் 1 அன்று பெங்களூருவில் திறந்து வைக்கப்பட்ட போது, புதிய தேசிய கல்விக் கொள்கை ஒட்டுமொத்த தேச முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துக்களை மிகவும் சுருக்கமானதாக முன்வைப்பதாக இருக்கும் என்று கூறிய கஸ்தூரிரங்கன், தக்சசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களின் மூலம் இந்த உலகிற்கு அறிவை வழங்கிய தேசமாக இருந்த இந்தியா இன்றைய காலகட்டத்தில் அந்தப் பெருமையை இழந்து நிற்கிறது என்றும், இந்திய உயர்கல்வியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் D.P.சிங், நவீன அறிவு, பழமையான பாரம்பரிய அறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரும் வகையிலே முழுமையான கல்விக்கான தேவை இப்போது இருப்பதாக குறிப்பிட்டுப் பேசினார். கல்வியுடன் தொடர்புடைய அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வரைவறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று வரையறைக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உறுதியளித்தார்.  

வரைவறிக்கை குழுவின் கூட்டங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 11 கூட்டங்களில் 8 கூட்டங்கள் பெங்களூருவிலேயே நடைபெற்றிருக்கின்றன. எஞ்சிய 3 கூட்டங்கள் மட்டுமே புதுடெல்லியில் நடைபெற்றிருக்கின்றன. வரைவறிக்கை குழு கூட்டங்கள் பெரும்பாலும் பெங்களூருவிலே நடைபெற்றிருப்பதற்கான காரணம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்ததாக இருக்கலாம் அல்லது கஸ்தூரிரங்கன் பதிவு செய்திருக்கின்ற பாராட்டுக்குள் ஒளிந்திருக்கலாம்.

இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ”கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை கவனமாக மதிப்பாய்வு செய்தல், கூட்டங்களில் கலந்து கொள்கிற தனிநபர்கள் / நிறுவனங்கள் / முகமைகளை அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகளோடு, விவாதங்களை நடத்துவதற்கான பல வழிகளையும் வழங்கி குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் பேராசிரியர் M.K.ஸ்ரீதருக்கு மிகச் சிறந்த பங்கு இருந்தது. மேலும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் தொடர்பாக பல முனைகளில் இருந்தும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து சரியான நேரத்தில் அவர் விழிப்பூட்டல்களை வழங்கி வந்தார். இந்தக் குழு வெவ்வேறு பகுதிகள் தொடர்பான பொருத்தமான உத்திகளை வடிவமைப்பதற்கு, கல்வித்துறையில் அவருக்கிருந்த பரந்த அறிவும் அனுபவமும் மிக முக்கியமான சொத்தாக இருந்தன” என்று ஸ்ரீதரைப் பாராட்டி கஸ்தூரிரங்கன் பதிவு செய்திருக்கிறார். 

ஸ்ரீதரைப் பொறுத்தவரை கஸ்தூரிரங்கன் வெறுமனே கல்விக் கொள்கை வரைவறிக்கை குழுவின் தலைவராக மட்டும் இருக்கவில்லை. இருவருக்குமிடையிலான தொடர்புகள் கர்நாடக மாநில அறிவாணையம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்தே மிக நெருக்கமாக இருந்தது நன்கு தெரிந்ததே. காங்கிரஸ் ஆட்சியில் அறிவாணையப் பணிகளில் ஸ்ரீதர் இணைக்கப்படவில்லை என்றாலும், கஸ்தூரிரங்கனிடம் தனக்கு இருந்த தொடர்பை ஸ்ரீதர் தொடர்ந்து நீட்டித்து வந்திருப்பது, 2016 டிசம்பர் 15 அன்று பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2016' நிகழ்ச்சியின் மூலம் தெரிய வருகிறது. ஸ்ரீதர் கலந்து கொண்ட அந்த கண்காட்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டவர் கஸ்தூரிரங்கன். ”பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியா 6 அல்லது 7ஆவது இடத்தில் நிற்கிறது. இதே அளவிலான முன்னேற்றத்தை நாம் பராமரித்து வந்தால் 2030க்குள் மூன்றாவது இடத்தை எட்டி விடுவோம். ஆயுர்வேதம், வானியல், யோகா மற்றும் கணிதம் தொடர்பாக உலகிற்குத் தேவையான மகத்தான பங்களிப்புகளை இந்தியா செய்துள்ளது” என்று இந்தியாவின் பாரம்பரியப் பெருமை குறித்து பேசி புளகாங்கிதம் அடைந்தவராக ஸ்ரீதருடன் அந்தக் கூட்டத்தில் காவித்துண்டு அணிந்து கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டிருந்தார். ஆன்மீக கண்காட்சியில் கஸ்தூரிரங்கனின் பங்கேற்பு அறிவியலாளர் என்ற அவரது முகத்திரையை அகற்றியிருந்தது. இந்த கண்காட்சி நடந்தது 2016 டிசம்பரில்… 2017 ஜுனில் கஸ்தூரிரங்கன் கல்விக்கொள்கை வரவறிக்கை குழுத் தலைவர், ஸ்ரீதர் அதில் முழுப் பொறுப்புடனான உறுப்பினர். இடையில் உள்ள ஆறு மாதங்களுக்குள்ளாக அனைத்தும் பேசி முடிக்கப்பட்டிருக்கலாம்.  

அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஸ்ரீதர் குறுகிய மனப்போக்கு கொண்ட மதமாக ஹிந்து மதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அது மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற மதமாகவே இருக்கிறது என்றார். மதமாற்றத்தின் மூலமாகப் பரவுவதாக இல்லாமல், மனவுறுதியால் பரவுவதாக ஹிந்து மதம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்துக்கும் வகையில், ”சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகமெங்கிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கவனம் எப்போதுமே பிரச்சனைகள் உருவாவதைத் தடுப்பதிலேயே இருந்திருக்கிறது. பிரச்சனைகள் வந்த பிறகு எதிர்வினையாற்றுபவர்களாக நாம் ஒருபோதும் இருந்ததில்லை" என்றும் ஸ்ரீதர் பேசினார். 

கல்விக் கொள்கை வரையறைக் குழு உறுப்பினராக இருந்த ஸ்ரீதர், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட மற்றெந்த உறுப்பினர்களையும் விட வரையறுக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கி அதீதமாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். ”மக்களின் கைகளில் அளிக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை குறித்து அவர்கள் கருத்து கூறலாமே தவிர, அதை விடுத்து கல்விக் கொள்கைகளை எதிர்ப்பது போன்ற பிற விஷயங்களில் ஈடுபடுவது தேவையற்றது” என்று ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்ற ஸ்ரீதர், கல்விக்கொள்கைகள் குறித்து எழுகின்ற விமர்சனங்களுக்கு ஊடகங்களின் வழியாக விளக்கம் அளிக்கின்ற வேலைகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேடிக்கையானதுதான்.

வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனே மும்மொழிக் கொள்கைகள் குறித்து எதிர்ப்பு எழுந்த போது, “மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் முதலாவதாக அந்த வரைவறிக்கையை குறிப்பாக மொழிகள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி படிக்க வேண்டும். ஏற்கனவே தேசியக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற மும்மொழிக் கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்து அமல்படுத்த வேண்டும் என்றே நாங்கள் கூறியிருக்கிறோம். ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களுக்கும் நாங்கள் அந்த மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். ஹிந்தியுடன் மற்றுமொரு இந்திய மொழியை அங்கிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம் எனும் வாய்ப்பு இருக்கும் போது, இதுபோன்று எழுகின்ற எந்த ஆட்சேபணைகளுக்கும் வரைவறிக்கை குழு பதில் சொல்லப் போவதில்லை. நாங்கள் ஏன் அவ்வாறு பதில் சொல்ல வேண்டும்? அனைத்து மதத் தலைவர்களையும் கலந்தாலோசித்த பிறகே மதரசாக்கள் குறித்த கருத்தை நாங்கள் கூறியிருக்கிறோம். மதரசாக்களில் படிக்கின்ற லட்சக்கணக்கான குழந்தைகள் தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே மதரசாக்களை மட்டும் குறிப்பிட்டு நாங்கள் எழுதியிருக்கிறோம். மத்திய அரசாங்கம் கொடுத்த பணியை வரைவறிக்கை குழு முடித்துக் கொடுத்திருக்கிறது. பணியை எங்களுக்கு கொடுத்த அரசாங்கம் அதனை உறுதியாக நிறைவேற்றும்” என்பதாக ஸ்ரீதர் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.  

வரைவறிக்கை வெளியிடப்பட்ட இந்த ஜுன் மாதத்தில் மட்டும், மங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் கனரா கல்லூரியில் ஏபிவிபி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, மாணவர் கல்விச் சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்,  2019 ஜூன் 20 அன்று கல்வி மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையத்துடன் இணைந்து ஜெயின் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்திய கூட்டம் என்று கர்நாடகத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, கல்விக் கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுகின்ற செயலை, வரையறைக் குழுவில் இருக்கின்ற வேறெவரும் முன்னெடுக்காத செயலை, ஸ்ரீதர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். கேள்வி எழுப்புகிறவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்லி விட்டு, சங் பரிவார அமைப்புகளின் துணையுடன் கர்நாடகம் முழுவதிலும் தனது ஆதரவுப் பிரச்சாரத்தை துவக்கி இந்தக் கருத்துக்களுக்கு பதில் அளித்து வருவது புரியாத புதிராகவே இருக்கின்றது.

தேசிய கல்விக் கொள்கைகள் குறித்த வரைவறிக்கை தயார் செய்வதற்காக ஸ்ரீதருடன் பெங்களூருவில் சந்தித்துக் கொண்ட கஸ்தூரிரங்கனுக்கு ஸ்ரீதர் இல்லாத கர்நாடகா அறிவாணையத் தலைவர் பதவி புளித்துப் போய் விட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. 2018 மே மாதம் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி, ஜூன் 7 அன்று பெங்களூருவில் கஸ்தூரிரங்கன் தலைமையில் நடைபெற்ற கர்நாடக அறிவாணையக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தன்னைத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்து விட்டு, வேறொரு பொருத்தமான தலைவரை நியமிக்குமாறு அப்போது முதலமைச்சர் குமாரசாமியிடம் கஸ்தூரிரங்கன் வேண்டிக் கொண்டார். கஸ்தூரிரங்கனின் அறிவாணையப் பணி முற்றிலும் நிறைவேறும் வரை தொடர்ந்து தலைமைப் பதவியில் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக குமாரசாமி அப்போது தெரிவித்திருந்தார்.  2018 ஜுன் மாதம் உடல் நிலை சரியில்லாமல் இருந்த கஸ்தூரிரங்கன், 2018 டிசம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஏழு மாதங்களாக தன் உடல்நலம் கருதாது தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்திருப்பதை அறிந்து கொள்ளும் போது, கஸ்தூரிரங்கனின் தேசபக்தி குறித்து நம்மால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.    

                                                                                                                                                                          (தொடரும்)

 

கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு

 

;